தென்னமெரிக்க தமிழர்கள்.....புத்தகத்தின் சிறு துளி....



"பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அதாவது கி.பி. 900-களின் தொடக்கத்தில் டிக்கால் மயான சரிவை நோக்கி செல்லத் தொடங்கியது. இதற்கு காரணம் மற்ற மாயன் பேரரசுகளின் அல்லது மெக்சிக்க பேரரசுகளின் படையெடுப்புக்களோ அல்ல. கொஞ்சம் கொஞ்சமாக டிக்கால் வாசிகள் நகரத்தை விட்டு வெளியேறத் தொடங்கிவிட்டார்கள். வேறு வார்தைகளில் சொல்வது என்றால் நகரம் கைவிடப்பட்டுவிட்டது. இது டிக்கால் நகரத்திற்கு மாத்திரம் நேர்ந்த கதியல்ல அதன் சம காலத்தில் உச்சத்தில் இருந்த வடக்கு மற்றும் தெற்கு மாயன் பேரரசுகளுக்கும் நேர்ந்த கதி. மக்கள் கூட்டம் கூட்டமாக நகரங்களை விட்டு வெளியேறிவிட்டார்கள்.

இதற்கான காரணத்தை விளக்க கூடிய எத்தகைய வரலாற்று ஆதாரங்களும் இதுவரை நமக்கு கிடைக்கவில்லை. அளவுக்கு அதிகமான சனத்தொகை பெருக்கமும், அதற்கு ஈடுகொடுக்க கூடிய அளவிற்கான உணவு உற்பத்தி இன்மையும், பருவ நிலை மாற்றங்களும், மக்கள் மாயன் நகரங்களை கைவிடவைத்திருக்கவேண்டும் என்பது இன்றைய ஆய்வாளர்களின் அனுமானம். இந்த காரணங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியவைகள்தான் என்றாலும் முழுமையாக இவைகள் மாத்திரமே காரணங்களாக இருக்க முடியாது என்பது மற்றொரு பிரிவு ஆய்வாளர்களின் கருத்து.

மாயன் நாகரீக கட்டிடக் கலையின் உச்சம் டிக்கால் நகரிலிருந்தே வருகிறது. மற்ற மூன்று நாகரீகங்களின் (தமிழ், எகிப்து, மெசப்பட்டோமியா) கட்டிடக் கலைக்கு எந்த வகையிலும் குறைவில்லாதது மாயன் கட்டிடக் கலை. வழிபாடு மற்றும் அரசு விழா கொண்டாட்டங்களுக்கு, நரபலி சடங்கிற்கு மற்றும் பேரரசர்களின் வசிப்பிடத்திற்கு என்று மூன்று தனித் தனி பயன்பாடுகளுக்கு டிக்காலில் கல் கட்டிடங்கள் எழுப்பப்பட்டிருக்கின்றன. மீசோ அமெரிக்க நாகரீகம் முழுவதிலும் இந்த மூன்று பயன்பாடுகளுக்காகவே பிரமிடுகள் கட்டப்பட்டிருக்கின்றன. வழிபாட்டிற்கான இடம் என்பதையும் தாண்டி பிரமிடுகள் பேரரசர்களின் உடலை அடக்கம் செய்வதற்கான இடமாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

பொதுவாக மீசோ அமெரிக்க பிரமிடுகள் தாலுத்-டேப்லிரோ (Talud-Tablero style) பாணியில் கட்டப்பட்டவைகள். பேரரசுகளின் கடவுள் நம்பிக்கைகளுக்கு ஏற்ப இதன் கட்டுமான அமைப்பும், விரிவும் மாறுபடும். டிக்கால் நகரின் நார்த் அக்ரோபோலிஸ் (North Acropolis) பிரமிட் வழிபாட்டு தளங்களும், முன்டோ பெர்டிடோ (Mundo Perdido) பிரமிட் வளாகமும் டிக்கால் பேரரசு காலம் முழுவதும் திருத்தி கட்டப்பட்டு தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்டவைகள். மாயன் பிரமிடுகள் (மீசோ அமெரிக்க நாகரீகம் பிரமிடுகள் முழுவதும்) இரண்டு அமைப்புக்களை கொண்டது.

அடித்தளம் மற்றும் கோயில். அடித்தளம் தாலுத்-டேப்லிரோ பாணியில் நால் பக்கமும் மேல் நோக்கி உயர்ந்து செல்லும் அதே சமயத்தில் சாய் கோணத்திலும் அமைக்கப்படும். மேலும் அடித்தளம் ஒன்பது அடுக்குக்கள் கொண்டதாக இருக்கும். அடித்தளத்தின் உயரமும், அகலமும் பிரம்மாண்டமானதாக வடிவமைக்கப்பட்டாலும் அதன் ஒன்பது அடுக்குகளில் எத்தகைய மாற்றமும் இருக்காது. அடித்தளத்தின் உச்சியிலிருக்கும் கோயில் நகரின் முக்கிய கடவுளின் உறைவிடமாக இருக்கும். அடித்தளத்தின் உச்சியில் கோயிலுக்கு முன்பாக நரபலி கொடுப்பதற்கான மேடை ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கும். அதேப் போல ஒவ்வொரு கா’அடுன் (இருபது ஆண்டுகளின் முடிவு) விழாவின் போதும் பேரரசர் உடல் உறுப்பை கிழித்து சிறிதாக இரத்தம் வெளியேற்றும் சடங்கு செய்வதற்கான மேடையும் இருக்கும்...."


Comments

Popular posts from this blog

கண்ணுறக்க நேர கதை சொல்லியின் கதை.

மந்திரம், மந்திரவாதி.....புத்தகத்தின் வெள்ளோட்ட சிறு துளி....

களப்பிரர் என்னும் கலி அரசர்