முரட்டுக் கூத்தாடி – எம்.ஆர்.ராதா


மதராசு ராசகோபால ராதாகிருசண நாயுடுவை பழைய கருப்பு வெள்ளைத் திரைப்படங்களில் தோன்றும் வில்லன் நடிகராகவோ, நகைச்சுவை நடிகராகவோ நம்மில் பலர் நிச்சயமாக அறிந்திருப்போம். இன்னும் சிலர் அவரின் திரைப்படமான ரத்தக் கண்ணீர் மூலம் அவரின் ரசிகராக கூட இருக்கலாம். ஆனால் நம்மில் எத்தனைப் பேருக்கு தன்மானமே பெரிது என்று சமரசத்திற்கு இடமலிக்காமல் வாழ்ந்து மறைந்த எம்.ஆர்.ராதாவின் கலகம் கலந்த புரட்சிகர இன்னொரு முகம் தெரியும்? செல்லுலாய்டில் மட்டுமே புரட்சியும், கலகமும் செய்து தங்களின் பெயர்களுக்கு முன்னால் பட்டங்களை வெற்றுப் பெருமையாக போட்டுக் கொண்டவர்களின் மத்தியில், தன் வாழ்வையே புரட்சியும் கலகமாகவும் மாற்றி வாழ்ந்து மறைந்தவன் எம்.ஆர்.ராதா என்கிறக் கலகக்காரன்.

குரலில் ஏற்ற இறக்கங்களைக் காட்டி திரையில் நகைச்சுவை செய்யும் ராதா உண்மையில் முரட்டு சுபாவம் கொண்டவர். முரட்டு சுபாவம் என்றால் வலிய சென்று வம்பை தேடும் சுபாவம் அல்ல தேடிவரும் வம்பை உண்டு இல்லை என்று பார்க்கும் அளவிற்கு எதற்கும் எந்த நிலைக்கும் இறங்க தயங்காதவர். வம்பை கொண்டுவருபவர் யாராக இருந்தாலும் எப்பேர்பட்டவராக இருந்தாலும் ராதாவின் அதிரடி நடவடிக்கைகள் அதிரவைக்கும் ரகம். ராதாவின் முரட்டுத் துணிச்சல் அன்றைய சினிமா உலகில் கொடிகட்டிப் பறந்த அனைத்து உச்சங்களையும் விலகி ஓட வைத்ததுண்டு. புரட்சி, திலகம், லட்சியம், மன்னன் இப்படி பட்டம் சூட்டப்பட்டவர்கள் எல்லாம் இவருக்கு முன்னாடி பொட்டிப் பாம்புகள்தான்.

பாகவதர், பி.யு.சின்னப்பா, சிவாஜி, எம்.ஜி.ஆர் சகாப்தங்களுக்கு முன்பே ராதாவின் சகாப்தம் நாடக மேடைகளில் தொடங்கிவிட்டது. 1930, 1940-களில் ராதாவின் நாடகங்கள் தமிழகத்தின் “Red Hot Chilies”. நாடக மேடைகளில் புராணங்களையும், வண்டி வண்டியான கர்நாடக சங்கீதங்களையும் கட்டி அழுது கொண்டிருந்த காலத்தில் ராதாவின் நாடகங்கள் சமூக அவலங்களை பற்றி துணிச்சலாக பேசியது. ஆரிய புராணப் புருஷர்களை விதவிதமான நாடக மேடை ஒலி அமைப்புகளில் வைத்து நாக்குத் தள்ள நாக்குத் தள்ள திணறடித்திருக்கிறார்.

ஆரிய அவதாரங்கள் ஒருவேளை கைலாயத்திலிருந்து Live Telecast-ல் ராதாவின் புராண நையாண்டி நாடகங்களைப் பார்த்திருந்தாள் நாக்கை பிடிங்கி கொண்டிருந்திருப்பார்கள். தமிழகத்தில் எந்த ஊரில் ராதாவின் நாடகம் நடக்கிறதோ அந்த ஊரில் உள்ள பார்ப்பன, வைதீக “Gentlemen”-களின் அஸ்தி கலங்கி ஜன்னிக் கண்டுவிடும். புராண நாடகங்களை அரங்கேற்றி புராண பித்தலாட்டங்களை நாரடித்துவிடுவார். அவர் நாடகங்களில் சுயமரியாதை, பொதுவுடமை கொள்கைகள் தூக்கலாக இருக்கும். இத்தனைக்கும் ராதாவின் நாடகங்கள் தமிழக பார்ப்பனர்களை கதிகலங்க வைத்த காலங்களில் ராதா பெரியாரியின் தொண்டருமல்ல, சுயமரியாதை கொள்கையை ஏற்றுக் கொண்டவருமல்ல. சுயமரியாதையும், பொதுவுடமையும் ராதாவின் பிறவி குணங்கள்.

