குருட்டுப் பூனைகளை பகடிச் செய்யும் வம்ச வரலாறு


பல்லாயிரம் ஆண்டுகள் பழமையும் செழுமையும் கொண்ட தமிழ்மொழியின் சாபக்கேடு முறையான வரலாற்று நூல்கள் இல்லாமை. பொதுவாகவே தமிழர்கள் வரலாற்று உணர்வு அற்றவர்கள் என்கிற குற்றச்சாட்டு உண்டு. தங்களைப் பற்றித் தாங்களே பிரசங்கம் செய்துக் கொள்வதா என்கிற கூச்ச உணர்வின் காரணமாக தமிழர்கள் தங்களின் முறையான வரலாற்றை பல நூற்றாண்டுகளாப் பதிவு செய்யாமல் விட்டது, பிற்காலத் தலைமுறையினருக்கு அவர்கள் செய்த பெரும் குற்றமே. வேங்கட மலைக்கு (இன்றைய திருப்பதி) அப்பாலிருக்கும் தக்காண பீட பூமிக்கும், அதற்கும் வடக்கிலிருக்கம் பறந்த நிலபரப்புகளுக்கும், துணை கண்டமான ஈழத்திற்கும் இரண்டாயிரமாண்டுகால முறையான வரலாறு இருக்க தமிழர்களிடம் அதுகிடையாது. அங்குமிங்கும் கிடைக்கும் கல்வெட்டுகள், செப்பெடுகளின் மூலமே ஓரு கோர்வையான தமிழக வரலாற்றை கொண்டு வரமுடிகிறது. இந்த அழகில் சுயவரலாறு (Autobiography) என்பதை தமிழர்கள் நினைத்தும் பார்த்தது கிடையாது. ஐரோப்பியர்களின் வருகைக்கு பிறகே தமிழர்கள் Autobiography என்ற துறையைப் பற்றி யோசிக்கத் தொடங்கினார்கள். இதன் விளைவு 17-ஆம் நூற்றாண்டு அநந்தரங்கப் பிள்ளையின் நாட்குறிப்புகள். சுயவரலாறு என்பதை புரிந்துக் கொண்ட தமிழர்கள் அப்படி ஓன்றும் மலைமலையாக சுயவரலாறுகளை எழுதிக் குவித்துவிடவில்லை.

அந்த மட்டும் தமிழர்கள் விழித்தெழுந்திருந்தால் இந்நேரம் ஆரிய அகத்திய முனி திருவோடும் கையுமாக பொதிய மலை பக்கம் அலைந்துக்கொண்டிருந்திருப்பார். ஆனால் தமிழனைப் பிடித்த இரண்டரை ஆயிரமாண்டு சனி இன்னும் அவனை விட்டு விலகிய பாடில்லை. இன்றைக்கும் தமிழர்களிடையே Aryatamilinism என்கிற வியாதியைப் பரவலாக காணலாம். விழித்தெழும் ஓருசில தமிழர்கள் சுயசரிதை எழுதினால் அதன் தாக்கமும் வீச்சும் எப்படி இருக்கும் என்பதற்கு உதாரணம், உபதேசியார் சவரிராயபிள்ளை (1801-1874) என்கிற இந்த வம்ச வரலாற்று புத்தகம். இந்த வரலாற்று புத்தகம் சவரிராயபிள்ளையின் 10-வது மகன் யோவான் தேவசகாயம் சவரிராயனால் தொகுத்து எழுதப்பட்டது. இந்த புத்தகம் வெளிவந்த ஆண்டு 1899. இந்த புத்தகத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த கட்டுரையை மூன்றுப் பிரிவுகளாகப் பிரித்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். முதலாவது இந்த வம்ச வரலாற்று புத்தகத்தில் கூறப்பட்டுள்ள சங்கதி, இரண்டாவது இந்த வம்ச வரலாறு உடைத்தெரியும் குருட்டு வரலாற்று நம்பிக்கைகள், மூன்றாவது இந்த புத்தகத்தின் சிறப்புகள்.

