வற்றிய வயிறும் ஒரு சகாப்தமும்





வரலாறு மகத்தான மனிதர்களை, ஆளுமைகளை உருவாக்குகிறது. சில வேலைகளில் மனிதர்கள் வரலாற்றை உருவாக்குகிறார்கள். அபூர்வமாக வரலாறும் தனிப்பட்ட மனிதர்களும் சேரந்து சகாப்த்ததை உருவாக்குவார்கள். இதை ஆங்கிலத்தில் Era என்று அழைக்கிறார்கள். காலமே இத்தகைய சகாப்தங்களை தீர்மானிக்கிறது. திரை சகாப்தங்களில் ஒருவர் சார்லஸ் ஸ்பென்சர் சாப்ளின் (Charles Spenzer Chaplin). சகாப்தம் என்ற உடன் அவரைத் தலையில் தூக்கிவைத்துக்கொண்டாடவேண்டும், நாயக வழிபாடு செய்து தெய்வமாக்கவேண்டும் என்று எடுத்துக்கொள்வது வடிகட்டிய முட்டாள்தனத்திலும் வடிகட்டிய மூடத்தனம். சாதனையாக உயர்ந்தவர்களை, அவர்களின் இருண்டப் பக்கங்களை மறைத்துவிட்டு, சாதனைகளை மட்டுமே அந்த மனிதர்களுடைய வெற்றியின் அளவுகோலாக, முன்னுதாரணமாக வைத்து பிறரும் வாழ்க்கையில் அவரைகளைப் போலவே ஆகவேண்டும் என்கிற அபத்த சுயமுன்னேற்ற உலறல் அசிங்கங்களும் ஒரு வகையில் குருட்டு மூடநம்பிக்கைக்கு சமம்.

சாதித்தவர்களின் வாழ்வை, அவர்கள் அனுபவித்த ஏற்றத்தாழ்வுகளை, அவர்கள் சிக்கிக்கொண்ட நெருக்கடிகளை, அவர்கள் பயந்த பயங்களை எப்படிப் படித்து உள்வாங்கி உணரவேண்டும், ரத்தமும் சதையுமாக நம் முன் நிற்கும் அவர்களை எப்படி விமர்சித்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை பற்றி எல்லாம் நமக்கு கற்றுத்தரப்படுவதில்லை. சாதனையாளர்கள் என்றாலே அவர்கள் வெற்றிக் குதிரைகள், அவர்களுக்கென்று அந்தரங்க குற்றங்கள் கிடையாது. அவர்கள் போற்றப்படவேண்டியவர்கள். நடுநிலையான நேர்மையான விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள், அவர்களை விமர்சிப்பதே தேசவிரோதச் செயல் என்பது போன்ற பலத் தொற்று வியாதிகள் நம்மோடு பிறந்திருக்கின்றன.

சாதித்தவர்களின் பின்னால் கண்ணைமூடிக்கொண்டு ஓடுவது நமக்கு பிடிக்கும். ஆனால் அவர்களின் பலவீனங்களை ஓரவஞ்சனை இல்லாமல் அலசி பார்ப்பது நமக்கு பிடிக்காத ஒன்று. சுயலாபத்திற்காக நான்கு பேர் சேர்ந்துகொண்டு ஒருவரை ஆஹா ஓஹோ என்று சொன்னால் நாம் உடனே வாத்துக் கூட்டமாகிவிடுகிறோம். வரலாற்று நாயகர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள்தான், அவர்களுக்கும் வாழ்வில் சறுக்கிய தருணங்கள் உண்டு என்று ஆஹா ஓஹோ போட மறுப்பவர்கள் வெகு சன கருத்திற்கு விரோதிகளாக பாவிக்கப்படுகிறார்கள். சாதித்தவர்களை அவர்களின் தப்பிதங்களோடு சேர்த்து ஏற்றுக்கொள்வதுதான் நாம் அவர்கள் வாழும், வாழ்ந்த வாழ்க்கைக்கு செய்யும் மரியாதை என்கிற வாதம் ஏனோ இங்கு செவிடன் காதில் வாசித்த புல்லாங்குழலாகவே இருக்கிறது. சரி சாப்ளின் சங்கதிக்கு வருவோம்.

சொல்லிக்கொள்ளும்படியான புகழ் பெற்றிருந்த நாடக நடிகருக்கும், நாடக நடிகைக்கும் பிறந்தவர் சாப்ளின். சாப்ளின் என்பது குடும்ப பெயர். தந்தை திறமையான நடிகர் என்றாலும் குடிகாரர். குடியென்றால் இப்படி, அப்படி குடி இல்லை. எமக் குடியர். தாயும் சிறந்த நடிகை. நடிப்போடு அவருக்கு அழகாகப் பாடவும் வரும்.

