அடங்கா குதிரையும் அலெக்ஸாண்டரின் நிழலும்

Part 6

இங்கு நாம் கவனிக்க வேண்டிய ஒன்று அலெக்ஸாண்டர் தன்னுடைய தளபதிகளுடன் போர் திட்டம் குறித்து கலந்தாலோசிக்கவேயில்லை. அதற்கான சந்தர்பத்தைக்கூட அவன் விட்டுவைத்ததுகிடையாது. போரும் நானே, எதிரியும் நானே, போர் களமும் நானே. நானே, நானே,.... ஆற்றில் பெரு வெள்ளம் ஓடிக்கொண்டிருக்க அலெக்ஸாண்டர் தன்னுடைய வீரர்களுக்கு கொடுத்த கட்டளை, ஆற்றை பாதி தூரம் கடந்துவிட்டு, முடியாத என்பதுபோல் திரும்பிவிட வேண்டும்.

வீரர்களும் அலெக்ஸாண்டரின் சொல் தப்பவில்லை. விடிந்ததும் போருக்கான சகல வஸ்துகளையும் சுமந்துகொண்டு ஆற்றை பாதி தூரம் கடப்பது பிறகு திரும்பிவிடுவது. இப்படியே இரண்டு மூன்று நாட்கள் ஓடியது. எதிர்கரையிலிருந்த போரஸக்கு சற்றே சலிப்பு தட்ட தனது படையணிக்கு ஏற்படுத்திவைத்திருந்த இரவு நேர ரோந்துக் காவலை பின் வாங்கிக்கொண்டான். மிக மிக சரியாக அலெக்ஸாண்டரும் இந்த நடவடிக்கையைத்தான் போரஸிடமிருந்து எதிர்பார்த்தான். போரஸ் பழத்தை பாலில் நழுவ விட்டான்.

அலெக்ஸாண்டரின் படைகள் ஆற்றில் ஆட்டம் காட்டிக்கொண்டிருக்க அவனுடைய உளவுப் பிரிவு Jhelum நதியின் மிக குறுகலான கடப்பதற்கு எளிதான பாதை ஒன்றை, அவர்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து 17 மைல்களுக்கு அப்பால் கண்டு பிடித்தார்கள். அலெக்ஸாண்டர் பொறுத்திருந்தான். இரவு மழை இடி மின்னலுடன் வெளுத்து வாங்க, சத்திமில்லாமல் ஆற்றைக் கடந்த அலெக்ஸாண்டர் விடியல் பொழுதில் போரஸின் படையணிக்கு முன்னால் இருந்தான்.

என்ன நடந்தது என்பதை போரஸ் விளங்கிகொள்வதற்கு முன்பே போர் தொடங்கிவிட்டது. தொடங்கிவிட்டது என்பதைவிட முடிந்தேவிட்டது என்பது பொறுந்தும். மாசிடோனியர்களை கலங்கடித்துவிடும் என்று நம்ப பட்ட யானைப் படை வாலை சுருட்டிக்கொண்டு அலெக்ஸாண்டரிடம் வாழைப் பழம் வாங்கி வாய்க்குள் போட்டுக்கொண்டு சலாம் அடித்தது. அலெக்ஸாண்டரின் போர் சரித்திரத்திலேயே அவனிடம் பிடிபட்ட ஒரு போர் கைதி இப்படி பதில் சொல்லியது முதல் முறை.

இந்த பதிலை அலெக்ஸாண்டரேக் கூட எதிர்பார்த்திருக்கமாட்டான். சற்றும் தயங்காமல், பிசிரில்லாமல் அந்த பதில் தெறித்து வந்தது. கூடியிருந்த படை வீரர்கள் பதில் சொன்னவனுக்கு வாயில சைத்தான் என்று முடிவே செய்துவிட்டார்கள். கேள்வி கேட்டதுஅலெக்ஸாண்டர். பதில் சொன்னது போர் கைதியாக பிடிபட்ட போரஸ். கேள்வி, 'உன்னை எப்படி நடத்துவது?'. பதில், 'ஓரு பேரரசனை நடத்துவதுப் போல்'. போரஸிடமே பேரரசுல திரும்பக் கொடுக்கப்பட்டது. ஆனால் ஒரு நிபந்தனை போரஸ் அலெக்ஸாண்டருக்கு அடி பணிந்து இருக்கவேண்டும்.

Jhelum நதியிலிருந்து மேலும் கிழக்காக நகர்ந்த அலெக்ஸாண்டர் அவன் சிறுவயது முதல் தன் உடன் பிறப்புப் போல் நேசித்து பழகி வந்த குதிரை பூசிபாலஸை(Bucephalaus) இழந்தான். தன்னுடைய நேசத்திற்கு உரிய குதிரையை புதைத்த இடத்தில் Bucephala என்கிற நகரத்தை உருவாக்கினான். சிந்து சமவெளிப் பகுதியில் பருவகால மழை என்பது பேய் மழையாகத்தான் இருக்கும். இப்பொழுது அலெக்ஸாண்டர் வந்து சேர்ந்தது Beas நதிகரை.

