காத்திருக்கிறது வாயில் காப்போரின் நிலா சோறு கதைகள்


கடவுள் இந்த சொல் ஒன்று போதும், தமிழன் அடிமைத்தனத்தின் கீழ்த்தரமான எந்த நிலைக்கும் இறங்குவதற்கு தயங்க்கவேமாட்டான். 3000 வருடங்களுக்கு முன்பு இந்த ஒற்றை வார்த்தையை வைத்துதான் ஆரியமும், பார்ப்பனியமும் தமிழனின் நிலையை, தன்மானத்தை, சிறப்புகளை, கலைகளை அடகுக்கு எடுத்துக்கொண்டான். பார்ப்பனியம் வெகு சுலபமாக தமிழனின் ஓட்டுமொத்த வாழ்க்கைக்கும் ஆரிய சாயம் பூசிவிட்டது. மொழித் தொடங்கி கலைகள் வரை அனைத்தும் ஆரியப் பெயர்கள் தாங்கி ஓலைச்சுவடிகளில் ஏறின. தமிழனின் கட்டிடக் கலையும் இதற்கு விதிவிலக்கு கிடையாது. இன்று தமிழர்களின் கட்டிடக் கலையைப் பற்றி தெரிந்துகொள்ள விரும்பும் ஒருவர், மாய மதம், காசிப சில்பசாத்திரம் என்கிற இரு ஆரிய மொழி நூல்களைத்தான் படித்தாகவேண்டும். ஏமாந்த தமிழர்களின் கட்டிடக் கலை நுட்பங்களை தமிழ் மொழியிலிருந்து ஆரிய மொழிக்கு மொழிமாற்றம் (Translation) செய்து எழுதி எடுத்துக்கொண்டு அதைத் தமிழர்களிடமே காட்டி தமிழர்களின் கட்டிடக் கலை நுட்பத்திற்கு மூலம் தங்களின் சமஸ்கிருத நூல்கள் தான் என்று பார்ப்பனியம் சாதித்துவிட்டது. மூலத் தமிழ் நூல்கள் மாயமாய் மறைந்து போய்விட்டன இல்லை இல்லை மறைக்கப்பட்டன என்பதே வரலாற்று உண்மை.

பார்ப்பனியத்தின் மொழி சேட்டை கலப்பற்ற சில சங்க இலக்கியங்கள் தமிழர்களின் கட்டடக்கலையில் அமைந்த கோயில்களின் விதவிதமான பெயர்களைக் கூறுகின்றன. மணிக் கோயில், மாடக் கோயில் இப்படிப் பல கோயிலின் வகைகளை தெரிவிக்கின்றன. தமிழர்களின் கட்டிடக் கலை வரலாறு மிகப்பெரியது. ஆனால் இங்கே நாம் பார்க்கப் போகும் கட்டிடக் கலை உன்னதம் கங்கை கொண்ட சோழவரம் கோயில்.

தமிழ் நாட்டில் பிறந்த ஒவ்வொருவருக்கும் தஞ்சை பெரியக் கோயிலை பற்றி தெரிந்திருக்கும். அனேகர் தஞ்சை பெரியக் கோயிலை பார்த்தும் இருப்பார்கள். ஆனால் மிகப் பெரிய ஒரு அற்புதம் பல ஆண்டுகளாக வெகு மக்களின் கண்களிலிருந்து மறைந்தேயிருக்கிறது. அது கங்கை கொண்ட சோழவரம் கோயில். இந்த கோயில், கும்பகோணத்திலிருந்து, ஜெயங்கொண்டம் போகும் சாலையில் ஒரு சிறிய கிராமத்திலிருக்கிறது. தான் எந்தவிதமான அழகிய கலைத் தேவதையை மறைத்து வைத்திருக்கிறோம் என்று அறியாததுப் போல்தான் அந்த கிராமம் தோற்றமலிக்கும். பிரதான சாலையை விட்டு கிராமத்திற்குள் செல்ல செல்லத் தான் இந்த அழகிய Silent Killer நம்முன் தோன்றுவாள். அதிலும் நீங்கள் கலைப்பிரியர் என்றால் அவ்வளவுதான் தொலைந்தீர்கள். இந்த தேவதை உங்களை அப்படியே மடித்து தன் அழகிய வாயிக்குள் போட்டு முழுங்கியே விடுவாள்.