இதன் காரணமாகவோ என்னவோ, குறைகள் இருந்தாளும் சிறுவயதிலேயே சாப்ளினுக்கு நடிப்பு வெகு இயல்பாக வந்தது. அதுவும் நகைச்சுவை நடிப்பு. சிரிப்பை வரவழைக்கும் உடல் மொழிகள் அந்த சிறுவனுக்கு சரளம். சாப்ளின் குழந்தையாக அதாவது இரண்டு, மூன்று வயதிருக்கும் போதே, தாயும் தந்தையும் பிரிந்தவிட்டார்கள். தந்தையின் குடியும், பெண் சகவாசமுமே காரணம். சாப்ளினுக்கு ஒரு அண்ணனும் உண்டு. சிட்னி சாப்ளின். ஆனால் அவர் வேறொரு தந்தைக்கு பிறந்தவர். மாற்றான் தகப்பன் மூலம் வந்த அண்ணன் என்றாலும் இருவருக்கும் இடையில் பாசத்திற்கு பிரச்சனைக் கிடையாது. தந்தை பிரிந்த பிறகு, தாயின் குரலும் பாதிக்கப்பட்டு நாடக வாய்ப்புகள் முடிந்துபோக, வீட்டில் வறுமை தட்டுமுட்டு சாமான்களோடு வந்து ஹாயாக படுத்துக்கொண்டது. தந்தை குடித்ததுப்போக மீந்த பணத்தை வாரத்திற்கு பத்து Shelling அனுப்புவது வழக்கம்.

மூன்று வேலைச் சோறு, இரண்டு வேலையானது. இரண்டு வேலையானச் சோறு, ஒரு வேலைச் சோறாக மாற இன்றைக்கோ நாளைக்கோ என்று ஆட்டம் காட்டிக்கொண்டிருந்தது. ஆறு வயதிலேயே சாப்ளினுக்கு பசியின் ருசித் தெரியும். சாப்ளினின் ஆறுவயதுத் தொடங்கி, பன்னிரண்டு வயதுவரை, மனிதர்கள் மூன்றுவேலை சாப்பிடவேண்டும் என்பதையே வறுமை அவரிடமிருந்து மறைத்துவிட்டது. சாப்ளினின் பள்ளி படிப்பும் எப்போதாவது மழைக்கு ஒதுங்கும் கதைதான். பதின் பருவங்களில் அவர் பள்ளி இருக்கும் திசையில் தலையை நீட்டியதும் கிடையாது. நல்லவேளை ரத்தத்தை உறிஞ்சும் அந்த வறுமையிலும் முட்டிமோதி பள்ளிக்குச் செல்லவில்லை. அவர் படிப்பை பிடித்திருந்தால் இன்று நம்மிடையே “The Kid”, “Modern Times”, “The Circus”, “Gold Rush” போன்ற அற்புதப் படைப்புகள் இருந்திருக்காது. ஏனென்றால் சிறுவயிதில் அவர் ஒருபோதும் நடிகனாக வரவேண்டும் என்று நினைத்தது கிடையாது. வயிற்றைக் கழுவத்தான் அவர் நடிகனாக நாடக கம்பெனியில் சேர்ந்தது. இருபது வயது வரை அவருக்கு கோர்வையாக எழுதவோ, படிக்கவோத் தெரியாது.

ஒரு வேலை சோற்றுக்கும் வழியில்லை என்கிற அந்த ஒரு நாள் வந்தேவிட்டது. தாய், பத்துவயதைக் கூடத் தொடாத சாப்ளின், சிட்னி மூவரும் அனாதைகள் காப்பகம் போய் சேர்ந்தார்கள். பின்னாலில் திரையில் அற்புதங்களைச் செய்யவிருந்த, சாப்ளினை காலம் வறுமையில் போட்டுத் துவைத்தெடுத்து, தனிமை சாயத்தையும் புசியது. அனாதைகள் காப்பகத்தில் தாய் ஒரு திசையில், அண்ணன் ஒரு திக்கில், சாப்ளின் தனிமையில். இன்று, வெறும் Outline Drawing- ஆக உருண்டை தொப்பி, கெக்கெபிக்கெ சுட், குட்டையான உருவம், கையில் walking stick, கால்களை தாண்டிய shoe-கள் இப்படி ஒரு உருவத்தை வரைந்தால் ஏறக்குறைய அதைப் பார்ப்பவர்கள் அனைவரும் இது சார்லி சாப்ளின் என்று சொல்லிவிடுவார்கள். இந்த மந்திரத்தை நிகழ்த்திய சாப்ளின் சிறுவயதில் பத்தோடு ஒன்று பதினொன்று தான். சிறிய உருவம் கொண்ட அவர் அமைதியான இயல்புகள் உடையவர். சிறுவயது சாப்ளினைக் காட்டி ஆளங்காட்டு சித்தர் தொடங்கி வெஸ்ட்மினிஸ்டர் சித்தர் வரை, பிற்காலத்தில் இந்த பையன், பெயரைக் கேட்ட மாத்திரத்தில் ஐரோப்பிய நாடுகள்



