‘எதிர்ப்போ......ம் ஆனா...... எதிர்.....க்க மாட்டோம்’


நேற்று இரவு புதிய தலைமுறையில் கூடங்களும் அணு உலை தொடர்பாக மீண்டும் ஒரு விவாதம் நடந்தது. இதில் கம்யூனிஸ்டுகளின் சார்பாக ராமநாதன் கலந்துகொண்டார். ராமநாதன் இந்த விவாதத்தில் கலந்துகொள்ளாமலேயே இருந்திருக்கலாம். அந்த அளவிற்கு அவரே அவர்களுடைய கொள்கைகளை நாறடித்துகொண்டார். நாம் கம்யூனிஸ கொள்கைகளுக்கு எதிரானவர்கள் கிடையாது. ஆனால் தற்பொழுது இந்தியாவில் செயல்படும் பொலிட் பியூரோவை நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது.

கம்யூனிஸ்டுகள் தாங்களே தங்களை இந்தியாவை ஆளும் தகுதியிலிருந்து தள்ளிவைத்துகொள்ளுகிறார்கள். ரஷ்யா எது செய்தாலும் அதற்கு கண்மூடித்தனமான ஆதரவு ஆனால் அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளுக்கு எதிர்ப்பு. ரஷியாவும் கூட இன்றைக்கு வல்லரசு நாடுகளைப் போல பெரு முதலாளிகளின் நலனைத்தான் முதன்மையாக பார்க்கிறது என்பதை இந்திய கம்யூனிஸ்டுகள் ஏற்க மறுப்பது வேதனை சிரிப்பைதான் வரவழைக்கிறது.


நேற்று பேசிய ஜி. ராமநாதன் ரஷ்ய அணு உலைகள் மிகவும் பாதுகாப்பானது அதை ஆதரிப்பது கம்யூனிஸ்டுகளின் நிலைப்பாடு அதே சமயத்தில் அமெரிக்கா இந்தியாவிற்குள் கொண்டுவர இருக்கும் அணு உலைகளை எதிர்கிறோம், எதிர்ப்போம் என்றார். அணு உலைகள் குறித்து இவர்களின் தெளிவான நிலைபாடுதான் என்ன என்பது கேள்விக்குறி? ரஷ்யா உட்பட இன்று வல்லரசு நாடுகளில் அணு உலை தொழிலுக்கு பின்னாடி இருப்பவர்கள் மிகப் பெரிய பண முதலைகள். கூடங்குளத்தில் இருக்கும் அணு உலைகளும் கூட ரஷ்ய முதலாளி வர்கத்தின் லாப முதலீடு. முதலாளித்துவத்தின் சுயநலத்தையும், சமுதாயத்திற்கு கேடு விளைவிக்கும் திட்டங்களையும், முதலீடுகளையும் எதிர்த்து போராடுவது கம்யூனிஸத்தின் அடிபடைகளில் ஒன்று. ஆனால் ரஷ்ய அணு உலை முதலாளிகளுக்கு இந்தியாவிற்குள் பட்டு கம்பளம் விரிக்கும் இந்திய கம்யூனிஸ்டுகள், அமெரிக்க அணு உலை முதலாளிகளை மட்டும் எதிர்ப்போம் என்கிறார்கள்.

இந்திய கம்யூனிஸ்டுகள் முதலாளித்துவத்தை எதிர்கிறார்களா இல்லையா? எதிர்கிறார்கள் என்றால் பின்பு எப்படி கூடங்குளம் அணு உலைக்கு இவர்களால் ஆதரவாக செயல்பட முடிகிறது? ரஷ்ய அணு உலைகள் நாட்டின் வளர்ச்சிக்கு மிக அவசியம் என்று ராமநாதன் கூறினார். அப்படியென்றால் இனி வர இருக்கும் அமெரிக்க அணு உலைகள் கூடத்தான் நாட்டின் வளர்ச்சிக்கு மிக அவசியம் என்றாகிறது. ஆனால் கம்யூனிஸ்டுகள் அதை மட்டும் எதிர்பானேன்?

முதலாளித்துவத்தை எதிர்க்கிறோம் அதே சமயத்தில் மறைமுகமாக முதலாளித்துவத்தால் இயக்கப்படும் ரஷ்யாவை ஆதரிக்கிறோம். ஆனால் அமெரிக்காவை எதிர்க்கிறோம் ஏனென்றால் நாங்கள் முதலாளித்துவத்திற்கு எதிரானவர்கள். இப்படி அவர்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்பி, மிக முக்கியமான மக்கள் போராட்டங்களில் இருந்து அன்னியப்பட்டுபோய் இந்திய அரசியலில் ஒரு சிறந்த இடத்தை பிடிக்கும் வாய்ப்பை கம்யூனிஸ்டுகள் இழந்துகொண்டிருக்கிறார்கள்.

இந்திய அரசியல் கட்சிகளில் வேறெந்த கட்சிகளையும் விட அகச் சிறந்த படிப்பாளிகளைக் கொண்டது இந்திய கம்யூனிஸ்டுகளின் கட்சிகள். ஆனால் அவர்கள் இந்திய மக்களின் கலாச்சார மற்றும் மன இயல்புகளின் போக்கிற்கு ஏற்றாற் போல கம்யூனிஸ்டு கட்சியை வளர்தெடுக்காதது, ஆயிரம் கைகளை உடையவன் ஒரு வாய் சோற்றை வாய்க்குள் போட சிரமபடுவதற்கு சமம்.

ரஷ்ய அகிலத்தை பற்றியே இந்திய கம்யூனிஸ்டுகள் கனவு கண்டுகொண்டிருப்பதால், இந்திய மக்களின் பிராந்திய பிரச்சனைகளை கோட்டைவிடுகிறார்கள். ஒரு மாநிலத்தின் மக்களுடைய தனிப்பட்ட பிரச்சனைகளை எந்தவித சமரசத்திற்கும் இடமில்லாமல் வென்றெடுக்காமல், பொலிட் பியூரோ Manifesto-களை கட்டி அழுவது இல்லாத ஊருக்கு பாதை அமைப்பதற்கு சமம்.

தமிழ் மக்களின் ஈழ படுகொலை பிரச்சனை, முல்லை பெரியாறு பிரச்சனை, கூடங்குள அணு உலை பிரச்சனை, காவிரி பிரச்சனை என்று இப்படி தமிழர்களின் உணர்வுகளையும், வாழ்வாதாரத்தையும், இருத்தலையும் நேரடியாக பாதிக்கக் கூடிய அனைத்து பிரச்சனைகளிலும் தமிழ் மக்களோடு களமிறங்கி அவர்களுக்காக குரல் கொடுக்காமல் கைகட்டி நின்று வேடிக்கை பார்த்துகொண்டிருப்பது இந்திய கம்யூனிஸ்டுகளின் அரசியல் செயல்பாடுகளுக்கு நல்லதுமில்லை, தமிழ் மக்களுக்கு இந்திய கம்யூனிஸ்டுகளின் மீது நம்பகத்தன்மை ஏற்படுத்துவதற்கு வழியும் இல்லை.

Naveena Alexander

Comments

Popular posts from this blog

கண்ணுறக்க நேர கதை சொல்லியின் கதை.

மந்திரம், மந்திரவாதி.....புத்தகத்தின் வெள்ளோட்ட சிறு துளி....

களப்பிரர் என்னும் கலி அரசர்