தென்னமெரிக்க தமிழர்கள்....புத்தகத்தின் சிறு துளி....

தென்னமெரிக்க தமிழர்கள்....புத்தகத்தின் சிறு துளி....

"மாயன் என்கிற வார்த்தைக்கும் மாயோன் என்கிற தமிழ் வார்த்தைக்குமான தொடர்பை காக்கைகளுக்கு படைத்துவிடுவோம். நிச்சயமாக நாம் அப்படியான மொழி ஆராய்ச்சிகளில் எல்லாம் ஈடுபட்டு நம்முடைய நேரத்தை வீணடிக்க கூடிய மூடர்கள் இல்லை என்பதாலும் நமக்கு சினிமா பாடல் கவிகளின் வார்தை ஜாலங்களை தூர் வாருவதற்கே நூற்றாண்டுகள் போதாமல் இருப்பதின் காரணமாகவும் வரலாற்று ஆய்வுகளை காக்கைகளுக்கு திண்ண கொடுத்துவிடுவதே சான்றோர் செயலாக இருக்கும். பாதி வேட்டை மீதி தோட்ட உணவு உற்பத்தி என்று மாயன் நிலப்பகுதிகளில் சுற்றி அலைந்த மாயன்களின் தொடக்க கால கிராம குடியிருப்புக்களை கி.மு. 1800 தொடங்கி பார்க்க முடிகின்றது.

கிராம குடியிருப்புக்கள் என்றால் குறிப்பிட்ட பகுதியில் நானூறு ஐந்நூறு வீடுகள் இருக்கும் என்கிற பொருளுக்குள் சென்றுவிட வேண்டாம். ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு வீடு என்கிற அளவிலேயே தொடக்க கால மாயன் கிராம குடியிருப்புக்கள் இருந்திருக்கின்றன. மாயா என்கிற இனக் குழு பெயர் எங்கிருந்து பெறப்பட்டது என்பதற்கான தெளிவான ஆய்வு முடிவுகள் இதுவரை வெளிவரவில்லை. சில ஆய்வாளர்கள் மாயா என்பது யுகட்டான் நிலப்பகுதியை குறிக்கும் சொல் என்றும் மற்றும் சிலர் மொழியை அடையாளப்படுத்தும் சொல் என்றும் கருதுகிறார்கள். எந்த ஆய்வு எப்படி குடி முழுகினால் நமக்கென்ன மாயோனுக்கும் மாயனுக்கும் இருக்கும் நெருங்கிய தொடர்பை கண்டும் காணாமல் போய்விடுவதுதானே நம்முடைய வரலாற்று கடமையாக இருக்கும்.
மாயோன் மேய காடுறை உலகமும் என்று தொல்காப்பியம் முல்லை நில மக்களின் வாழ்வியலை படம் பிடித்துக்காட்டுகிறது. முல்லை நில வாழ்கை என்பது கால் பகுதி, குறிப்பிட்ட காலம் வரை ஓரிடத்தில் தங்கியிருப்பது, அடுத்த கால் பகுதி அலைந்து திரிந்து வேட்டையாடி உணவுகளை சேகரிப்பது, மற்றொரு கால் பகுதி கால் நடைகளை பழக்கி மேய்ச்சலுக்கு அழைத்து செல்வது, இறுதி கால் பகுதி பருவ நிலை விவசாயத்தில் ஈடுபடுவது. மிக சரியாக இந்த வாழ்கை முறையைத்தான் பிரி கிளாசிக் காலக்கட்ட மாயன் பின்பற்றிக்கொண்டிருந்தார்கள்.

சரி இதற்கும் மேல் நாம் என்னத்தான் உறைத்து ஊற்றினாலும் தொல்காப்பிய மாயோனுக்கும் மாயனுக்குமான தொடர்பை கண்டுக்கொள்ள ஆள் இருக்கப்போவதில்லை என்பதால் மாயன் நாகரீக பேரரசுகளையும் அதன் பேரரசர்களையும் குறித்து தெரிந்துக்கொள்ளும் வேலையை பார்ப்போம். அதற்கு முன்பாக ஒன்றை தெரிந்துக்கொள்வது அவசியம், அது சில மாயன் பேரரசர்களின் பெயர்களிலும் கூட தமிழ் வாடை தெளிவாகவே அடிக்கும் என்பது. டாச்மாக் வாடை அடித்தால் என்ன ஏது என்று எட்டிப் பார்ப்பதில் ஒரு உபயோகம் இருக்கிறது இந்த வாடையை வைத்துக்கொண்டு என்ன செய்வதாம் என்று ஆதங்கப்பட்டால் அதுவும் சரிதான்.

டிக்கால், டோஸ் பிலாஸ், நரன்ஜோ, கரகோல், கலாக்முல், யாக்ஸ்சிலான், பெயிட்ராஸ் நெக்ராஸ், பலான்கியூ, டோனினா, கோபான், குயிரிகுவா இவைகள் ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகால மாயன் நாகரீகத்தின் மிகப் பெரும் கலை, இராணுவ, கலாச்சார நகரங்களாக திகழ்ந்தவைகள். இந்த நகரங்களின் தனி சிறப்புக்களையும் அதன் அரசர்களையும் அவர்களின் சுவாரசியமான அரசியல் முடிவுகள் மற்றும் நகர்வுகளையும், அவர்களின் உயிர்களை காவு வாங்கிய போர்களையும் குறித்து ஒவ்வொன்றாக பார்ப்போம்.



டிக்கால் (Tikal). மத்திய நிலப்பகுதியை சேர்ந்த மிக முக்கிய நகரம். உச்ச நிலைகளையும், வெற்றிகளையும், தோல்விகளையும், பேரழிவுகளையும் சந்தித்த இந்த நகரம் சுமார் 800 ஆண்டுகள் மத்திய மாயன் நிலப்பகுதியின் அதிகார குவியல் கொண்ட நகரமாக இருந்திருக்கிறது. எட்டு நூற்றாண்டுகளில் 33 பேரரசர்கள் இதை ஆட்சி செய்து மறைந்திருக்கிறார்கள். கிருத்தவ சகாப்தத்தின் முதலாம் நூற்றாண்டு தொடங்கி டிக்கலில் பேரரசுக்கான அரசியல் சூழ்நிலைகள் உருவாகிவிட்டதற்கான எழுத்து ஆதரங்கள் கிடைக்கின்றன. டிக்கலின் முதல் அரசரை பற்றி தெரிந்துக்கொள்வதற்கு முன்பாக மாயன் ஆட்சி அமைப்பை குறித்து சிறிதாக ஒன்றை உள்வாங்கிக்கொள்வது அவசியம். நம்முடைய வரலாற்றில் சிற்றரசர்கள் என்று அடையாளப்படுத்தக் கூடியவர்களையே மாயன் நாகரீகத்தில் பேரரசர்கள் என்று அடையாளப்படுத்துகிறார்கள். பல நகரங்களை உள்ளடக்கிய பெரும் நிலப்பரப்புக்கள் கொண்டதல்ல மாயன் பேரரசர்களின், பேரரசு. ஒன்று அல்லது இரண்டு முக்கிய நகரங்களை அது சார்ந்த விவசாய உற்பத்தி நிலங்களை மட்டுமே கொண்டது மாயன் பேரரசு என்பது...."


Comments

Popular posts from this blog

கண்ணுறக்க நேர கதை சொல்லியின் கதை.

மந்திரம், மந்திரவாதி.....புத்தகத்தின் வெள்ளோட்ட சிறு துளி....

களப்பிரர் என்னும் கலி அரசர்