கழிந்துவிடக்கூடிய ஒரு தலைவரை திரையில், அந்த தலைவரின் கண் முன்னாலேயே நோண்டிநொங் எடுப்பான் என்று தலையிலடித்து சத்தியம் செய்திருந்தாலும், சாப்ளினேக் கூட நம்பி இருக்கமாட்டார். அவரின் குண இயல்புகள் அப்படி. வறுமையும், தனிமையும் சிறுவயதிலேயே அவரை அமைத்திப்படுத்தியிருந்தது. அனாதைகள் காப்பக நாட்கள் முடிந்து மூவரும் ஒரு சிறிய அறையில் குடியேறினார்கள். சாப்ளினின் தாய் தையல் வேலை செய்ய அண்ணனும் சிறிய வேலைகளைச் செய்தார். சாப்ளினும் தன் பங்குக்கு வேலைகள் தேடினார். சிறுவனான சாப்ளினுக்கு எளிதாக வேலை கிடைக்கவில்லை.

பூ விற்பது, கண்ணாடி தொழிற்சாலை வேலை, அச்சக வேலை, வீட்டு வேலை, மருத்துவரின் எடுபிடி, சிறுவர் நாட்டிய குழுவில் ஆடியது, பொம்மை தயாரித்து விற்பது, நாட்டியம் சொல்லித்தருவது இவையெல்லாம் ஒன்றின் பின் ஒன்றாக பத்து வயதிற்குள் சாப்ளின் பிழைப்பிற்காக பார்த்த வேலைகள். ஆனால் வறுமை மட்டும் வீட்டை விட்டு கிளம்பிய பாடு இல்லை. அந்நாட்களின் வறுமை குறித்து சாப்ளின் இப்படி பதிவு செய்கிறார். நாங்கள் கடுமையான வறுமையில் இருந்த காலம் அது. மிகவும் வறுமையில் இருக்கும் சிறுவர்கள் கூட ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டில் சமையல் செய்த உணவைத்தான் சாப்பிடுவார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் கூட வீட்டில் உணவு சாப்பிட முடியாதவர்கள் பிச்சைக்காரர்களைப் போன்றவர்கள்தான். நாங்கள் அந்த கூட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தோம். என் தாய் என்னை அருகிலிருந்த கடைக்கு அனுப்பி ஆறு பென்னிக்கு கிடைக்கக் கூடிய உணவை (வேகவைத்த ஒரு துண்டு மாமிசமும் இரண்டு காய்கறிகளும்) வாங்கிக்கொண்டு வரும்படி கூறுவார். கடையில் போய் அதை வாங்குவது என்பது மிகவும் அவமானமான ஒரு விசயமாக இருந்தது.

அந்நாட்களில் சமைக்கும் அடுப்புத் தொடங்கி அவர்கள் போட்டிருக்கும் துணிகள் வரை ஒவ்வொன்றாக விற்பனைக்கு வெளியே போனது. ஒரு கட்டத்தில் சாப்ளினும், அவருடைய அண்ணனும் தாயின் நாடக மேடை துணிகளை உடையாக தைத்து போட்டுக்கொள்ளும் படி ஆகிப்போனது. இருவரின் நல்ல உடைகளையும் ரொட்டித் துண்டுகள் கொண்டுபோய்விட்டன. சாப்ளினின் சிறுவயது நண்பர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். சொல்லப்போனால் அவருக்கு சிறுவயதில் நண்பர்களேக் கிடையாது. வறுமையின் காரணமாக அவர் தன்னை தானே தனிமைப்படுத்திக்கொண்டார். கிழிந்துப்போன காலணி, நைந்துப்போன உடைகளுடன் கடைத் தெருவில் சுற்றி வருவதுதான் அந்த சிறுவனின் பொழுதுபோக்கு. இந்நிலையில் அவர்களுடைய தாய்க்கு மனச்சிதைவு நோய் ஏற்பட்டது. தாய் மனநல காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். சட்டம் சிறுவர்கள் இருவரையும் சாப்ளினின் தந்தையே கவனித்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லிவிட்டது.

சார்லி சாப்ளின் முதன்முதலில் தன் தந்தையோடு சேர்ந்து இருந்த காலகட்டம் இதுதான். சாப்ளின் தந்தையின் வீட்டிலிருந்தாலும் தந்தை வீட்டிற்கு வருவது என்னவோ ஆடிக்கு ஒருக்கா அம்மாவாசைக்கு ஒருக்கா. சாப்ளின் தன் இயல்புப்படியே சித்தியை அனுசரித்து அவள் சொன்ன வேலைகளை செய்தாலும், சிட்னிக்கும் அவளுக்கும் ஆகாது. சித்தி


மொடாக் குடிகாரி. சாப்ளின் உள்ளுக்குள் இந்த குடிகாரியைப் பார்த்து நடுங்கியிருக்கிறார். சிலசமயங்களில் இவள் குடிவெறியில், இரு சிறுவர்களையும் நடுநிசியில் வீட்டை விட்டு விரட்டிவிடுவதும் நடக்கும். சாப்ளினின் தாய் குணமாகி வர மீண்டும் மூவரும் ஒரு சிறிய வீட்டிற்கு நகர்ந்தார்கள். இப்பொழுது சிட்னிக்கு கப்பலில் வேலைக் கிடைத்தது. சிட்னி முதல்முறை கப்பல் பயணம் போய்திரும்பியதும் சில மாதங்கள் மூவருக்கும் வறுமையிலிருந்து விடுமுறை கிடைத்தது.

