அடங்கா குதிரையும் அலெக்ஸாண்டரின் நிழலும்


Part 1

இந்திய திருநாட்டில் வரலாறு என்பது சமையல் கலைப் போல் வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது. வரலாறு என்ற சட்டியை பொதுவெளி என்ற அடுப்பில் வைத்து தங்களின் ருசிக்கேற்ப மிகை உண்மைகளை மசாலாவாக கலந்து பொங்கி இறக்குவதே நடைமுறையில் வரலாற்று ஆய்வாக முன்வைக்கப்படுகிறது. வரலாற்றுக்கு பன்முகத் தன்மை கொண்ட விமர்சனப் பூர்வமான முகம் உண்டு. பலவீனங்களை, துரோகங்களை, வெற்றிகளை, தோல்விகளை, பச்சோந்திதனங்களை, பேராசைகளை, சுயநலன்களை இப்படி வாழ்வின் அனைத்து அம்சங்களையும் உள்ளது உள்ளபடி எடுத்துவைத்து வாசகர்களின் நியாயமான வாழ்வியல் விமர்சனத்தை தூண்டுவதே நடுநிலையான வரலாற்றின் கடமையாக இருக்க முடியும். இருக்கவேண்டும்.

ஆனால் நம்மை பிடித்த கேடு, இந்தியாவில் வரலாறு பண்முகத் தன்மை அற்றது. இந்தியர்களைப் பொறுத்தவரை வரலாறுக்கு ஓரு முகத் தன்மை மட்டுமே உண்டு. அது மட்டுமே அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் எழுதப்படும் தனிமனித, சமூக வரலாறுகள் அனைத்தும் இந்த ஒரு முகத் தன்மையின் காரணமாக உள்ளீடு இல்லாத உலுத்தப்போன மூங்கில் போல இருக்கின்றது. நாயக வழிபாடே இந்திய வரலாறுகளின் உயிர் நாடி. இந்தியர்களைப் பொறுத்தமட்டில் வரலாற்று புருசர்கள் கேள்விகளுக்கு அப்பாற்பட்டவர்கள். நடுநிலை விமர்சனம் என்பதற்கு இங்கு இடமே கிடையாது. ஆகாதவர்களை பொய் சேற்றில் போட்டு புரட்டியெடுப்பதும், பிடித்தவர்களை செயற்கையாக ஊதி பெருக்குவதும் இங்கு வரலாற்று கடமையாக முன்னெடுக்கப்படுகிறது.

இதற்கு அலெக்ஸாண்டரும் விதிவிலக்கு அல்ல. நம்மூர் சுயமுன்னேற்ற கட்டுரைகள் பத்தில், நிச்சயம் ஒன்றில் அலெக்ஸாண்டர் இடம் பிடித்திருப்பார். விடா முயற்சி, தன்னம்பிக்கை, துணிச்சல், ஆளுமை குணம் ஆகியவற்றின் குறியீடாக அலெக்ஸாண்டரை கட்டியெழுப்பியிருப்பதை இத்தகைய கட்டுரைகளில் காணலாம். இந்திய கல்வி இயந்திரமும் பொய்யான, சாரம் கட்டப்பட்ட அலெக்ஸாண்டரையே மாணவர்களுக்கு திரும்ப திரும்ப பாடம் எடுத்துக்கொண்டிருக்கிறது. இந்த கட்டுரையில் நான் முடிந்த அளவு நடுநிலையை பின்பற்றி அலெக்ஸாண்டரை சுருக்கமாக முன்வைக்க முயற்ச்சித்திருக்கிறேன்.

அலெக்ஸாண்டர் மிகவும் குள்ளத் தோற்ற முடையவன். ஐந்து அடிக்கும் குறைவுதான். ஆனால் கட்டுமஸ்தான தேக கட்டு கொண்டவன். அவன் எப்பொழுதும் தன் தலையை சற்றே இடப் பக்கமாக நகர்த்தி பிடித்தபடிதான் இருப்பது வழக்கம். இது மிக அரிதான பார்வைக் கோளாறினால் ஏற்பட்ட பழக்கம் என்று கணிக்கப்படுகிறது. இந்த வகையான பார்வை குறைபாட்டிற்கு Brown's Syndrome என்று பெயர். தன் வாழ்நாளில் மூன்றே நபர்களுக்குதான் தன் ஓவியத்தை வரைவதற்கு அலெக்ஸாண்டர் அனுமதி கொடுத்திருந்தான். Lysippos இவர் சிற்பி, Apelles இவர் புகழ்பெற்ற ஓவியர், Pyrgoteles இவர் பொற்கொல்லர். ஆனால் இன்றைக்கு அலெக்ஸாண்டர் என்று அடையாளம் காணப்பட்ட ஓரே ஒரு ஓவியம் போம்பி (Pomeii) நகரில் ஒரு செல்வந்தர் வீட்டு சுவர் ஓவியத்திலிருந்தே பெறப்பட்டது.


அலெக்ஸாண்டர், தன் தாயின் குணங்களை பெரும்பான்மையாக பெற்றவன். அவளின் பெயர் ஓலிம்பியஸ் (Olympias). இவர் பெருமை மிகுந்த பிடிவாதம் குணம் உடையவர். கருணை என்கிற பேச்சுக்கே இடம் கிடையாது. உதாரணம், பிலிப்(Philip) அலெக்ஸாண்டரின் தந்தை இறந்தவுடன் பிலிப்பின் மனைவிகளில் வயதில் குறைந்த ஒருத்தியை ஓலிம்பியஸ் உயிருடன் கொளுத்திவிட்டிருக்கிறாள். டையோனிஸசஸ்(Dionysus) பக்தையான அவள், டையோனிஸசஸை வழிபடும் முறைகளில் ஓன்றாக ஏகப்பட்ட நச்சுப் பாம்புகளை தன்னுடைய அரண்மனையில் ஏகாந்தமாக உலவ விட்டிருக்கிறாள். இந்த செய்கை பிலிப்பையே கூட சில சமயங்களில் பதற வைத்திருக்கிறது. அலெக்ஸாண்டருக்குள், ஓமர் (Homer) எழுதிய இலியத் (Illayd) காவியத்தின் கதாநாயகன் அக்கிலிஸ (Achelles) வழிவந்தவன் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கையை ஏற்படுத்தியது வேறுயாரும் அல்ல ஓலிம்பியாஸேதான்.

வடக்கு கிரிஸில், பெல்லா என்கிற மாசிடோனிய தலைநகரில் July 20, கி.மு. 356-ல் அலெக்ஸாண்டர் பிறந்தான். இங்கே தான் தன்னுடைய வாழ்வின் முதல் பதினொரு வருடங்களை அவன் கழித்தது. அலெக்ஸாண்டர் குழந்தையாக புரண்டு தவழ்ந்து, பிள்ளையாக எழுந்து நடந்து, சிறுவனாக ஓடி ஆடி விளையாடியதெல்லாம் போர் வீரர்களுக்கு மத்தியிலும், வேட்டைகாரர்களுக்கு இடையிலும், காட்டுத்தனமாக குடித்துவிட்டு தறிகெட்டு குதிரை ஓட்டுபவர்களின் கால்களுக்கு நடுவிலும் தான்.

Comments

Popular posts from this blog

கண்ணுறக்க நேர கதை சொல்லியின் கதை.

மந்திரம், மந்திரவாதி.....புத்தகத்தின் வெள்ளோட்ட சிறு துளி....

களப்பிரர் என்னும் கலி அரசர்