ஒரு பெண் பிள்ளையை வர்ணிப்பதுப்போல் இந்தக் கோயிலை வர்ணிப்பதாவது என்று நீங்கள் சற்று தயங்கலாம், ஒரே ஒருமுறை இந்தக் கோயிலைப் போய் பாருங்கள் பிறகு நீங்கள் பால் சுவை கண்டப் பூனைதான். நம்மில் பலர் கோயில்களை வழிபடும் இடம் என்றப் பொதுநோக்கில் அனுகுவதால், தமிழர்களின் உன்னத கலை படைப்புகளை ரசிக்கத்


தவறிவிடுகிறோம். பார்ப்பனிய பித்தலாட்டங்களையும் தாண்டி கோயில்கள் தமிழர்களுடைய கட்டிடக் கலையின் ஒட்டுமொத்த இருப்பிடங்கள். தமிழர்களின் சாபக்கேடு அவன் எழுப்பியிருக்கும் எந்த கட்டிடக் கலை அற்புதத்திற்கும் வழி வழி வரலாற்று செய்திகள் கிடையாது. தமிழர்களின் கட்டிடக் கலை புலமையை சொல்லும் அனைத்து கோயில்களும் ஆரிய கைலாய அவதாரங்களின் கதைகளால் நிரம்பிக்கிடக்கின்றன. தஞ்சை பெரியக் கோயிலில் நிற்கும் ஒருவர் அதன் வரலாற்று பின்னனியை தெரிந்துக்கொள்ள விரும்பினால் அவருக்கு வரலாறு என்கிறப் பெயரில் சொல்லப்படுவது அறிவிற்கு புரம்பான ஆரிய புராணக் கதைகள். உண்மை வரலாற்றை மறைக்கும் இந்த செயல் எவ்வளவு பெரிய மோசடி! உலகின் வேறு எந்த கலை அற்புதத்தின் வரலாற்றை தெரிந்துக்கொள்ள விரும்புபவருக்கும் இந்த மோசடி நடக்காது. வரலாற்று அறிவும், உணர்வும் சிறிதும் இல்லாத தமிழனும் கோயில்களில் வலிந்து கூறப்படும் தலவரலாறுகளை உண்மை என்று நம்பித் திரிகிறான். இப்ப யாரும் சாதி பாக்குறது இல்லை என்று வாய் நிறைய சொல்லும் மேல் வருணத்தார் பிறகு இன்னும் ஏன் தமிழக கோயில்களில் பரவிகிடக்கும் அவர்களுடைய மேலாண்மை கதை அபத்தங்களை கலையவில்லை?

கட்டிடக் கலையிலும், அளவிலும் ஏற்றக்குறைய தஞ்சை பெரியக் கோயிலும், கங்கை கொண்ட சோழவரம் கோயிலும் ஓன்றேப் போலத்தான் இருக்கும். கலை அனுபவமாக இந்த இரண்டு கோயில்களும் நமக்குள் ஏற்படுத்தும் தாக்கங்கள் வித்தியாசமானவைகள். தஞ்சை பெரியக் கோயிலின் அழகு கலைப்பிரியர்களை ஓரே அடியில் சாய்த்து விடும். அதன் பிரம்மாண்டத்திற்கும், கம்பீரத்திற்கும் அடிமையாகத்தான் நீங்கள் அந்த கோயிலின் அழகை அனுபவிக்க முடியும். தஞ்சை பெரியக் கோயிலில் இருக்கும் ஒவ்வொரு சிற்பமும் கம்பீரத்தையே நம்முன் நிறுத்தும். கோயிலின் சுற்றுசுவரில் இருக்கும் ஆடலழகிகள் கூட ஒருவித கம்பீர அழகுடனேயே நம்மை பார்த்து ஆடுவார்கள். இராச இராசனுக்கு முடிசூட்டுவதுப்போல் அமைந்திருக்கும் சிவன் கூட புன்னகை செய்தாலும், என்னை நெருங்கிவிடாதே என்று எச்சரிப்பதுபோலத்தான் இருக்கும்.

அதிலும் இடைநாழிக்கு (கருவறையையும் முன் மண்டபத்தையும் இணைக்கும் பகுதி) முன்னால் இரு புறமும் இருக்கும் வாயில் காப்போர்கள். நம் அடி வயிறு ஒரு நிமிடம் கலங்கித்தான் போகும். உருண்டு, திரண்டு கோயிலின் கூரையை முட்டும் உயரத்திற்கு நிற்கும் அவர்கள் பத்தாததிற்கு நாக்குகளை வேறு துறுத்திக்கொண்டு ஒரு காலை மடக்கி ஒரு காலில் நிற்கும் தோரணை பயத்தில் மேற்கொண்டு உங்களை நகரவிடாது. அதனாலேயே கலைப் பிரியர்கள் தஞ்சை பெரியக் கோயிலை ஆணின் கம்பீர அழகை பிரதிபலிக்கும் கோயில் என்பார்கள்.