உலகின் முடிவு எல்லை இந்தா வந்துவிடும், அந்தா வந்துவிடும் என்று கற்பனை செய்துகொண்டு நடந்த அலெக்ஸாண்டருக்கு அதிர்ச்சிதான் மிச்சம். அவன் முன்பு, கீழ் வானம் வரை பறந்து விரிந்த கங்கை சமவெளி. இடைவிடாத பேய் மழை அலெக்ஸாண்டரின் படை வீரர்களை படுத்தியெடுத்தது. சகதி ஒருபுறம், யானைகளோடு போர் புரிந்த துர்கனவு ஒருபுறம் என்று படை வீரர்கள் ஒட்டுமொத்தமாக ஆடிப்போய்விட்டார்கள்.

வீரர்களின் மன நிலையை புரிந்துக் கொள்ளாத அலெக்ஸாண்டர் மேலும், மேலும் என்கிற தன்னுடைய பழைய பல்லவியையே திரும்ப பாட, படை வீரர்கள் வெறுத்துப்போய் அவன் கட்டளைகளை நிராகரிக்க தொடங்கிவிட்டார்கள். நாடு திரும்புவதைத் தவிர இனி செய்வதற்கு வேறு ஒன்றும் இல்லை என்று படை வீரர்கள் ஒட்டுமொத்த குரலில் கூச்சல் போட்டு விட்டு, போட்டது போட்டபடி அப்படியே சேற்றில் உட்கார்ந்துவிட்டார்கள்.

அலெக்ஸாண்டரின் எந்தவிதமான ஆளுமை உரையும் அவர்களிடம் எழுச்சியையும், உற்சாகத்தையும் தூண்டி எழுப்பவில்லை. போர் வெறி உற்சாகத்துடன் இருந்த ஒரே நபர் அலெக்ஸாண்டர் மட்டுமே. படை வீரர்களை வழிக்கு கொண்டுவர வேறு வழித் தெரியாத அலெக்ஸாண்டர், இலியாத் நாயகன் அக்கிலிஸ் போல, தன்னுடைய கூடாரத்திற்குள்ளேயே மூன்று நாட்கள் முடங்கிவிட்டாள். யாரிடமும் எதுவும் பேசவில்லை அப்படியாவது படை வீரர்கள் வழிக்கு வருவார்கள் என்று அவன் எதிர்பார்த்தது ஏமாந்ததுதான் மிச்சம்.

நான்காம் நாள் கூடாரத்தை விட்டு வெளியே வந்தான். வந்தவன் நேராக குறிகேட்க சென்றான். நாடு திரும்புவதுதான் அவனுக்கு நல்லது என்று குறிச்சொல்லப்பட இறுதியில் நாடு திரும்புவது என்று அலெக்ஸாண்டர் முடிவு செய்தான். தங்களின் உயிரை பணயம் வைத்து அவ்வளவு தூரம் அவனோடு வந்த படை வீரர்களின் கோரிக்கையை ஏற்க விரும்பாத அலெக்ஸாண்டர் இறுதியில் குறி சொல்பவர்களின் சகுண குறிகளை ஏற்றுக்கொண்டான். இது அலெக்ஸாண்டரின் ஆளமைத் திறத்திற்கான ஒரு மைல்கள்!

அலெக்ஸாண்டர் கேட்ட குறி அவனுடைய படை வீரர்களுக்கு வேண்டுமானால் நல்ல சேதியாக இருந்திருக்கலாம் ஆனால் பெரிசிய மக்களுக்கு அது கெட்ட செய்தி. அலெக்ஸாண்டரின் ஓட்டுமொத்த காட்டு மிராண்டித்தனமும், அவன் பெருசியாவிற்கு திரும்பும் வழியெல்லாம் வெளிப்பட்டது. பெரிசியாவின் இரணுவ முக்கியம் வாய்ந்த இடங்களிலெல்லாம், கிரேக்க பாதுகாப்பு அரண்களை அலெக்ஸாண்டர் ஏற்படுத்தியபடி சென்றான். எதிர்பவர்கள் அழித்து ஒழிக்கப்பட்டார்கள். இந்த நாட்களில் அலெக்ஸாண்டர் நடத்தியதெல்லாம் கடைந்தெடுத்து, வடிகட்டிய, அதி சுத்தமான இனப்படுகொலைகள்.

