அடங்கா குதிரையும் அலெக்ஸாண்டரின் நிழலும்

Part 3


இங்குதான் அலெக்ஸாண்டரின் போர் வியூகத்தையும், தந்திரத்தையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. அலெக்ஸாண்டரின் படை வீரர்கள் வைத்திருந்தது 16 அடி குத்தீட்டி. இது சராசரி குத்தீட்டியைவிட 9 அடி நீண்டது. இது மேட்டு நிலத்தில் கடக்க வேண்டிய பதினாறு அடியை குறைத்ததோடு மட்டுமல்லாமல் மேட்டு நிலத்திலிருந்த எதிரிகளை சுலபமாக கையாளவதற்கும் உதவியாக அமைந்துவிட்டது. பார்மீனியோ தவறவிட்ட இந்த சிறு போர் நுணுக்கத்தை அலெக்ஸாண்டர் கனகச்சிதமாக தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டான். கல்யாண வீட்டில் தான் தான் மாப்பிள்ளை, இழவு வீட்டில் தான் தான் பிணம் என்கிற அலெக்ஸாண்டரின் மனோபாவம் இந்தப் போரில் வெட்ட வெளிச்சமானது. தன்னுடைய போர் வெற்றிகளை யாரோடும் பங்கிட்டுக்கொள்ள அலெக்ஸாண்டர் விரும்பியதே கிடையாது. போர் வெறியிலும், போர் வெற்றியிலும் தனி மனித அதாவது தன்னுடைய ஏகபோகம் என்பதுதான் அவனுடைய சித்தாந்தம். அதே வேலையில் கடை நிலை போர் வீரனையும் அலெக்ஸாண்டர் மதிக்கத் தவறியது கிடையாது. போரில் காயம்பட்ட வீரர்களை தவறாமல் சென்று பார்த்துவருவதும், அவர்கள் எப்படி காயமடைந்தார்கள் என்று அவர்களை விளக்கச்  சொல்லி பொறுமையாக கேட்பதிலும் அவன் குறைவைத்ததே கிடையாது என்று கி.பி. இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த கிரேக்க வரலாற்று ஆசிரியர் ஆரியன்(Arrian) குறிப்பிடுகிறார். தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு வீரரின் நலனிலும் அலெக்ஸாண்டர் அக்கறை எடுத்துக்கொண்டதாக தெரிகிறது.
இந்த போருக்கு பிறகு கிரேக்க பட்டணங்கள் ஒவ்வொன்றாக பெரிசிய மேலாண்மையிலிருந்து விடுபட்டன. Ephesus, Magnesia, Priene  இப்படி பல ஊர்கள். ஆனால் ஒரே ஒரு நிபந்தனை இவைகள் இனி அலெக்ஸாண்டருக்கு கட்டுபட்டு நடக்கவேண்டும். நடந்தன.