நாற்பது வயதைக் கூட நெருங்காத சாப்ளின் தந்தை அசூரக்குடியால் மருத்துவமனையில் இறந்துப்போனார். தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துக்கொண்டதுபற்றி சாப்ளின் தன் சுயசரிதையில் இப்படி நினைவு கூறுகிறார். இறுதிச் சடங்கு செய்யும் நேரத்தில் மழை பெய்தது. குழியை வெட்டுபவர்கள் பெட்டியின் மீது மண்ணை எடுத்துப் போடும் போது நான் தேம்பித் தேம்பி அழுதேன். உறவினர்கள் அனைவரும் அதன் மீது பூக்களை எறிந்தார்கள். எங்கள் கையில் எதுவும் இல்லை. என் தாய் எனக்குப் பிடித்த கைக்குட்டையை எடுத்து எறிந்தவாறு மெதுவான குரலில் சொன்னார். நாம் ரெண்டு பேருக்கும் சேர்த்துதான் இது.

சிட்னி இரண்டாம் முறை கப்பல் பயணத்திற்கு சென்றுவிட, இம்முறை வறுமை தனியாக வராமல் பேச்சுத் துணைக்கு ஏழரைச் சனியையும் கூட்டிக்கொண்டு சாப்ளின் வீட்டிற்கு வந்துசேர்ந்தது. ஒருநாள் கடைத்தெருவில் சுற்றிவிட்டு வீடு திரும்பிய சாப்ளின் அதிர்ந்துபோனான். வீட்டின் முன் தெருவேக் கூடியிருந்தது. சாப்ளின் மெதுவாக வீட்டிற்குள் நுழைய, அங்கே கூடியிருந்த சிறுவர்கள் அவனை நிறுத்தி, உங்க அம்மாவுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்றார்கள். சாப்ளினால் நம்பமுடியவில்லை. அவன் இல்லாத நேரத்தில் அவனின் தாய், ஒவ்வொரு வீடாகச் சென்று கதவைத் தட்டி கிருஸ்துமஸ் பரிசாக அடுப்பு கரித்துண்டுகளை கொடுத்திருக்கிறார். அப்போது சாப்ளினுக்கு வயது பன்னிரெண்டு. உதவிக்கு அழைக்க தந்தையுமில்லை, அண்ணனும் கப்பலில் போயாகிவிட்டது. உறவினர்கள் என்றப்பேச்சுக்கே இடம் கிடையாது. பெரியவர்களேக் கூட இடிந்துப்போய்விடுகிற சூழல். விரட்டு விரட்டுன்னு விரட்டிய வறுமை சாப்ளினிடம் பக்குவத்தை மட்டும் விட்டுவைத்திருந்தது.

குடியிருந்த வீட்டின் சொந்தக்காரியோடு, தன் தாயை கால் நடையாக மனநல காப்பகத்துக்கு அழைத்துப்போன சாப்ளின் பின்னாலில் இந்த சம்பவத்தை பற்றி சொல்வதைக் கேளுங்கள், மருத்துவமனையில் இருந்தா அவங்களுக்கு நல்ல உணவு கிடைக்கும் வீட்டுச் சொந்தக்காரி என்னிடம் சொன்னாள். என் தாயின் ஆடைகளை மாற்றவும், தேவைப்படும் துணிகளை எடுத்து வைப்பதற்கும் அவள் எனக்கு உதவினாள். ஒரு குழந்தையைப் போல என் தாய் நாங்கள் சொன்னபடி நடந்தார். நாங்கள் வீட்டை விட்டு வெளியே வந்தபோது பக்கத்து வீடுகளிலிருந்த பெண்களும், சிறுவர்களும் கூட்டமாக வந்து கேட்டருகில் நின்றிருந்தார்கள். நடந்து செல்லும்போது என் தாய் சோர்வு காரணமாக மது அருந்திய பெண்ணைப்போல இப்படியும் அப்படியுமாக ஆடினார். நான் அவரைத் தாங்கி பிடித்துக்கொண்டேன். நாங்கள் எங்கு போகிறோம் என்ற விசயம் என் தாய்க்கு நன்கு தெரிந்திருந்தது. நான் அவருக்கு ஆறுதல் சொல்ல முயன்றேன். என் தாய் வெறுமனே புன்னகைத்தார் அவ்வளவுதான். தாயைத் மனநலக் காப்பகத்தில் சேர்த்த சாப்ளின் அடுத்த நொடி அனாதையாகத் தெருவில் நின்றார். அவரின் நிலையைச் சொல்லி அழுவதற்குக் கூட நாதியில்லை. எல்லாம் சரியாகிவிடும் என்று உதட்டளவில் சொல்வதற்குக் கூட ஆட்கள் கிடையாது. இந்த தருணங்களைப் பற்றி என்னத்தான் மாய்ந்து மாய்ந்து எழுதினாலும், இத்தகையத் தருணங்களை அனுபவித்தவர்களின் வார்த்தைகளிலேயே கேட்பதுதான் இழப்பதற்கு உயிரைத் தவிர இனி ஒன்றும் இல்லை என்பவர்களின் மீது வாழ்க்கை நடத்தும் கொடுரத் தாக்குதல்களை உணர்ந்துக்கொள்வதற்கு ஏற்றதாக இருக்கும்.

