நியாயத்தைப் புரட்டும் மனிதநேயத்தின் மனசாட்சிகள்


இனப் பற்றும் மொழிப் பற்றும் நிலவியல் சார்ந்தது. உலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்த நிலவியல் சார்ந்தப் பற்றுகளை தன்னுடைய தினசரி வாழ்வில் பிரதிபலிப்பவனாக இருக்கிறான். மொழி இன அடையாளங்கள் இல்லாமல் மனிதர்கள் தங்களின் வாழ்வை கடந்துப்போவது கடினம். நாம் பேசும் மொழியும், அந்த மொழி கட்டமைக்கிற இனமும் இந்த உலகில் நமக்கான விலாசத்தை உருவாக்குகின்றன. ஐரோப்பியர்கள் என்று சொன்னால் உடனடியாக நம்முடைய மனம் அவர்கள் பேசும் மொழியையும், அவர்களின் இனம் சார்ந்த பழக்க வழக்கங்களையுமே முதலில் கற்பனை செய்யும். மானுடவியலாளர்களைக் கேட்டுப்பாருங்கள் (Anthropologist) மொழியும் இனம் சார்ந்த தகவல்களும் மனித இனத்தின் வரலாற்றைக் கட்டமைப்பதற்கு எவ்வளவு முக்கியம் என்று, பக்கம் பக்கமாக விலக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

மொழி பற்றும் இனப் பற்றும் ஒவ்வொரு மனிதனுடைய பிறப்பு உரிமை. உலகில் எந்த மூலையிலும் மனிதனின் இந்த உரிமையை விமர்சிப்பது வாழ்வதற்கான அவனுடைய அடிப்படை சுதந்தரத்தில் தலையிடுவதற்கு சமம். ஆனால் இந்தியா மட்டும் இதற்கு விதிவிலக்கு. இங்கே இந்த உரிமையைப் பற்றி பேசுபவர்களை ஒருவரால் வெகு அலட்சியமாகவும், கீழ்த்ரமாகவும் விமர்சிக்க முடியும். தனி மனித உரிமைகள் என்பது இந்த நாட்டைப் பொறுத்தமட்டில் மொழி அகராதியில் இருந்தே அகற்றப்பட வேண்டிய சொல். இங்கே, சமூக பிரச்சனைகளிலிருந்து  வெகு மக்களை திசை திருப்பும், திசை திருப்பிகள் குவிந்து கிடக்கிறார்கள். இந்த திசை திருப்பிகள் முன் வைக்கும் வார்த்தைதான் மனித நேயம்! இந்த வார்த்தைக்கான நடைமுறை (Practical) அர்த்தம் இவர்களுக்கு தெரியுமா என்பது அந்த கடவுளுக்கே வெளிச்சம்.

மொழி இன சிறப்புகளைப் பற்றி பேசுபவர்களின் முன்னால் குபிரென்று குதிக்கும் இந்த திசை திருப்பிகள் முன் வைக்கும் வாதம் மனித நேயம். இந்த உலகில் இனம் மொழி என்ற பாகுபாடே இருக்கக் கூடாது, எனென்றால் நாமெல்லாம் மனிதர்கள் அதனால் மனித நேயம் தான் முக்கியம் என்பது இவர்களின் தத்துவ போதனை. அதிலும் இவர்களிடம் நீங்கள் தமிழன் என்று வாயைத் திறந்தாலேப் போதும், அடுத்த நிமிடம் உங்களுக்கு கிடைக்கக் கூடியப் பெயர்கள் தமிழ் Fascist ,  இன வெறியன், தேசத் துரோகி. இந்த உலகில் இருக்கக் கூடிய தத்துவங்களில் எந்த தத்துவம் ஒரு மொழியின் இனத்தின் சிறப்புகளையும், பெருமைகளையும் பேசுவது Fascism, இனவெறி, தேசத் துரோகம் என்று விளக்கம் கொடுக்கிறது என்பது இந்த  மனித நேய ஆர்வளர்களுக்கே வெளிச்சம்.

இந்த ஆர்வளர்களின் மனித நேய தத்துவ போதனையெல்லாம் இந்தியாவிலேயே தமிழர்களுக்கு மட்டும்தான். மனித நேய புண்ணிய ஆத்மாக்கள் தமிழக எல்லையைத் தாண்டி இந்தியாவின் வேறு எந்த பகுதிக்கும் இந்த போதனைகளை எடுத்துச்சொல்வது கிடையாது. இவர்களைப் பொறுத்த வரை தமிழும், தமிழனும், தமிழனின் சிறப்புகளும்


காட்டுமிராண்டித்தனமானவைகள். அப்படியென்றால் தமிழ் நாட்டைத் தவிற ஒட்டுமொத்த இந்தியாவிலும் புத்தர்களும், காந்திகளுமா வாழ்கிறார்கள்? அடேயப்பா! அப்படியென்றால் ஏன் இந்த புத்தர்களும், காந்திகளும் அடுத்த மாநிலத்துக்காரனின் உரிமைகளை மதிக்க மறந்துவிடுகிறார்கள் என்று உங்களுக்குள் கேள்வியெழலாம், ஆனால் அதை பற்றியெல்லாம் காட்டுமிராண்டித் தமிழர்கள் கேட்க கூடாது!

