மண்ணில் புதைந்த பால்நிலாவின் வெளிச்ச சிதறல்கள்


அது 1880-களின் தொடக்கம். கிழக்கு பாகிஸ்தானில் லாகூர், ராவில்பிண்டி இடையே உச்சி வெயிலில் ரயில் பாதை அமைத்துகொண்டிருந்த அந்த தொழிலாளர்கள் தீடிரென்று ரயில் பாதை வேலையை அப்படியே போட்டது போட்டபடி நிறுத்திவிட்டார்கள். அங்கே அவர்கள் பார்த்த காட்சி அவர்களை முற்றிலும் குழப்பிவிட்டது. மேற்கொண்டு என்ன செய்வது என்றே அவர்களுக்கு புரியவில்லை. அந்த திட்டத்தின் பொறியாளர் மண்டைய திறக்கும் வெயிலையும் கூட பொருட்படுத்தாமல் அடித்துபிடித்துகொண்டு அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார். அவரும் தன்னுடைய வாழ் நாளில் அப்படி ஒரு காட்சியை கண்டதில்லை.

வெள்ளை மேலதிகாரிகளுக்கு தகவல் பறந்தது. அது லண்டனில் பிரதிபலித்து, பிரிட்டீஸ் இந்திய தொல்லியல் துறையின் இயக்குனர் அலெக்ஸாண்டர் கன்னிங்கம் அங்கு வந்து சேர்ந்தார். அந்த நொடியிலிருந்து மண்ணில் புதைந்து கிடந்த அரப்பா மற்றும் மோகஞ்சதரோ நகரங்களை உள்ளடக்கிய சிந்து நாகரீகத்தின் ரகசியங்கள் வெளி உலகிற்கு தெரியத்துவங்கின. ஆரியமே இந்தியா, இந்தியாவே ஆரியம் என்று கற்பனை செய்துகொண்டிருந்தவர்களின் தலையில், முதல் இடி இறங்கிய தருணமும் இதுதான். இந்தியாவின் வரலாறு ஆரியர்களின் வருகையோடுதான் தொடங்குகிறது என்று வம்பலந்து கொண்டிருந்தவர்களின் வாயில் சர்க்கரைக்கு பதிலாக மண்ணையள்ளி போட்டதுபோலிருந்தது அலெக்ஸாண்டர் கன்னிங்கமினுடைய கண்டுபிடிப்புகள்.


அரப்பா மற்றும் மோகஞ்சதரோ நகரங்களின் இடிபாடுகள் மீண்டும் 1920-களின் மத்தியில் மிக விரிவான ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டது. அதன் விளைவாக கிழக்கு பாகிஸ்தான் தொடங்கி மேற்கில் ஒடிசா வரை விட்டு விட்டு அரப்பா, மோகஞ்சதரோ நகரங்கள் போலவே பல நகரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கலிபங்கான், லோத்தல், கோட்-திட்ஜி போன்ற நகரங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவைகள். இந்த நகரங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பிலிருந்திருக்கின்றன. அரப்பாவின் இடிபாடுகளுக்கு இடையே நின்றிருந்த ஜான் மார்ஸல் சொன்ன வார்த்தைகள், லங்காய்ஸர் இடிபாடுகளுக்கு இடையே நிற்பதுபோலிருக்கிறது.

இன்றிலிருந்து 4000 வருடங்களுக்கு முன்பு நிற்மானிக்கப்பட்ட அரப்பா நகரத்தின் இடிபாடுகள், இருபதாம் நூற்றாண்டு நாகரீக மக்களால் திட்டமிட்டு கட்டபட்ட ஒரு நகரத்தினுடைய தோற்றத்தை தருகிறது என்றால் அரப்பாவின் நகர் அமைப்பு பொறியியலின் சிறப்பை நீங்களே கற்பனை செய்துகொள்ளுங்கள். சிந்து நாகரீகத்தை தோற்றுவித்தவர்கள் யார் என்ற கேள்வி எழுந்தபோது, அது ஆரியர்களுடையதுதான் என்று அவசர அவசரமாக வலிந்து திணிக்கும் வேலைகள் நடந்தன. கேட்டிகாரனின் புலுகு எட்டு நாட்களுக்கே மேல் நிற்கவில்லை. ரிக் வேதமே சிந்து வெளி நாகரீகம் ஆரியர்களுடையது கிடையாது என்பதை ஆணித்தரமாக நிருபித்துவிட்டது. ரிக் வேத சுலோகங்கள் சிந்து நாகரீக மக்களுடன் சண்டையிட்டு அவர்களை மாணாவாரியாக கொன்று அழிப்பதைப்பற்றிதான் பேசுகிறது.