திரும்ப வீட்டை நோக்கி நடந்து வரும்போது நான் மொத்தத்தில் உணர்ச்சியற்றுப் போயிருந்தேன். என்னைத் திரும்பிப் பார்த்தவாறு நடந்து மறைந்த என் தாயின் உருவம் என்னுடைய மனதை விட்டு மறையவே இல்லை. இதயத்தை நெகிழச் செய்வதாக இருந்தது அந்த காட்சி........நேராக வீட்டிற்குச் செல்ல என்னால் முடியவில்லை. இருட்டும் வரை நான் கடை வீதியில் அலைந்து திரிந்து கொண்டிருந்தேன். திரும்ப வீட்டிற்கு வந்தபோது பயங்கரமான ஒரு வெறுமையை நான் உணர்ந்தேன்.....எனக்கு நல்ல பசி எடுத்தது. நான் எல்லா இடங்களிலும் சோதித்துப் பார்த்தேன் சாப்பிடுவது மாதரி அங்கு எதுவும் என் கண்ணில் படவில்லை........மேஜையின் மூலையில் என் தாய் தருவதாகச் சொன்ன மிட்டாய் கிடப்பதை நான் பார்த்தேன். என்னால் அழுகையை அடக்க முடியவில்லை. கவலையிலேயே நான் தளர்ந்துபோய் உறங்கிவிட்டேன்.........அதிகாலை நேரத்தில் நான் வீட்டை விட்டு வெளியேறுவேன். பகல் முழுவதும் வெளிலேயே சுற்றிக்கொண்டிருப்பேன். எல்லா நாட்களிலும் ஏதாவது சாப்பிடுவதற்குக் கிடைக்கிற மாதரியான வழிகளை நான் எப்படியோ உண்டாக்கிக்கொள்வேன்......யார் கையிலும் பிடிபடாத ஒருவனைப் போல நான் எல்லோரிடமிருந்தும் விலகி ஓடிக்கொண்டிருந்தேன்........தெருக்களில் தனியாக அலைந்து திரிந்தபோது, பகல் மிகவும் நீளமாக இருப்பதைப் போல் எனக்குத் தோன்றியது.

பிற்காலத்தில் Hollywood –ன் Box Office ரிகார்டுகளை ஏற்படுத்திய சாப்ளினின் அனேகமாக எல்லாப் படங்களிலும் மேலே அவர் சொன்ன கையறு நிலையின் சாயலை நாம் பார்க்கலாம். சாப்ளினின் படங்களில், அவர் ஏற்று நடித்த கதாப்பாத்திரங்கள் அனைத்துமே சிறுபிள்ளைத்தனமான, நடப்பைத் தேடும், ஏதும் அற்ற, அடுத்த வேலை சோற்றுக்கே திணறும், யாருமற்ற அனாதையாகத்தான் சித்தரிக்கப்பட்டிருக்கும். தெருவில், தெருவின் ஓரத்தில், இருண்டச் சந்துபொந்துகளில், Makeshift – வீடுகளில் வசிப்பதுப்போல்தான் அவருடைய கதாப்பாத்திரங்கள் இருக்கும். அவருடைய உன்னதப் படைப்புகளை, சாப்ளின் என்கிற மனிதனின் வாழ்வனுபவங்களை படித்தரியாமல் பார்த்தால், அவர் செய்யும் Slapstick  சேட்டைகளே நம்மை பெரிதும் ஈர்த்து சிரிக்கவைக்கும். நீங்கள் சாப்ளினின் சுயசரிதையைப் படித்துவிட்டு மீண்டும் ஒருமுறை சாப்ளினின் படங்களைப் பாருங்கள். இப்பொழுதும் சிரிப்பீர்கள் ஆனால் அந்த நகைச்சுவையின் பின்னால் மறைந்திருக்கும் வாழ்வின் கையறுநிலை உங்கள் கண்களைக் கண்ணீரால் கலக்கி இருக்கும்.






