அடங்கா குதிரையும் அலெக்ஸாண்டரின் நிழலும்

Part 2


போரில் வெற்றி என்பது வாழ்வின் மிக உன்னத பெருமை என்பதே சிறுவனாக அலெக்ஸாண்டர் கற்றுக்கொண்ட முதல் பாடம். சிறு வயது முதலே போர் வெறி அவனுடைய தலைக்கு ஏற்றப்பட்டுவிட்டது. பிற்காலத்தில் அவன் நாடு பிடிக்கத் தொடங்கியது இந்த போர் வெறிக்குத் தீணிப்போட மட்டும் தான்.

பிலிப்புக்கும் அலெக்ஸாண்டருக்கும் இடையில் சில விசயங்களில் உரசல்கள் இருந்தாலும், பிலிப் அவனை ஒரு சக்தி மிக்க அரசனாக வளர்த்தெடுப்பதில் கவனமாக இருந்தான். பிலாட்டோவின் (Plato) மாணவரும், பிலிப்பின் தந்தையிடம் அரச வைத்தியராக இருந்தவரின் மகனுமான அரிஸ்டாடிலை(Aristotle) அலெக்ஸாண்டருக்கு ஆசிரியராக பிலிப் நியமித்தார். பிலிப், பெரிசியா மீது போர்தொடுக்க சமயம் பார்த்துக்கொண்டிருக்க, காலனும் பிலிப்பை முடிக்க காத்துக்கொண்டிருந்தான். கி.மு. 336-ல் பிலிப் தன்னுடைய மெய்காப்பாளர்களில் ஒருவனால் கொலை செய்யப்பட்டார். இந்த  மெய்காப்பாளர் பிலிப்பின் ஆண் காதலரும் கூட. அப்பொழுது பிலிப்பின் வயது 46.

அலெக்ஸாண்டரே தன் தந்தையை கொன்றதாக இந்திய வரலாற்று நூல்கள் சில சமயம் முனகுவதுண்டு. ஆனால் அது முற்றிலும் வரலாற்று பிழையான செய்தி. பிலிப் இறந்தவுடன்,  அலெக்ஸாண்டர் மிக சாதுரியமாக செயல்பட்டு தன்னை அரசனாக முடி சூட்டிக்கொண்டான். அப்பொழுது அவனுடைய வயது 20. அடுத்த இரண்டே வருடங்களில் (கி.மு. 334) அலெக்ஸாண்டர் ஆசியா மைனருக்குள் நுழைய விரும்பி எல்ஸ்போண்டை (Hellespont) கடந்தான். அவன் தன்னிடம் வைத்திருந்தது 6000 குதிரைப்படை வீரர்களும் 43000 காலாட் படைகளும். ஆசியா  மைனருக்குள் நுழைவதன் நோக்கம் பெருசியாவை (Persia) தாக்குவது. அப்பொழுது பெருசியா தன் ஆளுகையின் கீழ் துருக்கி தொடங்கி பாக்கிஸ்தான் வரை அடக்கி வைத்திருந்தது. பெருசிய அரசன் ஸிரக்சஸ் (Xerxes) கீரிசை சூரையாடியதற்கு பழிக்கு பழிதான் இந்த படையெடுப்பு என்று அலெக்ஸாண்டர் சப்பை கட்டினாலும் உண்மை ரத்தம் குடிக்கும் போர் வெறி. அவன் தன் போர் வெறியை தணித்துக்கொள்ள தன்னுடைய அபிமான குதிரை பூசிபாலஸ் (Bucephalas) மீது ஏறி உட்கார அவனுடைய படைகள் கொள்ளை பொருட்களுக்கு நாக்கில் சப்புக்கொட்டிக்கொண்டு புறப்பட்டார்கள்.


