பயணித்த பாதைகளில் சில கால் தடங்கள்


இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகத்தை சேர்ந்த ஒரு மனிதர் சத்தமேயில்லாமல் உலகின் கிழக்கு, மேற்கு என்று இரு திசைகளிலும் சுற்றி வந்துகொண்டிருந்தார். கிழுக்கு மற்றும் மேற்கு நாடுகளுக்கு பயணம் போவது ஒன்றும் முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் இல்லையென்றாலும் இந்த மனிதர் பல சுவாரசியமான சமாச்சாரங்களுக்கு சொந்தக்காரர்.

அதுவரை தமிழ் இலக்கிய உலகம் அவ்வளவாக கண்டுகொள்ளாத பயண இலக்கியத்திற்கு ஒரு புதிய அத்தியாயத்தை இந்த மனிதர் தொடங்கிவைத்தார். பயண கட்டுரைகளை சுவாரசியமான வாசிப்பு வெளியாக்க முடியும் என்பதை நிருபித்து காண்பித்த முதல் மனிதர். ஏ.கே. செட்டியார் இது அவருடைய பெயர்.

இவர் எழுதிய ஐரோப்பிய பயண கட்டுரைகளும், கரீபிய பயண கட்டுரைகளும் இன்று படித்தாலும் புது மணலின் மனத்தை நுகரும் அனுபவத்தை தரக் கூடியது. இவர் வெறும் பயண கட்டுரையாளர் மாத்திரம் கிடையாது, தின மலர் என்கிற மாத பத்திரிக்கையின் ஆசிரியரும் கூட. தின மலரின் ஆசிரியர், அச்சுகோப்பவர், பதிப்பாளர், வினியோகஸ்தர் என்று தனி ஒரு மனிதராக இந்த இதழை நடத்தியிருக்கிறார்.

இவர் அக்காலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக பத்திரிக்கைகளில் வெளிவந்த பயணக் கட்டுரைகளை தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிட்டிருக்கிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் மதராஸ் மாகாணம் எவ்வாறு இயங்கியது என்று அறிந்துகொள்ள விருப்பமுடையவர்கள் நிச்சயம் இந்த புத்தகத்தை வாங்கி படிக்கவேண்டும். நமக்கு இரண்டு, மூன்று தலைமுறைக்கு முன்தையவர்கள் எப்படி தினசரி வாழ்வை எதிர்கொண்டார்கள் என்பது இதில் வார்த்தைகளால் படம் பிடிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவிலேயே முதல் முயற்சியாக காந்தி பற்றிய ஆவணப் படத்தை எடுத்து வெளியிட்டிருக்கிறார். ஒட்டுமொத்த தமிழகமும் சினிமா என்னும் காட்சி மாயைக்கு பின்னால் ஒடிக்கொண்டிருந்த சமயத்தில், ஆவணப் படங்களின் முக்கியதுவத்தை வலியுறுத்தி அதற்காக உழைத்தார்.

சிலர் தாங்கள் வாழும் காலத்தை ஒட்டி சிந்தித்து சாதனைகள் படைப்பார்கள். சிலர் தாங்கள் வாழும் காலத்தை கடந்து முன்னோக்கி சிந்தித்து சாதனைகள் படைப்பார்கள். ஏ.கே. செட்டியார் இரண்டாம் வகையை சேர்ந்தவர் ஆனால் அவருடைய கேடுகாலம் அவர் தமிழகத்தில் பிறந்தது. மேற்கில் V.S. Naipaul  போன்றவர்கள் பயணக் கட்டுரைகள் வடிவில் இலக்கியங்கள் படைத்து புகழ்பெற, ஏ.கே. செட்டியார் தமிழர்கள் உண்டாக்கி வைத்திருக்கும் இருண்ட வெளியில் முடங்கி கிடக்கிறார்.

Comments

Popular posts from this blog

கண்ணுறக்க நேர கதை சொல்லியின் கதை.

மந்திரம், மந்திரவாதி.....புத்தகத்தின் வெள்ளோட்ட சிறு துளி....

களப்பிரர் என்னும் கலி அரசர்