வேப்பிலை அடிக்கும் உலகமயமாக்கலும் சாமியாடும் நுகர்வு கலாச்சாரமும்

உலகமயமாக்கலும், திறந்தவெளி சந்தையும் மனிதர்களை அந்நியப்படுத்துவதில் தீராத வேட்கையோடு மனித உறவுகளையும் உணர்வுகளையும் வேட்டையாடிக்கொண்டிருக்கின்றன. இயற்கையிடம் இருந்து மனிதன் அந்நியப்பட்டு பல பத்தாண்டுகள் ஓடிவிட்டன. தங்கள் வாழ்வின் பெரும் பகுதியை இயற்கையோடு பங்கிட்டு அனுசரித்து வாழ்ந்த மனிதர்கள் இன்று இயற்க்கைக்கு பெரும் அச்சுறுத்தலாக எழுந்து நிற்கிறார்கள். தங்களுக்குள் அந்நியப்படுவதிலும் போட்டிப்போட்டுகொண்டிருக்கிறார்கள்.

உலக நாகிரீகம் ஒவ்வொன்றும் இயற்க்கையிலிருந்து தங்களுக்கான உணவையும், நல் வாழ்வுக்கான மருந்துகளையும் சூழல் அமைவிற்கு ஏற்ப பெற்றுக்கொண்டிருந்த உறவு அறுக்கப்பட்டு, ஒருசில பாகசுர கும்பெனிகளின் லாப பேராசையை தணிக்கும் விதமாக, Research & Development Lab-களிலிருந்து இன்றைய உலக மக்கள் தங்களுக்கான உணவையும், மருந்துகளையும் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

தங்களுக்கே உரித்தான மண் சார்ந்த வாழ்க்கைமுறை என்பது இன்றைக்கு உலகத்திலிருக்கும் எல்லா மனித நாகரீகத்திற்கும் சென்ற தலைமுறையின் பழங்கதையாகிவிட்டது. வளர்ச்சி என்கிற பெயரில் வந்த அறிவியல் கண்டுபிடிப்புகள், உலக நாகரீகங்களை அதனுடைய வேர்களிலிருந்து பிய்த்து எடுத்துவிட்டு, மனிதர்களை வேரற்ற சூனியத்தில் அலையவிட்டிருக்கிறது. மனித வாழ்வை மேம்படுத்த என்று தினம், தினம் அறிமுகமாகும் கண்டுபிடிப்புகள் கொல்லைப்புறம் வழியாக மனிதர்களை முடமாக்குகின்றன. மனித வாழ்க்கை உறவுகளை சார்ந்தில்லாமல், கண்டுபிடிப்புகளை சார்ந்து கட்டமைக்கப்படுகின்றது. இயற்கையில் மனித வாழ்க்கைக்கு நன்மை செய்துகொண்டிருந்த கிருமிகளும், பாக்டீரியாக்கலும் நுகர்வு கலாச்சாரத்தின் அதி பயங்கர வளர்ச்சியால், மனித சமுதாயத்திற்கே பெரும் ஆபத்தாக பரிணாம வளர்ச்சியடைந்துவிட்டன.

ஒரு காலத்தில் மனித தேவைக்கேற்ப ஆரோக்கியத்தையும், வளத்தையும் கொடுத்துக்கொண்டிருந்த கால் நடை வளர்ப்பு இன்று முதலாளித்துவத்தின் கைகளுக்கு மாறி வித விதமான உயிர் கொல்லி கிருமிகளின் வளர்ப்பு பண்ணையாக இருக்கின்றன. பன்றிக் காய்ச்சல், பறவை காய்ச்சல் இவைகள் நவீன நுகர்வு கலாச்சாரத்திற்கு தீணிபோடும் கால்நடை வளர்ப்பு பண்ணைகளின் அறிவியல் கண்டுபிடிப்புகள். McDonald's, Dominos, KFC போன்ற உலகளாவிய பாகசுர கும்பெனிகளுக்காக பல ஏக்கர் பண்ணைகளில் வளர்க்கப்படும் கால்நடைகள் ஒரே சமயத்தில் வெளியேற்றும் மீதேன் வாயு தன் பங்குக்கு புவி மண்டலத்தை சூடாக்கிக்கொண்டிருக்கிறது.

Finger Licking Good என்று பாகசுர கும்பெனிகளின் உடம்புக்கு ஆகாத piza, burger போன்ற வஸ்துகளை வயிற்றுக்குள் திணிக்கும் நம் கண்களுக்கு இத்தகைய Global Warming சமாச்சாரங்கள் கணகச்சிதமாக மறைக்கப்படுகிறது. நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக நமக்கு அறிமுகப்படுத்தப்படும் மின்னனுக் கருவிகள் இயற்க்கைக்கு ஆகாதவைகள் என்பதை, 'இனி உங்கள் வாழ்க்கை சுலபம்', என்கிற பாகசுர கும்பெனிகளின் விளம்பர வாசகங்கள் நமக்கு தெரியப்படுத்தாமல் மறைக்கின்றன்.

உலகமயமாக்கல், நுகர்வு கலாச்சாரத்தை கட்டமைத்து நுகர்வு ஒன்றே ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கை குறிக்கோள் என்று போதனை செய்கிறது. தனி மனித ஒழுக்க விழுமியங்களை கேலிக்கிறியதாக்கி, சுயநல விழுமியங்களை நாம் கைகொள்ள தூண்டுகிறது. சமுதாய நலன் என்பதுகூட சுயநலச் சாயலிலேயே இருக்கும்படி பார்த்துக்கொள்ளப்படுகிறது. கட்டுப்பாடான வாழ்க்கை என்பதுபோய் கட்டற்ற மகிழ்ச்சி என்பது புதியதலைமுறைக்கான வாழ்க்கைப் பாடமாக்கப்படுகிறது. தார்மீக பொறுப்புணர்வுகள் அனைத்தும் துடைத்தெறியப்பட்டு எல்லாம் தனக்கே என்பதுதான் இன்றைய பொதுமனசாட்சி.

ஒரு சில பாகசுர கும்பெனிகள் தங்களுடைய லாப வெறிக்கா தீர்மானிக்கும் உணவு, உடை, கலை, கலாச்சார, விளையாட்டு, மருத்துவ செயல்பாடுகள்தான் உலக மக்களின் வாழ்க்கை முறை. மண் சார்ந்த வாழ்க்கைமுறை இத்தகைய கும்பெனிகளின் லாப வேட்டைக்கு குறுக்கீடாக இருப்பதால், பல தேசத்து மக்களின் வாழ்க்கைமுறை நுகர்வுக்கு ஏற்றவகையில் மாற்றப்படுகிறது.

நமக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய ஊடகங்கள் ஏகபோகத்தின், நுகர்வின் 'பிரச்சார பீரங்கிகளாக' செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. உலக ஊடகங்களுக்கான முதலீடுகளே பாகாசுர கும்பெனிகளிடமிருந்துதான் பெறப்படுகின்றது.

Comments

Popular posts from this blog

கண்ணுறக்க நேர கதை சொல்லியின் கதை.

மந்திரம், மந்திரவாதி.....புத்தகத்தின் வெள்ளோட்ட சிறு துளி....

களப்பிரர் என்னும் கலி அரசர்