தற்போதைய கராச்சியின் வடக்கு பகுதியில் அலெக்ஸாண்டர் தன்னுடைய படையை இரண்டாகப் பிரித்தான். ஒரு பிரிவை தன்னுடைய நெருங்கிய நண்பன் Nearchus தலைமையில், இந்தியப் பெருங்கடல் வழியாக பெருசியன் குடாவுக்கு அனுப்பிவைத்தான். மற்றொரு படைப் பிரிவை தானே வழி நடத்திக்கொண்டு Gedrosia பாலை வனத்தில் புகுந்தான். பாலை வனத்தைவிட்டு வெளியேறியது அலெக்ஸாண்டரோடு சேர்த்து 25000 வீரர்கள். அலெக்ஸாண்டர் தான் புரிந்த போர்களில் இழந்த வீரர்களைவிட மிக மிக அதிகமாக 60000 வீரர்களை இந்த பாலை வனத்திற்கு பலிகொடுத்தான்.

ஏறக்குறைய இன்னொரு இனப் படுகொலை, எல்லாம் அலெக்ஸாண்டரின் தன்னம்பிக்கை, விடாமுயற்சி, ஆளுமை திறன் பெயரில் நடந்தேறியது. பாலை வனத்தை கடந்து Susa நகரத்திற்கு கி.மு. 324 மார்ச் மாதம் வந்து சேர்ந்தான். அதே ஆண்டு மிகர் பெரிய திருமணத் திருவிழா ஒன்றையும் அலெக்ஸாண்டர் நடத்தினான். அவனுடன் சேர்த்து 80 மாசிடோனிய அதிகாரிகளுக்கு பெரிசிய நாட்டு பிரபு குல பெண்களுடன் திருமணம் நடந்தது. பெரிசிய பேரரசை தன்னுடைய கட்டுக்குள் நிரந்தரமாக வைத்துக்கொள்ள இந்த ஏற்பாடு. தொட்டில் பழக்கமான போர் வெறி அலெக்ஸாண்டரை சும்மாய் இருக்க விடவில்லை. அரேபிய, கிரேக்க, இத்தாலிய படையெடுக்குகளை குறித்து அலெக்ஸாண்டரின் மண்டைக்குள் மணியடித்துக்கொண்டிருந்தது.

அதே ஆண்டு இலையுதிர் காலத்தில் அவனுடைய பால்யகால நண்பனும், உயிர் நண்பனுமான Hephaesten, எக்பட்ணா நகரத்தில், நோவுற்று மர்மமான முறையில் மரணமடைந்தான். இது அலெக்ஸாண்டருக்கு பேரிடி. Hephaesten-யனுடைய மருத்துவர் சிலுவையில் அறையப்பட்டார். இந்த காலகட்டங்களில் அலெக்ஸாண்டரின் மனம் ஒருநிலையில் இல்லாமல் அலைபாய்ந்தபடி இருந்தது. போதாதற்கு அவன் குடி நோயாளியாகவும் மாறிவிட்டிருந்தான்.

கி.மு. 323 அலெக்ஸாண்டர், அரேபிய படையெடுப்பை முன்னிட்டு பாபிலோனுக்கு வந்துசேர்ந்தான். அதே ஆண்டு மே மாதம் 29-ஆம் நாள் நடந்த கேளிக்கை விருந்தில் கலந்துகொண்ட அலெக்ஸாண்டருக்கு அடி வயிற்றில் தாங்க முடியாத வலி. அடுத்த இரண்டு வாரங்களுக்கு கடுமையான காய்ச்சல். அலெக்ஸாண்டர் படுத்த படுக்கை. கி.மு. 323 June, 10-ஆம் நாள் அலெக்ஸாண்டர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அலெக்ஸாண்டரின் மரணத்திற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டுகின்றன. குடிநோய், மலேரியா, Ulcer. மிகச் சமீபமாகTyphoid காய்ச்சலில் ஒரு வகையான Ascending Paralysis அலெக்ஸாண்டரின் மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று ஆய்வு முடிவுகள் கணிக்கின்றன.

Ascending Paralysis-தான் மரணத்திற்கு காரணம் என்றால், அலெக்ஸாண்டரின் உயிர் பிரிவதற்கு முன்பே, அவன் பிணம் போல காட்சியளித்திருப்பான் என்று நம்பப்படுகிறது. பல நாட்கள் இந்த நிலை நீடிக்கும். அலெக்ஸாண்டர் இறந்துவிட்டாலும் பல நாட்களுக்கு அவனுடைய உடல் அழுகவில்லை என்பதற்கு வரலாற்றில் ஆதாரங்கள் இருக்கின்றன. அலெக்ஸாண்டரின் வாழ்வு எந்தவிதமான பக்க சார்புகளும் இல்லாமல் இந்தக கட்டுரையில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அலெக்ஸாண்டரின் வாழ்வு எதற்கு உதாரணம் என்பதை இதைப் படிக்கும் வாசகர்களிடமே விட்டுவிடுகிறேன்.



Comments

Popular posts from this blog

கண்ணுறக்க நேர கதை சொல்லியின் கதை.

மந்திரம், மந்திரவாதி.....புத்தகத்தின் வெள்ளோட்ட சிறு துளி....

களப்பிரர் என்னும் கலி அரசர்