ராதாவின் நாடகங்கள் அடிதடி சண்டைகள் இல்லாமல் முடிவது அபூர்வம். அவருடைய நாடகங்களைக் கண்டு அலறிய அவால் நாடகம் நடக்கும் போது கூலிக்கு ஆட்களை கூட்டி வந்து தகராறு செய்வார்கள். கல், முட்டை, செருப்பு இப்படி சகல சம்பத்துகளும் மேடையில் பறந்தபடி இருக்கும். நாடகத்தை நிறுத்தும் ராதா தைரியம் இருப்பவன் சண்டைபோட மேடைக்கு வரலாம் என்று நாடக மேடையிலேயே நிஜ சண்டைக்கு தயாராகிவிடுவார். இது ஏதோ ஒரு நாள் இரண்டு நாள் நடக்கும் சமாச்சாரம் இல்லை, ராதாவின் நாடக வாழ்க்கையே இதுதான்.

அதேப் போல் ராதா பணம் சம்பாதிக்க வேண்டி மக்களின் கீழ்தர ரசனைகளை திருப்திபடுத்தும் வகையில் நாடகங்ள் எழுதியதும் கிடையாது அரங்கேற்றியதும் கிடையாது. நான் என் நாடகங்களில் சுயமரியாதை, பொதுவுடமை கருத்துகளைத்தான் சொல்லுவேன். இஷ்டம் உள்ளவர்கள் பார்க்கலாம், பிடிக்காதவன் என் நாடகத்தைப் பார்க்க வரவேண்டாம். அப்படியே தப்பித் தவறி வந்துவிட்டவர்கள் வெளியே டிக்கட் கௌண்டரில், டிக்கட்டை திருப்பிக் கொடுத்திவிட்டு பணத்தை வாங்கிக்கொண்டு ஓடிவிடுங்கள் இது பிரச்சனைக்குறிய நாடகங்களை நடத்தும் போது ராதா விடும் அறிக்கை. அக்காலத்தில் மேடை நாடகங்களில் இப்படியொரு கலகம் செய்தது ராதா மட்டுமே. விதவை பிராமண பெண்ணுக்கு தாலி கட்டுவது, புராண நாயகர்களின் கண்களில் விரலைவிட்டு ஆட்டுவது, தமிழை

தாழ்த்துபவர்களை நோண்டி நொங்கெடுப்பது இப்படி ராதாவின் நாடகங்கள் ஓவ்வொன்றும் ஆட்சியாளர் தொடங்கி பார்ப்பனர்கள் முடிய அனைவரையும் அலற வைக்கும். இவர் தொல்லைத் தாங்க முடியாமல் இவரின் நாடகங்களுக்கு பார்ப்பனர்கள் ஆட்சியாளர்கள் மூலம் தடைவிதிக்க, தடை விதிக்கப்பட்ட நாடகங்களின் பெயரை மட்டும், பெயரலவில் மாற்றி விளம்பரம் அடித்திவிட்டு அந்த நாடகங்களை அப்படியே சிறுசிறு மாற்றங்களோடு நடத்திவிடுவார்.

பார்ப்பனர்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும் மட்டுமே ராதாவின் நடிப்பு, நாடகம் என்றால் ஆகாது. ஆனால் சாதாரண மக்களின் அன்றைய நாடக மேடை சூப்பர் ஸ்டார் ராதா. தப்பித் தவறி ராதா நடித்த “Character”-ல் வேறு நடிகரை நடிக்க வைத்துவிட்டால், ராதாவை கூப்பிடு, ராதாவை நடிக்கச்சொல், ராதா வரவேண்டும் என்று நாடக கொட்டகை அல்லோலகல்லோலப் பட்டுவிடும். அப்படியும் ராதா வரவில்லை என்றால் நாடக கொட்டகை தாறுமாறாகிவிடும். தமிழகத்தில் எந்த ஊருக்கு சென்றாலும் இதுதான் நிலை. ரசிகர்களின் ஆரவார வரவேறப்பை நாடக மேடையிலேயே சாதித்துக் காட்டியவர் ராதா. ராதாவை பொறுத்த மட்டில் சினிமா புகழ் அவருக்கு ஒரு Bonus மாதரி.