தஞ்சை பெரியக் கோயிலைப் பார்த்தக் கண்களோடு நீங்கள் கங்கை கொண்ட சோழவரம் கோயிலை பார்த்தால் ஆச்சரியத்தில் வாய் தானே திறந்துக் கொள்ளும். ஒரே விதமான கட்டிட அமைப்பு எப்படி இப்படி வித்தியாசப்பட்டு நிற்க முடியும்! நளினம், அழகு, மென்மை இவைகளை இந்தக் கோயிலின் ஒவ்வொரு கல்லிலும் பார்க்கலாம். இந்தக் கோயிலின் அழகு போதைப் போன்றது. ஒவ்வொரு விநாடியாக உச்சி மண்டையை நோக்கி நகரக்

கூடியது. கண்கள் இரண்டும் தேன் கடலுக்குள் விழுந்த இரண்டு வண்டுகள் போலாகிவிடும். கலை போதை உச்சிக்கு ஏறி கால்கள் நடக்க மறுக்கும். நீ இப்படி ஆயிடுவேன்னு எனக்கு முன்னாடியே தெரியும் என்று கள்ளச் சிரிப்பு சிரிப்பது போலிருக்கும் இந்த கோயிலின் வெளித்தோற்றம்.

தஞ்சை பெரியக் கோயிலில் நீங்கள் பார்த்த அதே ஆடலழகிகள்தான் இந்த கோயிலின் சுற்றுசுவர்களிலும் இருப்பார்கள். ஆனால் அவர்களின் அழகு! மென்மை! உங்கள் உடம்பில் உயிரை மட்டும் விட்டுவைத்துவிட்டு மற்ற எல்லாவற்றையும் யாரோ உறிஞ்சி எடுத்துவிட்டதைப் போலிருக்கும். தஞ்சை பெரியக் கோயிலில் இராச இராசனுக்கு முடிசூட்டிய அதே சிவன்தான் இந்தக் கோயிலிலும் இராசேந்திரனுக்கு முடிசூட்டுவார் ஆனால் என்ன ஆச்சரியம் இந்த முறை புன்னகை செய்யும் சிவனின் மடியில் ஏறி விளையாடலாமா என்றுத் தோன்றும். அந்த அளவிற்கு சிவனின் முகத்தில் சிநேக பாவனை.

தஞ்சை பெரியக் கோயிலின் வாயில் காப்போர்கள்தான் இந்தக் கோயிலிலும் வாயில் காப்போர்கள். ஆனால் இவர்கள் நம்மைத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டு நிலாச் சோறு ஊட்டி கதைகள் சொல்லும் நெருக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள். இந்த கோயிலை பெண் தன்மை கொண்ட கோயில் என்று சொல்லலாம். தயவு செய்து இந்தக் கோயிலை வானில் சூரியன் இல்லாத மேக மூட்ட நாட்களில் சென்றுப் பாருங்கள். கார்மேக வானம் இந்த கோயிலின் உயிர்புடன் கூடிய அழகை வெளிப்படுத்திக் காட்டும். இந்த கோயிலுக்கு ஒன்றுக்குள் ஒன்றாக இரண்டு சுற்று சுவர்கள் உண்டு. இப்பொழுது முதல் சுற்று சுவர் முழுவதுமாக அழிந்துவிட்டது. இரண்டாவது சுற்று சுவர் ஏறக்குறைய பாதி அழிந்துவிட்டது.

இந்த கோயில், கங்கையை வெற்றிகொண்டதின் அடையாளமாக இராச இராசனின் மகன் இராசேந்திரனால் கட்டப்பட்டது. இராசேந்திரன் காலத்தில் இந்தக் கோயில் அமைந்திருந்த கிராமமே சோழ பேரரசின் தலைநகராக இருந்தது. இந்த கோயிலுக்கு பின்னால் சற்று தூரத்தில் காவிரி கறைபுரண்டு ஓடியிருக்கிறது. இராசேந்திரன் வாழ்ந்த கோட்டையும் இந்த கோயிலுக்கு சற்று தொலைவில் இருக்கிறது ஆனால் மணல் மேடாக. இங்கே இருப்பவர்கள் அதை கோட்டைமேடு என்று அழைக்கிறார்கள். கலை அனுபவத்திற்காக உலகம் முழுவதும் அலையும் கலைப் பிரியர்கள் கண்டிப்பாக இந்த கோயிலை காணவேண்டும். நம்முடைய நினைவில் நீங்காத இடத்தை பிடிக்க கூடிய கலை அழுகு இந்த கோயிலில் கண்ணாம் புச்சி ஆடிக்கொண்டிருக்கிறது.

Comments

Popular posts from this blog

கண்ணுறக்க நேர கதை சொல்லியின் கதை.

மந்திரம், மந்திரவாதி.....புத்தகத்தின் வெள்ளோட்ட சிறு துளி....

களப்பிரர் என்னும் கலி அரசர்