தென்னமெரிக்க தமிழர்கள்......புத்தகத்தின் சிறு துளி...



"அலாஸ்கா நிலப்பகுதிக்குள் நுழைந்த கற்கால மனிதர்கள் முதலில் இன்றைய கனடா பிறகு வட அமெரிக்கா அடுத்து மத்திய அமெரிக்கா இறுதியாக தென்னமெரிக்கா என்று அமெரிக்க கண்டம் முழுவதும் படிப் படியாக பரவியிருக்கிறார்கள். புதிய உலகமான (New World) அமெரிக்காவிற்குள் கற்கால மனிதர்கள் சுமார் ஒரு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பே நுழைந்துவிட்டிருக்கலாம் என்று தெளிவாக தெரிந்தாலும் அவர்கள் எந்த இனத்தை சேர்ந்தவர்கள் என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்கின்றன.

இதை குறித்து பார்ப்பதற்கு முன்பாக மனித இனத்தின் முக்கிய இனப் பிரிவுகளைக் குறித்து அறிந்துக்கொள்வது அவசியம். இன்றைக்கு உலகம் முழுவதிலும் பல்வேறு மனித இனங்கள், அவைகளுக்கு என்று தனித்த மொழி, கலாச்சாரங்கள் இருந்தாலும் அனைத்தும் நான்கு முதன்மை இனத்திலிருந்து கிளைத்து உருவானவைகளே. நீக்ராய்ட், ஆஸ்டிரலாய்ட், காக்கசாய்ட் மற்றும் மங்கோலாய்ட். நீக்ராய்ட் ஆப்பிரிக்க கருப்பின மக்களையும் அவர்களின் கிளைப் பிரிவுகளையும் உள்ளடக்கியது. ஆஸ்டிரலாய்ட் தமிழர்களையும் தென்கிழக்காசிய மக்களினத்தையும் உள்ளடக்கியது. காக்கசாய்ட் ஐரோப்பிய வெள்ளையின மற்றும் ஆரிய மக்களினத்தையும் உள்ளடக்கியது. மங்கோலாய்ட் திபேத்திய மற்றும் மங்கோலிய இனத்தை கொண்டது.

மண்டை ஓட்டின் உருவ அமைப்பை கொண்டு மனித இனங்கள் மேலேப் பார்த்த நான்கு பிரதான வகைகளுக்குள் கொண்டுவரப்படுகிறது. நீக்ராய்ட் மக்களினத்தின் மண்டையோட்டில் கண் மற்றும் மூக்கு பகுதிகள் பெரிய வட்டத் துளைகள் கொண்டதாக இருக்கும். கீழ் தாடை மண்டை ஒட்டிலிருந்து சற்றே முன்னால் துரத்தியபடி இருக்கும்.

ஆஸ்டிரலாய்ட் மண்டையோட்டில் கண் மற்றும் மூக்கு பகுதிகள் சற்றே சதுர அமைப்பிலும் மேல் தாடை கன்னப் பகுதி இரு புறமும் துருத்திக்கொண்டிருக்கும். மண்டையோட்டின் மொத்த உருவ அமைப்பு சற்றே உருண்டை கலந்த சதுர அமைப்பில் இருக்கும்.

காக்கசாய்ட் மண்டையோடு நீள் சதுரமாக கீழ் தாடை பகுதியில் உள்ளடங்கியிருக்கும். கண் பகுதி வட்டமாக, மூக்கு பகுதி முக்கோண அமைப்பில் இருக்கும்.

மங்கோலாய்ட் மண்டையோட்டில் கண் பகுதி சிறியதாக இருக்கும். மூக்கு பகுதி சற்றே துருத்திக்கொண்டு நீள் சதுரமாக இருக்கும். கீழ் தாடைப் பகுதி சதுர அமைப்பில் இருக்கும்.

ஆப்பிரிக்க கண்டத்தின் மையப் பகுதியில் தோன்றிய மாந்த இனம் (ஹோமோ சேப்பியன்ஸ் - நீக்ராய்ட்) பூமியின் மற்ற பகுதிகளுக்கு பரவி தட்ப வெட்ப நிலை, வாழ்நிலை மற்றும் உணவு பழக்க வழக்கத்தின் காரணமாக மற்ற மூன்று மாந்த இனங்களாக (ஆஸ்டிரலாய்ட், காக்கசாய்ட் மற்றும் மங்கோலாய்ட்) பிரிந்ததாக ஒரு கருத்தும் (Expansion Theory) இதற்கு எதிரான மற்றொரு கருத்தும் (Replacement Theory – ஆப்பிரிக்க கண்டத்திலிருந்து வெளியேறிய ஹோமோ சேப்பியன்ஸ் பூமியின் மற்ற பகுதிகளில் இருந்த நியாண்டர்தல்களையும், ஹோமோ எரகாஸ்டர்களையும் அழித்து அல்லது அவர்களுடன் இனக்கலப்பு செய்து மற்ற மூன்று இனங்களாக பிரிந்தார்கள்) ஆய்வு வெளியில் இப்போதைக்கு பஞ்சாயத்தில் இருக்கிறது.

பஞ்சாயத்து எப்படியானதாக இருந்தாலும் ஆப்பிரிக்க கண்டத்தில் ஹோமோ சேப்பியன்கள் தோன்றிய அதே காலக்கட்டத்தில் தென்னிந்திய பகுதிகளிலும் ஹோமோ சேப்பியன்கள் இருந்திருக்கிறார்கள் என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கிய விசயம். இதற்கு உதாரணம் இன்றைய சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கிடைக்கும் சுமார் இரண்டு இலட்சம் வருடங்களுக்கு முற்பட்ட கற்கால மனிதர்களின் கற்கருவிகள். இரண்டு இலட்சம் வருடங்களுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் இருந்து வெளியேறி பூமியின் மற்ற பகுதிகளுக்கு கற்கால மனிதர்கள் (ஹோமோ சேப்பியன்ஸ்) பரவியதாக கொண்டால் அவர்கள் தென்னிந்திய பகுதிகளுக்கு வந்து சேர ஐந்திலிருந்து பத்தாயிரம் வருடங்களாவது ஆகியிருக்க வேண்டும்......."


Comments

Popular posts from this blog

கண்ணுறக்க நேர கதை சொல்லியின் கதை.

மந்திரம், மந்திரவாதி.....புத்தகத்தின் வெள்ளோட்ட சிறு துளி....

களப்பிரர் என்னும் கலி அரசர்