“The Kid”, “City Lights”, “The Circus”, “Modern Times”, “Gold Rush” போன்ற அவரின் உன்னத மற்றும் Box Office Block Buster  படைப்புகள் அனைத்துமே, ஆறுவயதுத் தொடங்கி பன்னிரெண்டு வயதுவரை அவர் வாழ்ந்த வாழ்க்கையின் பிரதிபலிப்பே. படங்களில் நகைச்சுவையாகத் தெரியும் சாப்ளினின் செயல்பாடுகள், சிறுபிள்ளையாக நிஜவாழ்வில் அவர் உடைந்து அழதுதீர்த்தத் தருணங்கள். தாயை மனநலக் காப்பகத்தில் சேர்த்துவிட்டு, அனாதையாக சுற்றி வந்த சாப்ளினுக்கு, சிட்னியிடமிருந்து ஒரு தந்தி. அவன் திரும்பி வருவதாக. தையல் போட்ட உடையும், கீழிந்து தொங்கிய காலணியுமாக அண்ணனை வரவேற்க இரயில் நிலையம் போய் நின்றார். இம்முறை கொஞ்சம் அதிகமான பணத்துடன் சிட்னி திரும்பியிருந்தான். சாப்ளின் தாய்க்கு ஏற்பட்ட நிலையை சொல்ல, சில நாட்கள் கழித்து இருவரும் தாயைப் பார்க்க சொல்கிறார்கள். அந்த சம்பவம் பற்றி சாப்ளின், சிட்னி தன்னுடைய வசதிகள் பற்றியும், பணம் சம்பாதித்ததைப் பற்றியும் சொல்லி என் தாயை சந்தோசப்பட வைக்க முயற்சி செய்தாலும் அவர் எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் உட்கார்ந்திருந்தார். அம்மா சீக்கிரம் குணமாயிருவீங்க நான் சொன்னேன். கட்டாயமா. அன்னைக்கு நீ எனக்கு ஒரு கப் காப்பி தந்திருந்தா. அப்பவே நான் நல்லா ஆகியிருப்பேன் என்று என் தாய் கவலையுடன் சொன்னார். என் தாயின் கவலை நிறைந்த அந்த வார்த்தை என்னைப் பாடாய்ப் படுத்திக்கொண்டிருந்தன.

இந்த சமயத்தில் தான் முதல்முறையாக அண்ணனும், தம்பியும் நாடக கம்பெனியில் சேருவதுப் பற்றி யோசித்தார்கள். குழந்தை நட்சத்திரமாக நாடக கம்பெனியில் வாய்ப்புத் தேடி போனதைப் பற்றி சாப்ளின், ‘Shoe-களுக்கு பாலீஷ் போட்டு, நல்ல ஆடைகளை அனிந்து, கவர்ச்சியான காலரை அணிந்து பெட்போர்ட் தெருவிலிருந்த ப்ளாக் மூர்ஸ் நாடக ஏஜென்ஸிக்கு நான் அவ்வப்போது செல்வேன்......நான் முதல் தடவையாக அங்கு சென்றபோது, மிடுக்காக உடைகளணிந்து ஏராளமான நடிகர் நடிகைகள் அங்கு நின்றிருந்தார்கள். தையல்போட்ட கால்சட்டையையும், கிழிந்த காலணியையும் மறைக்க முயற்சி செய்தவாறு வெட்கத்துடன் நான் ஒரு மூலையில் பதுங்கிக்கொண்டு நின்றிருந்தேன்.

சாப்ளினுக்கு ப்ளாக் மூர்ஸ் நாடக ஏஜென்ஸி என்னும் தொழில் முறை நாடக கம்பெனியில் நடிக்க வாய்ப்புக்கிடைத்தது. ஷெர்லாக் ஹோம்ஸ் நாடகத்தில் முதல் வாய்ப்புப் பற்றி சாப்ளின், நாடகத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் ஒன்றான ஸாம்மியை ஏற்று நடிக்கும்  வாய்ப்பு எனக்கு கிடைத்தது. வசன தாள்களை என் கையில் தந்தபோது, அதை அங்கேயே என்னை வாசித்துக்காட்டும்படி கூறி விடுவார்களோ என்று நான் பயந்தேன். மிகவும் சிரம்பபட்டே என்னால் படிக்க முடியும் என்பதுதான் அதற்கு காரணம். சாப்ளினின் வாழ்வில் மிக முக்கியமானத் திருப்பு முனையாக அமைந்தது இந்த முதல் நாடக வாய்ப்பு. அவரும் இது வாழ்வில் நமக்கான முக்கியத் திருப்பு முனை என்பதை உணர்ந்தேயிருந்திருக்கிறார். அப்போது அவருக்கு வயது பன்னிரெண்டு. அடுத்தப் பன்னிரெண்டே வருடங்களில் சாப்ளின் 1914 தன்னுடைய முதல் திரைப்படத்தில் நடித்தார். படத்தின் பெயர் Making A Living.  அப்போது அவருக்கு வயது இருபத்தி நான்கு. இதற்கு பிறகு


மற்றவை எல்லாமே வரலாறு. ஒரு கட்டத்தில் Hollywood-ன் பணம் காய்க்கும் மரமானார் சாப்ளின். Hollywood-ன் முக்கியப் பகுதியில் ஐந்து ஏக்கர் நிலம், The United Artists  தயாரிப்பு நிறுவனம் என்று உச்சங்களைக் கடந்தார்.