நான்கு பக்கங்களிலிருந்தும் தமிழன் வஞ்சிக்கப்படும் போது இந்த மனித நேய ஆர்வலர்களின் மனசாட்சி சத்தம் காட்டாமல் எங்காவது தூர தேசங்களில் மேயப் போய்விடும். ஆனால் வஞ்சிக்கப்படும் தமிழன் மாரடித்துக் கதறும்போது மட்டும் இவர்களின் அந்தராத்மா சகல விதமான மனித நேய ஒப்பனைகளையும் செய்துக்கொண்டு சபையில் வந்து அமர்ந்துவிடும். இழவு வீட்டில் ஈட்டிக்காரன் போல. ஆறுகள் காய்ந்துப் போனதால் விவசாய நிலங்களை வரட்சிக்கு காவு கொடுக்கும் தமிழன், யானைக் கட்டி போரடித்த தன் சிறப்பைச் சொல்லி மாரடித்து புலம்புவது, இவர்களுக்கு இனவெறிப் புலம்பலாக கேட்கிறது. காவுக்கு கொடுத்தவனின் வேதனை புலம்பலை காட்டுமிராண்டித் தனம் என்று சொல்லுவது எந்த வகை நாகரிகமோ!

காவிரியில் தண்ணீர் கொடுக்க மறுக்கும் கர்நாடக்கத்துக்காரனின் மனித நேய சிறப்பை எதிர்த்து தன்னுடைய உரிமைக்காக தமிழன் குரல் கொடுக்கும் போது எல்லாம் மனித நேய ஆர்வலர்களுக்கு பொத்துக்கொண்டு வந்துவிடும். உரிமையை கேட்கும் தமிழன் தன் சிறப்பைப் பேசிவிட்டால் போச்சு தேச ஒற்றுமைக்கு ஆபத்து வந்துவிட்டதாக இந்த புண்ணியவான்கள் வானத்துக்கும் பூமிக்குமாக குதிக்க ஆரம்பித்துவிடுவார்கள். தமிழர்கள் இனவெறியைத் தூண்டுகிறார்கள் என்று தங்களின் தத்துவ போதனை விளக்க புத்தகத்தை திறந்துவிடுவார்கள். இவர்களின் தத்துவ போதனை விளக்க குறிப்புகளின் படி, நியாயத்தின் பக்கம் நடந்து தமிழர்களுக்கு தண்ணீர் கொடுக்க மறுப்பவன், இந்திய மக்களின் மனித நேய உள்ளொலியைத் தூண்டிவிடுபவன் போலும்! எப்படி நித்தி வெட்ட வெளியில் குண்டலினியை பக்தர்களிடம் தூண்டினாரோ அதுப்போல!

மனித நேய கடமைகளில் ஒன்று மற்றவர்களின் உரிமைகளை மதிப்பது மேலும் அந்த உரிமைகளுக்கு எந்த நிலையிலும் பாதுகாப்பு அளிப்பது. நம்முடைய மனித நேய ஆர்வலர்களின் கூற்றுப்படி கர்நாடகத்தில் வாழும் நாகரீகமடைந்த புத்தர்களும் காந்திகளும் ஏன் காவிரியில் காட்டுமிராண்டித் தமிழர்களுக்கான உரிமையை கனவிலும் விட்டுத் தர மாட்டேன் என்கிறார்கள்? நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்பார்கள் அதுபோல நாகரீகமடைந்த கர்நாடகத்து மாநிலத்தவன் யாரும் கேட்காமலேயே தமிழனின் உரிமையை விட்டு கொடுத்திருக்க வேண்டுமே? உச்ச நீதிமன்றம் தொடங்கி நடுவர் மன்ற ஆணையங்கள் வரை காவிரியில் தமிழனின் உரிமையை உறுதி செய்தும் அதையெல்லாம் என் முதுகுக்கு சொல்லு என்று நடந்து கொள்ளும் கர்நாடகத்துக்காரனின் இந்த செயல் நாகரீகத்தின் எந்த இயலை குறிக்கிறது என்று தமிழர்களின் மத்தியில் வாழும் மனித நேய ஆர்வலர்கள் கொஞ்சம் அவர்களின் திரு வாய் மலர்ந்து அருளுவார்களா? ஒருவேளை


உச்சநீதிமன்றங்களையும், உயர்நீதிமன்றங்களையும் மதிக்காமல் நடந்து கொள்வதுதான் தேச ஒருமை பாட்டுக்கு நல்லது போலும்!