முதலாவது சங்கதியைப் பார்ப்போம். உபதேசியார் (பிரசங்கி) சவரிராயபிள்ளை வாழ்ந்தது 19- ஆம் நூற்றாண்டு. இவர் வரலாற்றுப் புருசனோ, நாயகனோக் கிடையாது. ஆங்கிலேயர்களையோ, பாளையப்பட்டு கொள்ளையர்களையோ எதிர்த்தவரும் கிடையாது. பிறகு எதற்கு இவருக்கு சுயவரலாறு? இது பேதை தமிழ் நெஞ்சங்களில் எழும் அபத்தமானக் கேள்வி. தமிழர்களை பொறுத்தமட்டில் வரலாறு என்பது கசப்பு மருந்து. அப்படியே அவர்கள் கசப்பு மருந்தை குடிக்க தயாரானாலும் அவர்கள் தேடுவதெல்லாம் வரலாற்று நாயகர்களையும் தலைவர்களையுமே. சமானிய மனிதனுக்கும் வரலாறு உண்டு என்பதை தமிழர்கள் ஏற்றுக்கொள்வதேக் கிடையாது. தமிழர்களின் இந்த ஓவ்வாமையை (Allergy) கேள்விக்குள்ளாக்கி கம்பீரமாக எழுந்து நிற்கிறார் சவரிராயபிள்ளை. ஓரு சமானிய மனிதனின் வாழ்க்கைப்பாடுகள்தான் இந்த வம்ச வரலாறு.

யோவான் தேவசகாயம் மிக அற்புதமாக தன் பாட்டன், பூட்டன், ஓட்டன் ஆகியவர்களின் வம்ச வரலாற்றை தொகுத்திருக்கிறார். பொதுவாக தங்களின் சுயசரிதை எழுதுபவர்கள் தங்களைப் பற்றியத் தம்பட்டமாகவே அந்த சுயசரிதையை எழுதுவார்கள். இது உலக இயல்பு. அதிலும் தனிமனித வழிபாட்டை தன் உயிரினும் மேலாகக் கருதும் தமிழர்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். தமிழில் வெளிவந்திருக்கும் ஓட்டுமொத்த சுயசரிதை புத்தகங்களை எடுத்துக்கொண்டால் அவற்றில் 99% தனி மனித வழிபாட்டு முகாரியாகவே இருக்கும். சுயசரிதை என்பது ஒருவரின் அந்தரங்கம் தொடங்கி அவனின் குற்றங்குறைகள் அனைத்தையும் வெளிச்சம் போட்டு அம்மனப் படுத்தும் விசயம் என்பதை ஏனோ தமிழர்களின் DNA ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. ஆனால் ஏறக்குறைய 112 ஆண்டுகளுக்கு முன்னால் தன் தந்தையின் வம்ச வரலாற்றை எழுதிய யோவான் தேவசகாயம் சொல்லுவதைக் கேளுங்கள், நமது வாழ்வானாலும் சரி, தாழ்வானாலும் சரி நம்முடைய எளிமையையும் பேதமையையும் குற்றங்குறைகளையும் உள்ளதை உள்ளபடி அறிந்ததையெல்லாம் எழுதுவது கருத்தாயிருந்தேன். இது அத்தனை புத்தியல்ல வென்றாலும் எழுதி அச்சடித்துத் தீர்ந்தாயிற்று.

தமிழனின் புத்தக வாசிப்பு பழக்கத்தைப் பற்றி இந்த அகிலமே அறியும். புத்தகங்களை தேடிப்பிடித்துப் படிப்பதில் தமிழன் அசகாய சூரன். அதிலும் ஆனந்த விகடன், குமுதம், குங்குமம் மற்றும் சமையலறை புத்தகங்களை மாய்ந்து மாய்ந்து படிக்கும் தமிழனின் வாசிப்பு வெளி மெய்சிலிர்க்க வைக்கக் கூடியது. பள்ளிக கல்லூரிக்குப் பிறகு புத்தகம் என்கிற ஒருப் பொருளை தொட்டும் பார்க்காத அறிவு புருசர்கள் நம்மிடையே ஏராளம் தாராளம். இந்த புண்ணிய ஆத்மாக்களின் நடுவே சுயசரிதைப் போன்ற புத்தகங்களின் கதி என்ன என்பதை 110 ஆண்டுகளுக்கு முன்பே யோவான் தேவசகாயம் மிக அற்புதமாக கணித்திருக்கிறார். இதோ அவர் சொல்வது, துட்டுக்கொடுத்து இவ்வகையான புஸ்தகங்களை வாங்கி வாசிக்கிற வழக்கமும், பிரியமும், நமது சனங்களுக்கு நாளதில் (இன்றைய நாளில்) கிடையாது. இனி ஒரு காலத்தில் உண்டாகும். வெள்ளைக்காரருக்குத்தான் இப்படிப்பட்ட சரித்திரங்களை மதிக்கத் தெரியும்.