தான் நடிக்கும் நாடகங்களில் மட்டும் இல்லாமல் தன் நாடக குழுவின் நடிகர்களிடமும் சமதர்மத்தை கடைபிடித்திருக்கிறார். அக்காலத்தில் நாடக நடிகர்களிடையே உபசரிப்பில் வித்தியாசம் உண்டு. ராஜபார்ட்(Hero), ஸ்திரிபார்ட்(Heroine), பாடி நடிக்கும் நடிகர் இவர்களுக்கு சாப்பாட்டிலிருந்து உடைகள் நகைகள் வரை தனி உபசரிப்பு நடக்கும். மற்ற நடிகர்கள் கண்டுகொள்ளபடமாட்டார்கள். ஆனால் ராதாவின் நாடக குழுவில் அது கிடையாது. ராஜபார்ட் தொடங்கி ஒரு சீனுக்கு வந்துபோகும் நடிகர் வரை அனைவருக்கும் ஒரேவிதமான உபசரிப்பு தான். நாடக குழு பழைய சோறு சாப்பிட்டால் சூப்பர் ஸ்டாரான ராதாவுக்கும் பழைய சோறு தான். இப்படியெல்லாம் சொல்வது ராதாவை நாயக வழிபாட்டிற்கு நம்மை தவறுதலாக அழைத்து சென்றுவிடலாம் ஆனால் உண்மை இதுதான். இதனால் ராதா என்கிற மனிதர் குற்றங்குறையே இல்லாதவர் என்பது அர்த்தம் அல்ல. மனிதனுக்கே உரிய பலவீனங்கள் அவருக்கும் உண்டு. அதுவும் விமர்சனத்திற்கு உட்பட்டதே.

ராதாவின் ஆளுமை சினிமாவிலும் தொடர்ந்தது. படபிடிப்புத் தளத்தில் அவருடைய பேச்சுக்கு எதிர் பேச்சுக் கிடையாது. அவர் சொல்லிவிட்டால் சொன்னதுதான். புரட்சியும், திலகமும் கூட ராதா என்றால் சற்று பயம் கலந்த மரியாதையுடன் அண்ணே என்று அழைப்பது வழக்கம். காரணம் ராதா நாடகத்தில் இவர்களுக்கு சீனியர் என்பதோடு, இவர்கள் நாடகங்களில் சிறு வேசங்களில் நடித்துக்கொண்டிருந்த காலத்தில் ராதா நாடக உலகின் முடி சூடிய மன்னர். தவிர சிவாஜி ராதாவின் நாடக குழுவில் நடித்திருக்கிறார். சிவாஜி, எம்.ஜி.ஆர் போன்ற சாம்பவான்களை அநாயசமாக கையாளும் இயக்குனர்களுக்கு கூட ராதா என்றால் கிலிதான். இத்தனைக்கும் அவசியம் இல்லாமல் மற்றவர்கள் வேலையில் மூக்கை நுழைக்காமல் தன் வேலையை குறையில்லாமல் முடித்துக்கொடுப்பார். ஆனாலும் ராதாவின் சுயமரியாதை, பொதுவுடமைக் குறித்து திரையுலகில் அப்படியொரு மிரட்சி.