அவனுடைய அடுத்த இலக்கு டேரியஸ் (Darius) III. பெரிசியாவின் பேரரசன். கார்டியமை (Gardium) கடந்து, மத்தியத் தரைகடலின் கிழக்கு கரையில் பாய்ந்து, இறுதியில் Issus-என்கிற இடத்தில் அலெக்ஸாண்டர், டேரியஸை எதிர்கொண்டான். Issus என்பது தற்போதைய துருக்கி-சிரியன் எல்லையில் இருக்கிறது. அலெக்ஸாண்டரிடம் ஏறக்குறைய 50000 வீரர்கள். டேரியஸிடம் 70000 வீரர்கள். பெரிசியாவின் இந்தப் பெரும் படையை பார்த்து நியாயமாக அலெக்ஸாண்டர் பதறியிருக்கவேண்டும். ஆனால் நடந்தது வேறு. பதறியது டேரியஸ். 70000 வீரர்களையும், வெற்றிலையை மடக்கி வாயில் போட்டுக்கொள்வது போல அலெக்ஸாண்டரின் வீரர்கள் மடக்கி மடக்கி வெட்டி சாய்த்தார்கள். கிட்டதட்ட அங்கு ஒரு குட்டி இனப் படுகொலையே நடந்துமுடிந்தது. அந்தப் பெரும் ரத்தக் களறியிலும் அலெக்ஸாண்டரின் குறி டேரியஸ் மீதே இருந்தது. தன்னுடைய வீரர்களில் யாராவது ஒருவன் டேரியஸை கொன்றுவிடுவதற்கு முன் தானே டேரியஸை கொல்ல வேண்டும் என்று அலெக்ஸாண்டர் டேரியஸை நோக்கி முன்னேற, டேரியஸ் போர் களத்திலிருந்து போட்டது போட்டபடி தலைதெறிக்கத் தப்பித்து ஓட்டமெடுத்துவிட்டான். இது நடந்தது கி.மு. 333-ல். பெரிசியர்களின் இரண்டாவது தோல்வி. அதுவரை அலெக்ஸாண்டரை அதிர்ஷ்ட காற்றில் மேலேழுந்த தூசி என்று நினைத்துக்கொண்டிருந்த பெரிசியர்கள், முதன்முதலில் துடை நடுங்கத் தொடங்கினார்கள். டேரியஸ் விட்டு ஓடியது வீரத்தை மட்டுமல்ல, தன்னுடைய மகள்களையும், அரசிகளையும் திரண்ட சொத்துகளையும் தான். டேரியஸின் சொத்துகளை திகட்ட திகட்ட கொள்ளையடித்த மாசிடோனிய வீரர்கள் அவனுடைய அரசிகளுக்கும், மகள்களுக்கும், அலெக்ஸாண்டரின் ஆணையின் பேரில் எந்த தீங்கும் செய்யாமல் விட்டுவிட்டார்கள்.

டையர் (Tyre) இது அலெக்ஸாண்டர் அடுத்து ரத்தக் குளியல் நடத்திய நகரம். இந்த நகரத்தை முற்றுகையிட்டு பிடிக்க அவனுக்கு ஏழு மாதங்கள் பிடித்தன. இறுதியில் அந்த நகர மக்களுக்கு ஏழரை சனியன் பிடித்தது. 7000 பேர் முதல் கட்டமாக வெட்டி சாய்க்கப்பட்டார்கள். அனைவரும் குடிமக்கள் போர் வீரர்கள் அல்ல. 2000 இளைஞர்கள் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார்கள். 30000 பேர் அடிமைகளாக விற்கப்பட்டார்கள். இவர்கள் செய்த ஒரே குற்றம் அலெக்ஸாண்டருக்கு அடிபணிய மறுத்தது. இந்த ஓரு நகரத்தில் மட்டும் அலெக்ஸாண்டரின் தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும், ஆளுமை திறனும் 39000 மக்களின் வாழ்வை காவு வாங்கியது. இது நடந்தபோது அவனுடைய வயது 23. அடுத்து அலெக்ஸாண்டர் வந்தடைந்தது எகிப்து. பல ஆயிரம் ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட எகிப்தியர்கள் எதற்கு வம்பு என்று வாய்பேசாமல், அலெக்ஸாண்டருக்கு ஆரவார வரவேற்பு கொடுத்தார்கள். அலெக்ஸாண்டரே இதை எதிர்பார்க்கவில்லை. ஆப்பை வலிய சென்று வாங்கிக்கொள்ள விரும்பாத எகிப்தியர்கள், தலைநகர் மெம்பிஸில்(Memphis) அலெக்ஸாண்டரை பாரோ (Pharaoh) என்று பட்டம் சூட்டிவிட்டார்கள். எகிப்திய பாரம்பரிய வழக்கப்படி பாரோ என்றால் எகிப்தியர்களின் முதன்மை கடவுள் அமூன்-ரே (Amon-Re)-வின் மகன் என்று பொருள். கி.மு. 331-ன் தொடக்கத்தில் அலெக்ஸாண்டர், பாலைவனச் சோலையான சிவா (Siwa) என்ற இடத்தில் அமைந்திருந்த zeus-Amun கோவிலுக்கு புனித யாத்திரை மேற்கொண்டான். இந்த Siwa நகரம் மெம்பிஸிலிருந்து மேற்கே 300 மைல்கள் தொலைவில் பாலைவனத்தில் அமைந்திருக்கிறது. அவன் இந்த Amun கோவிலுக்கு வந்ததன் காரணம் நற்குறி கேட்க.