இனி ஒரு காலத்தில் நம் சனங்கள் விழித்துக் கொள்வார்கள் என்று யோவான் தேவசகாயம் அங்கலாய்த்து 100 வருடங்கள் ஓடிவிட்டது ஆனால் பாவம் தமிழன் விழித்தப்பாடுதான் இல்லை. Commercial Magazine-களிலும், Commercial Film-களிலும், Commercial TV channel-களிலும் தன் அறிவுப் பசியைத் தீர்த்துக்கொள்ளும் தமிழனின் புத்தியில் புற்றுவைக்க. பொதுவாக சுயசரிதை எழுதுவது என்பது காலத்தையும் மனித உழைப்பையும் மிகுதியாக கேட்கக்கூடியது. அதிலும் தான் எழுதும் சுயசரிதையில் நம்பகத்தன்மைக்கு முதலிடம் கொடுப்பவர்களின் பாடு சொல்லிமுடியாது. சம்பவ இடங்களை நேரிலே சென்று ஆராய்ந்து எழுதுவது என்பது குண்டலினி யோகத்தில் முதலாவது சக்கரத்தை தொடுவதற்கு சமம். இந்தக் கஷ்டத்தைக் குறித்து யோவான் தேவசகாயம் என்ன சொல்லுகிறார், எத்தனையோ சில்லறை ஓலைகளிலும், ஏடுகளிலும், காயிதங்களிலுமிருந்து பொறுக்கி எடுத்து சேர்த்தும், அந்தந்த இடங்கள் ஊர்களை நானே போய் பார்த்தும் அனேகரிடத்தில் நேரே விசாரித்தும், ஓரு தரம் எழுதினதை ஆறுதரம் திருப்பித் திருப்பி எழுதியும் இவ்வளவும் இராப்பகல் கலக்கமும் கவலையுமாய்....... விழித்துக் கொள்ளும் தமிழன் எந்த அளவிற்கு இறங்குவான் என்பதற்கு யோவான் தேவசகாயம் ஓரு பிடி சோறு பதம். ஓலைகளிலும், ஏடுகளிலும் உள்ளதை அப்படியே எடுத்து தன் கற்பனையையும் கொஞ்சம் கலந்து, இல்லாத்தையும் கொஞ்சம் சேர்த்து எழுதி தன் வம்ச வரலாற்றை புத்தகமாக்கி இருக்க தேவசகாயத்திற்கு எவ்வளவு நேரம் பிடித்திருக்கும். ஆனால் படிப்பவர்களை ஏமாற்ற தேவசகாயம் விரும்பவில்லை. இரவும், பகலும், ஓடி உழைத்து உண்மையை ஏற்றுக் கொள்ளவும், வெளிப்படுத்தவும் தேவசகாயம் அரும்பாடுபட்டிருக்கிறார். இதுதான் இயற்கையில் தமிழனுக்கு அமைந்த இயல்பு. ஆனால் இந்த இயல்பு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கொள்கை போனதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.

சவரிராயபிள்ளை திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர். காமநாயக்கன்பட்டி பிள்ளைமார் சமுகத்தினர். அவருடைய முன்னோர்கள் அவருடைய ஓட்டன் காலத்திலேயே ரோமான் கத்தோலிக்க (Roman Catholic) மதத்தை சேர்ந்துவிட்டவர்கள். சவரிராயபிள்ளை அவருடைய தகப்பனார் உயிருடன் இருந்தவரை செல்வ செழிப்பாக இருந்திருக்கிறார். அவருடைய தந்தை இறந்ததும் சவரிராயபிள்ளையை வறுமை பிடித்துக் கொண்டது. தந்தை விட்டுச்சென்ற கடன் ஒரு புறம். எந்த தொழிலில் ஈடுபட்டாலும் வயிற்றை கழுவ முடிகிறதேத் தவிர கையில் ஓன்றும் தங்கவில்லை. கடனையும் அடைத்தப்பாடில்லை. சவரிராயபிள்ளை தன் நிலமையை முன்னேற்ற பார்க்காத வேலையில்லை. அந்த காலத்தில் முன்னேற்றத்துக்கு உண்டான அனைத்து வேலைகளையும் பார்த்திருக்கிறார். கடை வைத்துப்பார்த்திருக்கிறார், வண்டி மாடு வியாபாரம் பார்த்திருக்கிறார், அரசாங்கத்தில் கூலி ஆளாக மசாலப் பொருட்களை கடத்துபவர்களை கண்கானித்திருக்கிறார், தோட்டத்தில் கூலியாக இருந்திருக்கிறார், நாடக நடிகர்களுக்கு பாடம் சொல்லித்தருபவராக இருந்திருக்கிறார், மூட்டை சுமந்திருக்கிறார் ஆனால் எந்தத் தொழிலும் அவர் வறுமையை ஒழித்தபாடில்லை. நிலமை மோசமாகி சில வேளைகளில் வீட்டில் சாப்பாட்டிற்கே பிரச்சனை.