சாப்ளின் நாடகங்களில் நுழைந்த காலத்தில் குணமாகி வீடு திரும்பிய அவருடைய தாய், சில வருடங்களில் மீண்டும் மனச் சிதைவுக்கு உள்ளானார். இதன் பிறகு அவர் முழுமையாக குணமடையவேயில்லை. அமெரிக்காவில் சாப்ளின் தன் தாய்க்காக ஒரு ஆடம்பர வீட்டைக் கட்டினார். பிற்காலத்தில் கொஞ்சம் குணமடைந்த அவருடைய தாய் இங்கு தான் வசித்தார். மற்றவைகள் வரலாறு என்று நாம் எளிதாக சொல்லிவிட்டாலும், தொடக்கத்தில் அவர் நாடக வாழ்க்கை அப்படி ஒன்றும் மிகப் பெரிய வெற்றிக்கிடையாது. ஒப்பந்த காலங்கள் முடிந்து, வேலையற்ற நாட்களுக்கு இடையிலேயே அவருக்கு நாடக வாய்ப்புகள் வந்தன. அந்த காலப் பகுதி குறித்து சாப்ளின், கலை என்றச் சொல் எனக்குள் இருந்ததே இல்லை. வாழ்வதற்கான ஒரு வழியாக மட்டுமே நான் நாடகத்தைப் பார்த்தேன்.......காஸேஸ் சர்க்கஸ் என்ற நகைச்சுவை நடிகர்களின் குழுவில் எனக்கு வேலைக் கிடைத்தது. ஒரு நகைச்சுவை நடிகன் என்ற நிலையில் நான் வளர்ந்தது இங்குதான்.

பல தோல்விகளுக்கு பிறகே சாப்ளின் கார்னோ நாடக் கம்பெனியில் வாய்ப்பு பெற்றார். இந்த நாடக் கம்பெனிதான் சாப்ளினின் சகாப்தம் தொடங்குவதற்கு உதவியாக இருந்தது. கார்னோ குழுவுடன் முதல்முறை அமெரிக்கா சென்றபோதே அவர் அமெரிக்கர்களின் கழுத்தைப்பிடித்து தன் பக்கம் திருப்பிக்கொண்டார். இரண்டாம் முறை இந்த குழுவுடன் அமெரிக்கா வந்தவர் அங்கேயே தங்கிவிட்டார். விரைவிலேயே Hollywood-ன் பார்வை அவர் மீதுப் பட்டது. KeyStone கம்பெனி முதல்முறையாக சாப்ளினை திரைப்படங்களுக்கு ஒப்பந்தம் செய்தார்கள். இங்குதான் சாப்ளினின் புகழ்பெற்ற அந்த கெக்கெபிக்கெ கதாப்பாத்திரம் உருவானது. நாடக குழுவில் தன் சக நடிகர் ஒருவருடைய சொந்த கற்பனையில் உருவான அந்தக் கதாப்பாத்திரத்தின் நடை, உடை, பாவணைகளை சாப்ளின் திரைப்படத்திற்காக திருடிக்கொண்டார் என்றக் குற்றச்சாட்டு அவர் மீது உண்டு. தனக்கு கலை ஆர்வமெல்லாம் இல்லை என்று சாப்ளினே நேரடியாக கூறுவதால், இந்த குற்றச்சாட்டு உண்மை என்பதற்கு முகாந்திரம் உண்டு.

இன்னொருவரின் கற்பனையில் உருவானக் கதாபாத்திரத்தை திருடுவது என்பது மற்றவர் வாந்தி எடுத்து வைத்ததை வாரி வளைத்து தின்பதற்கு சமம். சகாப்தங்களை உருவாக்குபவர்கள் சறுக்குவது இப்படித்தான். ஆனாலும் சாப்ளின் இந்த குற்றசாட்டை மறுத்தார். இந்த கதாபாத்திரம் முழுக்க முழுக்க தன்னுடைய சொந்த கற்பனை என்றார். காலம் உண்மையை குற்றம் சாட்டியவரின் மனசாட்சியோடும், சாப்ளினின் மனசாட்சியோடும் வைத்து புதைத்துவிட்டது. சாப்ளினின் சினிமா சகாப்தத்தில் The Great Dictator படம் மிக மிக முக்கியமான படம். ஆனால் அதைப் பற்றிய விசயங்களை தனி கட்டுரையாக பார்க்கலாம். இந்த படத்திற்கு பிறகு சாப்ளினுக்கு கம்யூனிஸ்ட் சாயம் பூசப்பட்டது. இந்த வேலையை, யூதர்களின் பிடியிலிருக்கும் அமெரிக்க ஊடகங்கள் கண்ணும் கருத்துமாகச் செய்தன. காரணம், இரண்டாம் உலகப் போருக்கு பிறகு ரஷ்யா மேற்கொண்ட போருக்கு எதிரான ஊர்வலங்களில் சாப்ளின் கலந்துக்கொண்டது. சாப்ளின் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்பட்டார். சாப்ளினின் இறுதி காலத்தில்-அவரை கம்யூனிஸ்ட் ஆதரவாளர் என்பதால் தேசத் துரோகி என்று விரட்டிய அதே அமெரிக்கா முப்பத்திரண்டு பற்களும் தெரிய வெட்கமே இல்லாமல் இளித்துக்கொண்டு, அவரை அழைத்து வாழ் நாள் சாதனைக்கான ஆஸ்கார் விருதைத் தந்தது. இதைவிட கொடுமை எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் இதற்காகவே காத்திருந்ததுப் போல் சாப்ளினும் அமெரிக்காவிற்குள் போய் புகுந்துகொண்டார். ஒரு விழா ஏற்பாடு செய்து அமெரிக்கா அவருக்கு குடிமகன் அந்தஸ்த்தையும் வழங்கியது. இந்த விழாவின் போது அமெரிக்க மக்களும், சாப்ளினும் மாறி மாறி நெஞ்சை நக்கிக்கொண்ட காட்சிகள் YouTube-ல் காணக்கிடைக்கிறது.