ராதாவின் தனிப்பட்ட வாழ்க்கையையும் அவரின் இயல்புகளையும் பார்ப்போம். ராதா ஏழ்மையில் பிறந்தவர் என்றாலும் அவரின் தன்னம்பிக்கைக்கும், துணிச்சலுக்கும் குறைவு கிடையாது. ஒலிவு மறைவில்லாத சுயவிமர்சனத்துக்கு அஞ்சாதவர். அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி சுயவிமர்சனம் என்றால் பின்னங்கால் பிடரியில் பட ஓடும் தலைவர்களும், நடிகர்களும் ஏராளம். நாடக மேடை சூப்பர் ஸ்டார் என்னும் பெருமையை ராதா விமர்சிப்பதை கேளுங்கள், நான் ஒரு கூத்தாடி. ஏன் நாடகத்துல(சினிமாவிலும்) நடிக்கரவனைக் கூத்தாடின்னு சொல்றான் தெரியுமா. நடிக்கற சீனு பாக்கறவனுக்கு புடுச்சிடுச்சுன்னா Once More கேப்பான் திரும்ப அதே சீன நடிக்கனும். அது சாவர சீனா இருந்தாக்கூட Once More-க்கு எந்திருச்சி திரும்ப சாவனும். இப்படி பாக்குறவன் சொல்றபடி ஆடுறோம் தெரியுமா அதனாலதான் நாங் கூத்தாடி. இந்த கூத்தாடிய நாடக மேடையோட விட்டுறனும். அதுக்கு மேல அவன் ஒன்னும் கிடையாது. ஒன்றுக்கும் உதவாத சாதாரண நடிகனை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடாதீர்கள் என்ற ராதாவின் சுயவிமர்சன இயல்பு எங்கே, ரசிகர்களை முட்டாளக்கி, கதாநாயக வழிபாட்டை வளரக்கும் நடிகர்கள் எங்கே. நடிகன் என்ற ஒரு தகுதியே போதும் கோடிகளில் இருக்கும் மக்களை ஆட்டுவித்துவிடலாம் என்பவர்கள் மத்தியில் நடிகன் மற்றவர் பேச்சுக்கு கூத்தாடும் கூத்தாடி மட்டுமே, அதற்குமேல் அவன் பைசாவிற்கு பிரயோசனமற்றவன் என்பதை சம்பட்டியால் அடிப்பதுபோல் தன் ரசிகர்களுக்கு சொன்னவர் ராதா. பொய் தோற்றம் காட்டும் சினிமா போதையில் கிரங்கி கிடப்பவர்களின் சிண்டைப் பிடித்து உளுப்புவைகள் ராதாவின் விமர்சனங்கள்.

திராவிடர் மாநாடு நூறு நடப்பதும் ஒன்றுதான், ராதாவின் ஒரே ஒரு நாடகம் நடப்பதும் ஒன்றுதான் என்று அண்ணா நூறு திராவிடர் மாநாட்டிற்கு ஒரே ஒரு ராதாவின் நாடகத்தை ஈடுகட்டினார். அண்ணாவின் இந்த விமர்சனத்துக்கு பின்பே ராதாவுக்கு பெரியாருடன் நெருக்கம் ஏற்பட்டது. நெருக்கம் மட்டும்தான் ஏற்பட்டதேத் தவிர அவர் தன்னை சுயமரியாதைக்காரன் என்று சொல்லிக்கொண்டதுமில்லை, நாயக்கர் வழிபாடு செய்த்துமில்லை. யாரையும் மனம் வந்து பாராட்டி விடாத, அதிலும் முக்கியமாக நடிகர்களை பாராட்டாத நாயக்கரே ராதாவை பாராட்டி மணிமன்றம் ஒன்றைத் தொடங்கிவைத்தார். நாயக்கர் முன்னிலையிலேயே அந்த விழாவில் ராதாவின் விமர்சனம் இது, என்போன்ற கூத்தாடிகளுக்கு இதுபோன்ற மணிமன்றம் அதிகம். இது அவசியமுமில்லை. இதுதான் ராதா.

அன்றைய காலகட்டத்தில் ஆடம்பரத்தின், பெருமையின் சின்னமாக சினிமா நடிகர்கள் Austin கார்களை வாங்கி என்னைப் பார் என் அழகைப் பார் என்று ஓய்யாரமாக சென்னையின் சாலைகளில் பவனிவந்தபோது, Austin காரில் மாட்டிற்கு வைக்கோல் போரை வைத்து அதே சென்னையின் சாலைகளில் எடுத்து வந்து நடிகர்களின் வீண் ஆடம்பர அளப்பரைகளுக்கு ஆப்பு வைத்தார். இது பற்றி ஒரு முறை சிவாஜி, ராதாவிடம் கேட்க சாதாரண Machine-னால் நம்முடைய குணமும், தரமும் உசந்துடாது என்று சிவாஜியை ஏன்டா கேட்டோம் என்று ஆக்கிவிட்டார்.