'இப்பொழுது, அமூன் கடவுளின் நேரடி வம்சாவளியை சேர்ந்தவன் என்று அலெக்ஸாண்டர் நினைத்து நம்பினான்' இது வரலாற்று ஆசிரியர் ஆரியன் கூற்று. நாம் முன்பே அலெக்ஸாண்டர் அக்கிலிஸின் நேரடி வாரிசு என்று அலெக்ஸாண்டர் தன்னை நினைத்துக்கொண்டதைப் பற்றி பார்த்திருக்கிறோம். எகிப்தில் அலெக்ஸாண்டரியா (Alexandria) நகரை அவனே வடிவமைத்து கட்டியெழுப்பினான். 2330 வருடங்கள் கழித்து இன்றும் அந்நகரம் அவன் பெயர் சொல்லிக்கொண்டிருக்கிறது. தப்பியோடி டேரியஸ் தலையை சொறிந்துகொண்டு சும்மாய் சுற்றாமல் இரண்டு முறை அலெக்ஸாண்டருக்கு சமாதான கடிதம் அனுப்பிவைத்தான். போர் நிறுத்தத்தை முன்னிட்டு டேரியஸ் முன்வைத்தது, பறந்து விரிந்த நிலப்பகுதியும், தன்னுடைய மகள்களில் ஒருத்தியை மணமகளாகவும் அலெக்ஸாண்டருக்கு தரப்படும் என்ற கோரிக்கைகளை. அலெக்ஸாண்டரின் ரத்த வெறியும் போர் வெறியும் இந்த கோரிக்கையை ஏற்கவில்லை. வேறு வழியற்ற டேரியஸ் மீண்டும் ஒரு பெரிய போருக்கு தயாரானான். துருக்கி தொடங்கி பாக்கிஸ்தான் முடிய இருந்த தன்னுடைய பேரரசின் மூலை முடுக்கெல்லாம் புகுந்து தேடி பெரும் படையை உருவாக்கியிருந்தான். வருடம் கி.மு. 331. இடம் Gaugamela. இன்றைய Baghdad-நகருக்கு வடக்கில் ஒரு பகுதி.

டேரியஸ் படையில் Bactrian, Dahalen, Arachosian, Parthian, Indian, Babylonian படைவீரர்கள் குவிந்திருந்தார்கள். பெரிசியர்களின் குதிரைபடை மட்டுமே 34000. அலெக்ஸாண்டரின் மொத்தப் படையே 49000 தான். பெரிசியர்களின் காலாட் படையையும் கணக்கில் எடுத்துக்கொண்டால்அலெக்ஸாண்டரின் படையில் கோவணம் கூட மிஞ்சாது என்கிற நிலை. வாழ்வா சாவா. அலெக்ஸாண்டரா டேரியஸா. சற்று மேடான இடத்திலிருந்து டேரியஸின் படை அணிவகுப்பை பார்த்த அலெக்ஸாண்டர் சர்வ சாதாரணமாக கீழே இறங்கி வந்து தன்னுடைய வீரர்களை வயிறு முட்ட குடித்து ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு படுக்கைக்கு சென்றுவிட்டான். விடிந்து அலெக்ஸாண்டரின் தளபதிகள் போர் கோலம் தரித்து அரக்கப்பரக்க அலெக்ஸாண்டரைப் பார்க்க வந்தால் அதிர்ச்சி. அலெக்ஸாண்டர் மல்லாக்கப் படுத்து குறட்டை விட்டுக் கொண்டிருந்தான்.


Comments

Popular posts from this blog

கண்ணுறக்க நேர கதை சொல்லியின் கதை.

மந்திரம், மந்திரவாதி.....புத்தகத்தின் வெள்ளோட்ட சிறு துளி....

களப்பிரர் என்னும் கலி அரசர்