காவிரி புகும் இடத்தில் துலைந்த சுவடுகள்


மனித நாகரீகம் தான் கடந்து வந்த பாதைகளில் மறக்க முடியாத அதே சமயத்தில் ஆச்சரியமான பல நகரங்களை உருவாக்கியிருக்கிறது. சுமேரியர்களின், பாபிலோன் நகரம் பல ஆச்சரியங்களையும் அதிசயங்களையும் உள்ளடக்கி இருந்தது. வல்லரசு அடையாளத்தை இந்த பாபிலோன் நகரம் வரலாறு முழுவதும் சுமந்து திரிந்திருக்கிறது. வரலாற்று காலத்து உலக அதிசயங்களில் ஒன்றான தொங்கும் தோட்டம் இந்த நகரில்தான் இருந்தது. பைபிலிலும் கூட இந்த நகரத்தின் பிரம்மாண்டம் குறித்த செய்திகள் உண்டு.

மேலை எகிப்தில் (Upper Egypt) தோன்றி கீழை எகிப்தில் (Lower Egypt) முடியும் நைல் நதியின் இருகரை நெடுக எகிப்தியர்கள் பல நகரங்களை கட்டி எழுப்பியிருந்தாலும், மத்தியத் தரைகடல் பகுதியில் நைல் நதியின் கழிமுகத்தில் அலெக்ஸாண்டரால் தோற்றுவிக்கப்பட்ட அலெக்ஸாண்டிரியா நகரம் வரலாற்றில் மிக அழுத்தமான ஒரு அடையாளத்தை பதிவு செய்தது. உலகம் அதுவரை கண்டிராத ஒரு நூலகத்தை அலெக்ஸாண்டர் அந்த நகரத்தில் கட்டியெழுப்ப திட்டமிட்டு அது நிறைவேற்றபட்டது. அன்றைய காலகாட்டத்தில் அதாவது இரண்டாயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு வல்லரசாக இருந்த அனைத்து நாடுகளின் அறிவு சொத்துகளும், மிக நீளமான பைப்ரஸ் சுருள்களில் படியெடுக்கப்பட்டு, அறிவை வளர்க்க அந்த நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்தது.

தென்னிந்தியா தொடங்கி மத்திய தரைகடல் நாடுகள் மற்றும் பட்டு சாலை (Silk Route) வழியாக சீனா பற்றிய செய்திகள் வரை அனைத்தையும் அலெக்ஸாண்டிரியா நூலகத்தில் தேடி அறிந்துகொள்ள முடியும்.

பட்டு சாலையை பின் தொடர்ந்து சீனாவின் மேற்கு எல்லையில் இருக்கும் உயிர் குடிக்கும் தாக்லமாகான் பாலைவனத்தை (சீனாவின் மம்கிகள் இந்த பாலைவனத்திலிருந்துதான் கண்டெடுக்கபட்டன என்பது உபரி தகவல்) கடந்துவிட்டால் ஜீங்யாங் நகரம் உங்களை வரவேற்கும். மூவாயிரம் வருட பழமையையும், ஆச்சரியங்களையும் இந்த நகரம் கொண்டிருக்கிறது. இந்த நகரம் இன்றும் இருக்கிறது. அமெரிக்கா இன்று பார்த்துவரும் உலக போலீஸ் வேலையை எப்படியாவது எட்டிபிடித்துவிடவேண்டும் என்று பரபரத்துகொண்டிருக்கும் சீனாவின் இன்றைய தலைநகரான பீஜிங் அன்றைய ஜீங்யாங். இந்த நகரத்திற்கு பல பெயர்கள் உண்டு. மார்கப் போலோ காலத்தில் இது கான்பலூக் என்று அழைக்கப்பட்டது. துருக்கி வரை மேற்கு நாடுகளை குடைந்தெடுத்த செங்கிஸ் கானின் வம்சம் இந்த கான்பலுக் நகரிலிருந்துதான் சீனாவை கட்டி ஆட்சி செலுத்தியது. கன்பூசியம், தாவோயிசம், புத்திசம், ஜென் என்று அனைத்தும் இந்த நகரத்திற்கு அத்துபடி.


இப்படி உலகின் பழமையான நாகரீகங்கள் தங்களுடைய அடையாளங்களாக சில நகரங்களை கட்டி எழுப்பிய காலத்தில் தமிழகத்திலும் இயல்பாகவே ஒரு அற்புத நகரம் தோன்றியது. ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்தைய உலக வல்லரசுகளோடு வணிகம் செய்த தென்னிந்திய மலபார் கரையின் மத்திய பகுதியில் இருந்த அந்த நகரம் தங்க கட்டிகளின் புகலிடம். அன்றைய எகிப்திய, சுமேரிய, கிரேக்க நாகரீகங்கள் சேர்த்து வைத்திருந்த தங்கமெல்லாம், காந்தத்தை நோக்கி இழுபடும் இரும்பு துண்டுகளைப் போல அந்த நகரத்தை நோக்கி இழுக்கப்பட்டன. தங்க வேட்டையாடிய அந்த நகரம் பூம்புகார் என்ற காவிரிபூம்பட்டினம். கிரேக்கர்கள் இதை காவேரி பட்டனா என்று குழறி அழைத்திருக்கிறார்கள்.