திருப்பதி ஏழுமலையானின் Special தரிசன ஓர வஞ்சனைப் பிடிகாத ராதா, திருப்பதிக் கோயிலை தாக்க தானே வெடிகுண்டு தயார் செய்தார். எதிர்பாரா விதமாக அந்த குண்டுகள் தயாரிப்பு நிலையிலேயே வெடித்துவிட்டன. தனக்கு தவரு என்று பட்டதால் ஏழுமலையானுக்கு கூட குண்டு வைக்க தயங்காத தீவிரவாதி. சிறையிலிருந்து வெளியே வந்த என்.எஸ்.கிருச்ணனுக்கு நிதி திரட்டி கொடுப்பதற்காக அன்றை திரை உலக சாம்பவான்கள் எல்லாம் ஒரு விழா ஏற்பாடு செய்து, என்.எஸ்.கே-வை நடுநாயகமாக உட்கார்த்திவைத்து தங்களின் விளம்பர வள்ளல் குணத்தை தாங்களே புலங்காகிதப் பட்டுக்கொண்டிருந்தபோது, அந்த விழாவிற்கு அழைப்பே (ராதாவின் வெளிப்படையாக பேசும் குணம் காரணமாகவே அவருக்கு அழைப்பு அனுப்பபடவில்லை) இல்லாமல் வந்த ராதா விடுவிடு என்று மேடை ஏறினார். பேசிக்கொண்டிருந்தவர் கையிலிருந்து மைக்கைப் பிடிங்கி, இது என்.எஸ்.கே-வுக்கு நிதி கொடுக்கும் விழா நம்முடைய வள்ளல் குணத்தை புகழுவதற்கான விழா இல்லை என்றுவிட்டு என்.எஸ்.கே-விடம் பணக்கட்டை கொடுத்துவிட்டு இறங்கி வந்த வழியே போய்விட்டார். எது நடக்கக்கூடாது என்று ராதாவுக்கு அழைப்பு இல்லையோ அது நடந்தேவிட்டது. எம்.ஜி.ஆர், சிவாஜி முகங்களில் ஈயாடவில்லை என்பது செய்தி. ஒருகாலத்தில் இதே என்.எஸ்.கே-வை சுடுவதற்கு துப்பாக்கியும் கையுமாக திரிந்தவர் ராதா.

மற்றவர்களின் பிரச்சனைகளுக்கு உதவி செய்வதில் ராதா எந்த நிலைக்கும் இறங்குவார் என்பதற்கு உதாரணம், எம்.ஜி.ஆரை அவர் சுட்ட விவகாரம். இந்த விவகாரத்தில் ஒன்றை மிகவும் உன்னிப்பாக கவனிக்கவேண்டும். எம்.ஜி.ஆர் ரசிகர்களின் தீவரத் தன்மை அனைவரும் அறிந்ததே. எம்.ஜி.ஆர் உச்சத்திற்கு ஏறிக்கொண்டிருந்த காலகட்டமது. தொடர்ச்சியாக தேவர் தயாரித்து எம்.ஜி.ஆர் படங்கள் Century-கள் அடித்திக் கொண்டிருந்தன. ரசிகர்களை எம்.ஜி.ஆர் உள்ளும் புறமுமாக புறட்டிப்போட்டுக்கொண்டிருந்தார். எம்.ஜி.ஆர் என்கிற சுருக்கெழுத்து பித்து ரசிகர்களை எதுவும் செய்யும் நிலையில் வைத்திருந்தது. இந்த சூழலில் தான் ராதா எம்.ஜி.ஆரை சுட்டது. எம்.ஜி.ஆரின் செல்வாக்கு ராதாவின் துணிச்சலை ஒன்றும் செய்துவிடவில்லை. இந்த தகராறில் ராதா தன்னையும் சுட்டுக்கொண்டார் நெற்றிப்பொட்டில்.

ராதாவின் சுயமரியாதை குணத்தையும் அவரின் அலட்சிய நையாண்டியையும் ஓட்டுமொத்தமாக பிரதிபலித்த படம், ரத்தக் கண்ணீர். இது அவர் எழுதி, மேடைகளில் நடித்து சக்கைப்போடு போட்ட கதை. இது அக்காலத்தில் ராதா நாடக குழுவின் ‘Special’ நாடகம். இந்த நாடகம் படமாக எடுக்கப்பட்டபோது, ராதா நாடகங்களில் படு busy-யாக நடித்துக்கொண்டிருந்தார். ஆனாலும் இந்த நாடகத்தை எந்தவித சமரசத்திற்கும் இடமில்லாமல் படமாக நடித்துக்கொடுத்தார். சாதாரண வசனத்தையும் கூட மிகச் சிரியான ஏற்ற இறக்கங்கள், அழுத்தங்கள் கொடுத்து நையாண்டி வசனமாக மாற்றக் கூடிய திறமை கொண்டவர்.