இந்த நிலையில் சவரிராயபிள்ளை மனதில் ஒரு எண்ணம் தோன்றுகிறது. அது புரோதெஸ்தாந்து மார்கத்தில் உபதேசியராகச் சேர்ந்து ஓரு நல்ல நிலைக்கு வந்ததும் மீண்டும் கத்தோலிக்க மார்க்கத்திற்கே திரும்பிவிடுவது. இது குறித்து யோவான் தேவசகாயம் சொல்வது, எங்கள் தகப்பனார் வயிற்றுப்பிழைப்புக்காகத்தான் இரேனியூஸ் ஐயரவர்களிடத்தில் போய் சேர்ந்தார்கள் அது நிச்சயம். ரோமான் கத்தோலிக்க சபையினருக்கும், புரோதெஸ்தாந்து (Protestant) சபையினருக்கும் தமிழ்நாட்டில் நிலவிய பிரச்சனைகள் குறித்து நாம் இரண்டாவது பிரிவில் பார்க்க இருப்பதால் இதை மட்டும் தெரிந்துகொள்வோம், 18, 19-ஆம் நூற்றாண்டுகளில் ரோமான் கத்தோலிக்க சபையைவிட்டு புரோதெஸ்தாந்து சபையில் சேருபவர்களை பதிதன் (கடவுள் நிந்தனையாலன்) என்று ஊரும், உற்றாற் உறவினர்களும், திருச்சபையும் ஒதுக்கிவைத்துவிடும்.

பிழைப்பிற்காக சவரிராயபிள்ளை புரோதெஸ்தாந்து மார்கத்தில் சேர்ந்துவிட்டதால், அவருடைய சபை மற்றும் உறவினர்கள் அவர் இறக்கும் வரையில் அவரை ஒதுக்கிவைத்துவிட்டார்கள். இது குறித்து யோவான் தேவசகாயம் கூறுவது, ஐயா(அப்பா) வயிற்றுப்பிழைப்புக்காக புரோதெஸ்தாந்து வேதத்தில் சேர்ந்தார்களென்று சொல்லுவது முக்கியமான வசை (குற்றச்சாட்டு). எங்கள் பிதா (அப்பா) வயிற்றுப்பிழைப்புக்காக சுவிசேஷ (Protestant) மார்க்கத்தில் சேர்ந்தார்களென்பதை லோகமெல்லாம் அறியும்படி விளம்பரம் பண்ணுதற்கு நாங்கள் வெட்கப்படுகிறதில்லை. இப்படி ஒதுக்கிவைக்கப்பட்ட சவரிராயபிள்ளையின் மூதாதயர்களைப் பற்றி, சவரிராயபிள்ளை வம்ச வரலாறு என்று முதல் பாகமாகவும், சவரிராயபிள்ளை தன் வாழ்வில் பட்ட துன்பங்களை சவரிராயபிள்ளை வரலாறு என்று இரண்டாம் பாகமாகவும், சவரிராயபிள்ளை புரோதெஸ்தாந்து உபதேசியராகி எழுதிய கடிதங்கள் மற்றும் தினப்படி சபை அறிக்கைகளை சவரிராயபிள்ளை Journals என்று மூன்றாம் பாகமாகவும் கொண்டது உபதேசியார் சவரிராயபிள்ளை புத்தகம்.