சிறுவயதில், தேற்றுவதற்கு ஆளில்லாமல் தனிமையில் அழுதுதீர்த்தத் தருணங்களை, வெகு அழகாக நகைச்சுவையின் இடையே அவருடையக் கதாபாத்திரங்கள் வெளிப்படுத்தும். வறுமையினால் தொலைந்துப்போன தன்னுடைய சிறுவயது சேட்டைகளை, 30 வயது உடம்பில் சார்லி சாப்ளின் வெளிப்படுத்துவார். அது நகைச்சுவைதான் என்றாலும் அனுபவிக்காமல் கடந்துபோன சிறுவயதை மீண்டும் கட்டமைக்க முயலும் சாப்ளினின் தவிப்பு. அவருடைய எல்லாப் படங்களிலும் இதற்கு உதாரணங்கள் உண்டு என்றாலும், Solider Arms படத்தில் ஒரு காட்சி அப்பட்டமாக இதை சித்தரிக்கும்.

போர் வீர்ராக இருக்கும் சாப்ளின், எதிரிகளை அவர்களின் ஜெனரலோடு பிடித்துக்கொண்டு ஒரு பங்கருக்குள் வருவார். வந்தவுடன் கைதிகளுக்கு சிகரெட் தருவார். ஜெனரலுக்கும் தருவார் ஆனால் அந்த ஜெனரல் சாப்ளின் தரும் சிகரெட்டை அலட்சியமாக தூக்கி வீசிவிடுவார். கடுப்பாகும் சாப்ளின் அந்த ஜெனரலை அப்படியே தலைக்குப்புறத் தூக்கி மடியில் போட்டு மேல் சட்டையை விலக்கி பின்புறத்தில் கைகளால் இரண்டு அடிக்கொடுப்பார். குறும்பு செய்யும் சிறுவர்களை குனியவைத்து பின்புறத்தில் அடிப்பதுப்போல. இந்த காட்சி சிரிப்பை வரவழைத்தாலும் ஒரு போர் வீரர் செய்யக் கூடிய செயல் இல்லை இது.

அதேப் போல் ஏறக்குறைய எல்லாப் படங்களிலும் சாப்ளின் விட்டோத்தியாக சுற்றியலைபவராகத்தான் நமக்கு அறிமுகப்படுத்தப்படுவார். அவர் சிறுவயதில் நண்பர்களின் துணை இல்லாமல் தெருக்களில் அலைந்து திரிந்ததின் பிரதிபலிப்பு போல் அவைகள் இருக்கும். யாருமே இல்லாமல் கதியற்றுக் கிடக்கும் அவருடைய கதாபாத்திரம், ஏழைகளுக்கு உதவுவதாகவும், பணக்காரர்களைப் பார்த்து பிரம்பிப்பதாகவும் காட்டப்படும். நிஜ வாழ்வில் தான் அனுபவித்த சோகமும், வறுமையும், தனிமையும் நிறைந்த தருணங்கைள சாப்ளின் தன்னுடைய படங்களில் நகைச்சுவையாக வெளிப்படுத்துகிறார். அந்தக் காட்சிகளைப் பார்க்கும் பிறருக்கு சிரிப்பு வந்தாலும், அவைகளை பார்க்கும் சாப்ளின் உள்ளுக்குள் அழுதிருக்கலாம்.



கண்ணதாசன் சொல்லுவதுப்போல , சாப்ளின் தன் படங்களைப் பார்த்து அழுதுக்கொண்டே சிரித்திருக்கலாம்.


Naveena Alexander
naveenaalexander.blogspot.in

Comments

Popular posts from this blog

கண்ணுறக்க நேர கதை சொல்லியின் கதை.

மந்திரம், மந்திரவாதி.....புத்தகத்தின் வெள்ளோட்ட சிறு துளி....

களப்பிரர் என்னும் கலி அரசர்