செல்லுலாய்ட் பொம்மையை, செல்லுலாய்டோடே நிறுத்த வேண்டும் என்பதில் மிகத் தீவரமுடையவர். பணமும், புகழும் சம்பாதிக்கும் நடிகர்கள் தங்களுக்கென்று, மக்களிடையே உருவாக்க நினைக்கும் வெத்து பிம்பத்தை வண்மையாக கண்டித்திருக்கிறார். தான் சேர்ந்த சினிமாத துறையை மிக பகிரங்கமாக, ஆபாசமும் இரட்டை அர்த்தப் பேச்சுக்களும் நிறைந்து கிடக்கும் கூடாரமென்று விமர்சித்தார். ராதாவின் இப்படிபட்ட வெளிப்படையான விமர்சனங்களைக் கேட்டு சக நடிகர்கள் ஓதுங்கி ஓடியதும் உண்டு. ராதாவின் விமர்சனத்துக்கு இதோ அடுத்த உதாரணம். இது நடிகர் நாகேஷ் தனது சுயசரிதை புத்தகத்தில் பதிவுசெய்த விசயம். சிறையிலிருந்து வெளியே வந்த ராதா ஒரு சிலப் படங்களில் நடித்துக்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் ஒருமுறை ராதா நடித்துக்கொண்டிருந்த ஸ்டுடியோவில் நாகேஷக்கும் படபிடிப்பு. படபிடிப்பு நிலையத்திற்குள் நுழைந்த நாகேஷ் ஒரு மரத்தடியில் கும்பலாக இருக்க என்ன ஏது என்று பார்க்கப்போயிருக்கிறார். கும்பலுக்கு நடுவே ராதா என்பதைவிட ராதாவைச் சுற்றி அந்த கும்பல். மரியாதையின் காரணமாக நாகேஷ் ராதாவிடம், என்ன அண்ணே Character’ என்று கேட்க, அவர், நிஜத்துல ஓழுங்கா சுடத்தெரியாத எனக்கு போலிஸ்காரன் வேசம், என்று அலட்சியமாக ஒரு போடுபோட, உள்ளர்த்தம் புரிந்துக்கொண்ட நாகேஷ் விதுவிதுர்துபோய் அந்த இடத்தை விட்டு நழுவியிருக்கிறார்.

தலைபோகும் நேரத்திலும் கூட எதற்காகவும், யாருக்காகவும் வெளிப்படையாக பேசும் குணத்தை ராதா மாற்றிக்கொண்டது கிடையாது. படித்தவர்களுக்கு அவர் கொடுக்கும் மரியாதையே தனி. படிப்பை பெரிதாக நினைத்திருக்கிறார். அவர் கடுமையாக விமர்சித்த சினிமாத் துறையிலும் கூட படித்தவர்களிடத்தில் ராதா மதிப்புடன் நடந்திருக்கிறார். வெத்து நடிகர்களின் கண் கூசும் மினுமினுப்பில் ராதா போன்ற நிச மனிதர்கள் மறைந்துப்போய்விடுகிறார்கள். சினிமா போதையில் மயங்கி கிடக்கும் நம்மவர்கள் ராதா போன்ற வெளிப்படையான மனிதர்களை வெகு சுலபமாக தங்களின் நினைவுகளிலிருந்து வாந்தியெடுத்து விடுகிறார்கள்.

ராதா என்ற மனிதனின் சிறப்பை தெரிந்துக்கொள்ள அவர் மலேசியாவில் பேசிய பேச்சை ஒருவர் கேட்கவேண்டும். YouTube-ல் இந்த பேச்சு காணக் கிடைக்கிறது. கதாநாயக வழிபாட்டில் தங்களின் வாழ்க்கையைத் தொலைத்துவிட்ட தமிழர்கள் நிச்சயம் இந்தப் பேச்சை கேட்கவேண்டும். சாதாரண மனிதர்களை குருட்டாம்போக்கில் தெய்வ நிலைக்கு உயர்த்தும் அதே நேரத்தில் தெய்வ நிலைக்கு உயர்த்திவிடப்பட்ட மனிதர்களுக்கு எதிராக எந்தவித விமர்சனத்தையும் ஏற்க விரும்பாத தமிழர்களின் அவிந்துப்போன கண்களை சரியாக்க எம்.ஆர்.ராதா போன்ற ஆட்கள் தமிழகத்தற்கு தேவைப்படுகிறார்கள்.

Naveena Alexander
naveenaalexander.blogspot.in

Comments

Popular posts from this blog

கண்ணுறக்க நேர கதை சொல்லியின் கதை.

மந்திரம், மந்திரவாதி.....புத்தகத்தின் வெள்ளோட்ட சிறு துளி....

களப்பிரர் என்னும் கலி அரசர்