பத்துபாட்டின் பட்டினபாலை முழுக்க முழுக்க காவிரிபூம்பட்டினம் பற்றிதான் பேசுகிறது. பட்டினபாலையின் காலம் இன்றையிலிருந்து இரண்டாயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு. பட்டினபாலை எழுதிய புலவர், காவிரிபூம்பட்டினத்தின் பிரம்மாண்டம் மற்றும் செல்வ செழிப்பால் அதிரிபுதிரியாகி கற்பனையை கட்டவிழ்த்துவிட்டு கொஞ்சம் அதிகமாகவே அந்த நகரத்தைபற்றி புகழ்ந்து பட்டினபாலையில் பாடியிருந்தாலும், அவருடையதை அதிகப்படியான உலறல்கள் என்று ஒதிக்கிவிடமுடியாது.

உருத்திரங் கண்ணனார் காவிரிபூம்பட்டினத்தை புகழ்ந்து பாடிய அதே காலகட்டத்தில், கிரேக்கத்தில் பிளைனியும், தாளமியும் காவிரிபூம்பட்டினத்தை குறித்து கதறுகிறார்கள். மத்திய தரை கடல் மற்றும் கிரேக்க நாடுகளின் தங்கங்களை எல்லாம் மூட்டை மூட்டையாக அள்ளிகொண்டுபோன தமிழக வேளாள வணிகர்களை வாய்பிளந்து பார்த்தபடி நின்றிருக்கிறார்கள்.

பிளைனியும், தாளமியும் தமிழக அழகு சாதனப் பொருட்களுக்கு கிரேக்க பெண்கள் தண்ணீராக வாரியிரைத்த தங்கத்தை குறித்து ஓப்பாரி வைக்காத குறைதான். தமிழக கலை பொருட்களின் மீதான கிரேக்க பெண்களின் பித்தை இருவரும் தங்களுடைய புத்தகங்களில் கண்டிக்கிறார்கள். இந்த நிலை இப்படியே போனால் கிரேக்க நாடுகள் எல்லா தங்கத்தையும் தமிழர்களிடம் தாரைவார்த்து கொடுத்துவிட்டு நடுதெருவுக்கு போகவேண்டியதுதான் என்று கிரேக்க பிரபுக்களை எச்சரித்திருக்கிறார்கள். இது வரலாற்று ஆவணமாக அவர்களுடைய புத்தகங்களில் எழுதப்பட்டிருக்கிறது. பிளைனி Historia Naturalis என்கிற புத்தகத்திலும், தாலமி Geography என்கிற புத்தகத்திலும் தமிழர்களின் தங்க வேட்டை குறித்து பேசுகிறார்கள்.

இதன்படி பார்த்தால் உருத்திரங் கண்ணனாரின் பட்டினபாலை, காவிரிபூம்பட்டினம் குறித்த உயர்வு நவிர்ச்சியாக தெரியாது. காவிரிபூம்பட்டினத்தின் பிரம்மாண்டத்தையும், செல்வ செழிப்பையும் விளக்க இந்த ஒரு காட்சியே போதும். உள் முற்றத்தில் தானியங்கள் காயபோடபட்டிருக்க பெண் பிள்ளைகள் பள்ளாங்குழி விளையாடிகொண்டிருக்கிறார்கள். அந்த தானியங்களை தேடி பறைவைகள் வர எழுந்து சென்று அவைகளை விரட்ட சொம்பல் படும் பெண் பிள்ளைகள் தங்களின் காதுகளில் அணிந்திருக்கும் நகைகளை கழட்டி எறிந்து பறவைகளை விரட்டுகிறார்கள். இப்படி அவர்கள் பல நாட்கள் செய்த காரணத்தால் அந்த முற்றத்தை சுற்றிலும் நகைகளே சிதறிகிடக்க பெண் பிள்ளைகள் அதை எடுக்கவும் யோசனையில்லாமல் இருக்கிறார்கள். சிதறிகிடக்கும் நகைகளின் காரணமாக சிறு பிள்ளைகளால் மர வண்டி ஓட்ட முடியவில்லை. பெண் பிள்ளைகள் பறவை விரட்ட வீசி எறிந்த நகைகள் மர வண்டியின் சக்கரத்தில் மாட்டிக்கொண்டு அவைகளை ஓடாமல் செய்கின்றன.

செல்வ செழிப்பு மிகுந்த நகரத்தில் விழாக்களுக்கும், கொண்டாட்டங்களும் குறைகள் உண்டா என்ன. காவிரிபூம்பட்டின இந்திர விழா குறித்து சிலப்பதிகாரம் விவரம் தருகிறது. நிச்சயம் பல வகை விழாக்கள் அங்கே கொண்டாடபட்டிருக்கவேண்டும். பல பிரம்மாண்டமான கட்டி அமைப்புகளை இந்த நகரம் உள்ளடக்கி இருந்திருக்கிறது. உலக வணிகர்களின் மையமாகவும் திகழ்ந்திருக்கிறது. கிரேக்க மாலுமி பெரிப்பூலுஸ், Periplus of the Erythraean Sea என்கிற புத்தகத்தில் இதை பற்றி கூறுகிறார். கிரேக்க வணிக கப்பல்கள் எதுவும் காவேரிபூம்பட்டினத்தை தவிர்த்துவிட்டு சென்றுவிடமுடியாது. அந்த வகையில் காவிரி ஆறு கடலில் களக்கும் இடத்தில் இருந்த காவிரிபூம்பட்டினம் பல்வேறு கப்பல்களின் போக்கும் வரத்துமாக இருந்திருக்கும்.

தமிழர்களின் கேடுகாலம் இந்த நகரம் இன்று கடலுக்குள் இருக்கிறது.

Naveena Alexander

Comments

Popular posts from this blog

கண்ணுறக்க நேர கதை சொல்லியின் கதை.

மந்திரம், மந்திரவாதி.....புத்தகத்தின் வெள்ளோட்ட சிறு துளி....

களப்பிரர் என்னும் கலி அரசர்