எல்ஸ்போண்ட் கடந்ததும் அலெக்ஸாண்டர் காலடி வைத்த முதல் நாடு டிராய் (Troy). இந்த டிராய் சிறுவயது முதலே அவனுடைய போர் பெருமை கற்பனைகளுக்கு தீணிப்போட்ட நாடு. இலியாதை போர் கலை பயிற்றுவிக்கும் புத்தகமாகவே அவன் பாவித்துக்கொண்டான். தன்னுடைய படையெடுப்பு முழுவதும் அவன் இலியாதை தன்னுடன் கொண்டு சென்றான். அவனுடைய தலையணைக்கு கீழ் நிச்சயம் ஒரு குறுவாளும் இலியாதும் இருக்கும். டிராயில் அக்கிலிஸின் நடுகல் கொண்ட கல்லறையை தேடிபிடித்து அவனும் அவனுடைய நெருங்கிய கூட்டாளியுமான இப்பாஸடியனும் (Hephastine) எண்ணெய் ஊற்றி கழுவி மரியாதை செய்தார்கள். அக்கிலிஸின் கல்லறைக்கு பலிகள் முதல்கொண்டு நடந்தது. தன்னை அக்கிலிஸாகவே கற்பனை செய்துகொண்டிருந்த அலெக்ஸாண்டருக்கு இது ஒரு முக்கியமான தருணம். இதுமட்டுமல்ல தன்னை அமூன்-ரே கடவுளாக கூட கற்பனை செய்துகொள்ளும் வாய்ப்பு அவனுக்கு காத்திருந்தது.

அலெக்ஸாண்டர் பெருசியர்களை முதன் முதலில் கிரேனியஸ் (Granicus) ஆற்றின் படுகையில் எதிர்கொண்டான். இது தற்பொழுது (Kocabas) என்று அழைக்கப்படுகிறது. டிராயிக்கு வடகிழக்கில் அமைந்துள்ளது. அது கி.மு. 334, மே மாதம். மேட்டு நிலம் பின்னால் பாதுகாப்பு இருக்க பெருசியர்கள் சகல போர் கருவி சம்பத்துகளுடன் வரிசைகட்டி நின்றிருந்தார்கள். குதிரைபடை 15000 காலாட்படை 16000. புவியியல் ரீதியாக பெருசியர்கள் பாதுகாப்பான இடத்திலிருக்க, அலெக்ஸாண்டரும் அவனது படைகளும் தாழ் நிலத்திலிருந்தார்கள். பெருசியர்களை தாக்க வேண்டுமென்றால் சக்தியை விரயம் செய்து மேட்டு நிலத்தில் ஏறியாக வேண்டும். பெரும் பகுதி சக்தியை இழந்த பிறகு எதிரிகளை சந்திப்பதும் தனக்குதானே கவட்டையில் கத்தியை சொருகிக்கொள்வதும் ஒன்று.

இது குறித்து தளபதி பார்மீனியோ (Parmenio) அலெக்ஸாண்டரை எச்சரிக்கை செய்து தாக்குதலை தாமதப்படுத்த கேட்டுக்கொண்டார். அலெக்ஸாண்டர் அந்த எச்சரிக்கையை தன்னுடைய குதிரைக்கு வாயில் அசைபோட கொடுத்துவிட்டு, மேட்டு நிலத்தை அலட்சியப்படுத்தி ஆற்றைக் கடந்து பெருசியர்களை நேருக்கு நேர் சந்தித்தான். பெருசியர்களின் முதல் தோல்வியும், அலெக்ஸாண்டரின் முதல் வெற்றியும் அரங்கேறியது. பெருசியர்கள் சுற்றி வளைக்கப்பட்டார்கள்.

Comments

Post a Comment

Popular posts from this blog

கண்ணுறக்க நேர கதை சொல்லியின் கதை.

மந்திரம், மந்திரவாதி.....புத்தகத்தின் வெள்ளோட்ட சிறு துளி....

களப்பிரர் என்னும் கலி அரசர்