ஏகப்பட்ட ஆராய்ச்சி கோட்பாடுகளின் முடிவுகளின் படி சிந்து சமவெளி நாகரீகம் திராவிடர்களுடையது என்கிற முடிவிற்கு இன்றைக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்துசேர்ந்திருக்கிறார்கள். இதற்கு காரணம் சிந்து நாகரீக முத்திரை சின்னங்கள். இவைகளில் பொறிக்கப்பட்டிருக்கும் ஓவிய எழுத்துகளின் மூலம் தமிழ் மொழியில் இருந்து வந்திருக்கவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது. தமிழை அடிப்படையாக கொண்டு சிந்து வெளி எழுத்துகளை படிக்கும் ஆராய்ச்சிகள் தொடர்ந்துகொண்டிருக்கிறது. ஒரு சில எழுத்துகளுக்கு அர்த்தமும் கிடைத்திறுக்கிறது. ஆக சிந்து வெளி நாகரீகம் தமிழர்களுடையது என்பது பனித்திரையை விலக்கும் சூரிய பிரகாசம் போல் வெளி வந்துகொண்டிருக்கிறது.

இந்திய அரசாங்கம் இந்த உண்மையை அதிகாரப் பூர்வமாக அறிவிக்க தயக்கம் காட்டிவருகிறது. அந்த தயக்கத்திற்கு காரணம் எல்லோரும் அறிந்ததே. இப்பொழுது சிந்து வெளி நகரங்களின் சிறப்புகளைப் பார்ப்போம். வடக்கு தொடங்கி தெற்கு வரை நேர் கோட்டில் அரை மைல் தூரத்திற்கு அகலமான பிரதான தெரு இருக்கும். அதன் இரு புறமும் வீடுகள் அமைந்திருக்க அவைகளுக்கு இடையே சிறு தெருக்கள் நேர் கோட்டில் அமைநிதிருக்கும். ஒவ்வொரு தெருவும் இடைவெட்டும் இடங்களில் பொது கிணறுகள் உண்டு.

ஒரு தெருவிலிருந்து இன்னொறிர்கு செல்ல இந்த சிறு தெருக்களை பயன்படுத்தலாம். தெருக்கள் முழுவதும் கற்களால் பாவப்பட்டிருக்கிறது. வீடுகள் சுட்ட செங்கற்களால் கட்டபட்டவைகள். சில வீடுகள் மூன்று தளங்களை கொண்டவைகள். மூன்றாவது தளத்தில் கூட கழிப்பிடம் இருந்திருக்கிறது. நகரத்தின் கழிவு நீர் நிலத்தடி சுடுமண் குழாய்களின் மூலம் நகரத்திற்கு வெளியே தொலைவில் விடப்பட்டிருக்கிறது. வெளிநாடுகளில் இருக்கும் Drainage System போல்.

ஒவ்வொரு வீட்டிலும் சுட்ட செங்கற்களால் கட்டபட்ட கிணறுகள் இருந்திருக்கின்றன. அதைத் தவிர நகரத்திற்கு நடுவே மிகப் பெரிய ஏரிய போன்ற படித்துறைகள் கொண்ட குளமும் இருந்தது. அந்த குளத்தை சுற்றி மரக் கதவுகள் கொண்ட குளியல் அறைகள் இருந்தன. நகரத்திற்கு நடுவே மிகப் பெரிய தானிக் களஞ்சியம் ஒன்று இருந்தது. நேர்த்தியான கருவிகளின் மூலம் மரவேலைப்பாடுகள், கலைவேலைப்பாடுகள் மேற்கொண்டிருக்கிறார்கள். ஆண்களும், பெண்களும் வேட்டி போன்ற பருத்தியால் நெய்யப்பட்ட ஆடைகளை உடுத்தியிருக்கிறார்கள். பெண்கள் உதட்டு சாயமும், முகத்தில் பூசிகொள்வதற்கு வெள்ளை நிற அரவையும் உபயோகித்திருக்கிறார்கள்.

ஆண்கள் தாடியையும், மீசையையும் கத்தரித்து நேர்த்தியாவைத்திருந்திருக்கிறார்கள். பெண்கள் தலை முடியில் அழகு தரும் பல்வேறு பொருட்களை அணிந்திருக்கிறார்கள். நகருக்கு வெளியே விவசாய நிலங்களும், விவசாய குடிகளும் இருந்திருக்கிறார்கள். இந்த நகரங்கள் மிக முக்கியமாக தமிழ் வணிகர்களால் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆடல், பாடல் கலைகளில் தேர்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள்.

ஐந்தாயிரம் வருடங்களுக்கு முன்பு தமிழர்களின் நகர வாழ்வு எப்படி இருந்திருக்கும் என்று அறிந்துகொள்ள விரும்புபவர்கள் நிச்சயம் சிந்து வெளியின் நகர வாழ்க்கை குறித்த ஆராய்ச்சி புத்தகங்களை படிக்கவேண்டும் ஏனென்றால் சிந்து வெளி நாகரீகத்தின் உடமையாளர்கள் தமிழர்கள்.

Comments

Popular posts from this blog

கண்ணுறக்க நேர கதை சொல்லியின் கதை.

மந்திரம், மந்திரவாதி.....புத்தகத்தின் வெள்ளோட்ட சிறு துளி....

களப்பிரர் என்னும் கலி அரசர்