இந்த மாதரி விசயங்களை பே.......சித் தா......ன் தீர்...........க்கனும் என்று இழுவைப் போடும் புது உலக மனித நேய ஆர்வலர்கள், பேசி பேசியே கடந்துப் போன இருபத்தைந்து வருடங்களைப் பற்றி மறந்தும் வாய் திறப்பதில்லை. இந்த இருபத்தைந்து வருடங்களாக கர்நாடகத்துக்காரன் தேச பக்தியை வளர்க்கும் விதமாக காவிரியை வைத்து விளையாடும் அரசியல் சித்து விளையாட்டுகளை சத்தம் காட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த புண்ணியவான்கள் தமிழன் இது முறையா என்று கேட்டால் மட்டும் தமிழர்கள் காவிரி பிரச்சனையை அரசியல் ஆக்குகிறார்கள் என்று பசப்புகிறார்கள். ஆக அடுத்தவனுக்கு ஒரு நியாயம் தமிழனுக்கு ஒரு நியாயம்!

தமிழனுக்கு உரிமையான முல்லைப் பெரியாறு அணையை எப்படியாவது இல்லாமல் செய்து ஈடுக்கி அணையை நிரப்பி மின்சாரம் எடுக்கத் துடிக்கும் கேரளத்தவனை எதிர்த்து தங்களின் தார்மீக கோபத்தை தமிழன் வெளிப்படுத்தினால் இந்த காட்டுமிராண்டி தமிழர்களே இப்படிதான் எல்லாவற்றையும் பிரச்சனை ஆக்குகிறார்கள் என்று வெள்ளாட்டுத் தோள் போர்த்திய மனித நேய குள்ள நரிகள் தமிழர்களை ஏளனம் செய்கிறார்கள். இன்னொரு மாநிலத்தவனுக்கு சொந்தமான அணையை இடிக்கத் துடிக்கும் கேரளத்தானின் இந்திய தேச பக்தியை பற்றி இந்த குள்ள நரிகள் உதட்டளவில் கூட விமர்சனம் செய்யத் துணியாதது ஏன்? கேரளத்து அரசியல்வாதிகளின் கீழ்தரமான அரசியல் நடவடிக்கைகளை உடனுக்கு உடன் கண்டிக்கும் திரு.வை.கோ போன்றவர்களை பிரிவினைவாதிகள் என்று விமர்சிப்பதற்கு மட்டும் இவர்களின் வாய் இந்த காது தொடங்கி அந்த காது வரை கிழிகிறது.

மனித நேயத்தை ஒட்டுமொத்த குத்தகைக்கு எடுத்தவிட்ட இந்த குள்ள நரிகள் ஒருபோதும் தவித்தவன் வாய்க்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் என்கிற மனித நேயத்தை வாய் மொழிவதே கிடையாது. தவித்தவன் வாயும், தண்ணீருக்கு தவிக்கும் விவசாய நிலமும் ஒன்றுதான் என்பது இந்த மகா புருசர்களின் அறிவுக்கு அப்பாற்பட்டது. அடுத்தவனுக்கு தண்ணீர் கிடைத்துவிடக் கூடாது என்பதே இவர்களைப் பொறுத்த அளவில் தேச பக்தி மிக்க செயல். அடுத்தவன் வயிற்றில் அடிப்பதே இவர்களைப் பொறுத்த மட்டில் நாகரீகம். இவைகளை எதிர்த்து குரல் கொடுப்பவர்களைக் கண்டால் இவர்களுக்கு ஆகாது. தங்களின் உரிமைகளுக்காக போராடுபவர்களை உடனடியாக தேசத் துரோகிகளாக கட்டமைப்பதுதான் இந்த மனித நேய ஆர்வலர்களின் தலையாய கடமை.

நான்கு பக்கமும் படையெடுக்கும் அக்கிரமங்களுக்கு எதிராக தங்களின் இனம் உணர்வுப் பூர்வமாக விழித்து எழவேண்டும், உரிமைகளுக்காக எதிர் குரல் எழுப்பிடவேண்டும் என்கிற நோக்கில் தமிழின ஆர்வலர்களும், தமிழ்மொழி ஆர்வலர்களும் இன சிறப்புகளையும், மொழி சிறப்புகளையும் தம் மக்களிடத்தில் பரப்பும் செயல்களை மேற்கொண்டால் அவைகளை Fascism என்றும், தீவிரவாதம் என்றும், காட்டுமிராண்டித் தனம் என்றும் வாய் கூசாமல் குற்றம் சுமத்துவது எந்த வகை நாகரீகம்? வஞ்சிக்கப்படுபவன் எதிர் வினை புரியக்கூடாது என்பது மனித நேயத்திற்கு எதிரான அராஐக ஆதிக்கத்தின் வெளிப்பாடு. அடிப்பட்டு வலியால் துடித்து கதறுபவனை பார்த்து வாயே திறக்காமல் வலியை அனுபவித்துதான் தீரவேண்டும் என்று கட்டாயப்படுத்துவதற்கு பெயர் மனித நேயம் என்றால் மற்றவர்களின் வலியை கண்டு துடிப்பதற்கு பெயர் என்ன? தீவிரவாதமா! இல்லை Fascism-மா!

Comments

Popular posts from this blog

கண்ணுறக்க நேர கதை சொல்லியின் கதை.

மந்திரம், மந்திரவாதி.....புத்தகத்தின் வெள்ளோட்ட சிறு துளி....

களப்பிரர் என்னும் கலி அரசர்