சவரிராயபிள்ளை மூதாதயர்கள் வரலாறு 1650-கள் தொடங்கி சொல்லப்படுகிறது. இவனை அவன் பெற்றான், அவனை இவன் பெற்றான் என்று வரட்டுத்தனமாக இல்லாமல் வாழ்க்கை சம்பவங்களை கோர்த்து மிகவும் சுவாரசியமாக சொல்லப்பட்டுள்ளது. ஏடுகளில் உள்ளதை அப்படியே எடுத்து எழுதிவிடாமல் யோவான் தேவசகாயம் பல தகவல்களை நேரிலேயே சென்று முடிந்த அளவு ஒப்பிட்டு எழுதியிருக்கிறார். இந்த பாகத்தை எழுதுவதற்கு யோவான் தேவசகாயத்தின் பாட்டனும், சவரிராயபிள்ளையின் தந்தையுமான மதுரேந்திரம் பிள்ளை எழுதிவைத்த ஓலைச்சுவடிகள் பெருதும் உதவியிருக்கிறது. இரண்டாம் பாகத்தை எழுதுவதற்கு சவரிராயபிள்ளை எழுதிய நாட்குறிப்பு ஓலைகள் உதவியிருக்கிறது. அவ்வளவு வறுமையிலும் சவரிராயபிள்ளை தன் வாழ்க்கை நிகழ்வுகளை ஓலைச்சுவடிகளில் எழுதும் பழக்கத்தை கைவிடவில்லை.

வாழ்க்கையின் மரிமானங்களை ஓலைச்சுவடிகளில் பதிய வேண்டும் என்கிற அபூர்வ பழக்கம் இந்த வம்சத்திற்கு எப்படி ஏற்பட்டது என்று நினைக்கும்போது ஆச்சரியமே மிஞ்சுகிறது. இப்படி நம்முடைய மூதாதயர்களும் வரலாற்று அறிவோடு இந்த பழக்கத்தை பழகியிருந்தால் ஆயிரம் ஆயிரமாண்டுகால நம்முடைய சிறப்பை இன்று உலகமே புத்தகம் போட்டு படித்து வாயடைத்துப்போயிருக்கும்.

இரண்டாவது பிரிவான இந்த வம்ச வரலாறு உடைத்தெரியும் குருட்டு வரலாற்று நம்பிக்கைகளை- இப்பொழுது பார்ப்போம். பொதுவாக மதமாற்றம் என்ற உடன் நம்முன் வந்து நிறுகும் குருட்டு கட்டமைப்பு, கீழ்சாதி மக்கள் மேல் சாதியினரின் அடக்குமுறைகளுக்கு எதிராகவும், சமத்துவம் தேடியும், பணத்திற்காகவும் கிறுத்தவ மதத்தை சேர்ந்தார்கள் என்பது. நம்முடைய வரலாற்று புத்தகங்களும், குருட்டு அறிவுப் பூனைகளும் இதையே நமக்குத் திரும்பத் திரும்ப சொல்லிவருகின்றன. ஆனால் உண்மை என்ன? ஐரோப்பிய பாதரிமார்களும், இயேசு சபையினரும், மதமாற்றத்திற்காக முதன்மையாக குறிவைத்தது கீழ்சாதியினரை அல்ல மேல் சாதியினரையே என்ற சமகாலத்து வரலாற்று உண்மையை இந்த புத்தகம் மிகத் தெளிவாகவும் அப்பட்டமாகவும் முன்வைக்கிறது.

ஐரோப்பிய பாதரிமார்கள் மேல்சாதியினரை மதம் மாற்றவே பெறு முயற்சி எடுத்திருக்கிறார்கள். இதற்கு இராபர்ட் நோபிளி என்கிற பாதரியார் சிறந்த உதாரணம். இவர் தன்னை மேற்குலகப் பிராமணன் என்று சொல்லிக்கொண்டு, பூனூல் அணிந்த, சங்கரமட ஆச்சாரியார்கள் போல பாவனை செய்து பிராமணர்கள் மத்தியில் உலா வந்து கிறுத்தவ மதத்தை பரப்பினார். இதன் பயனாக பிராமணர்கள் கிறுத்தவ மதத்தை தழுவியதும் உண்டு. இந்த சங்கதி பொது வரலாற்றிலிருந்து மறைக்கப்பட்டிருப்பதின் காரணமென்ன? தாழ்ந்த சாதியார் பணத்திற்கு ஆசைப்பட்டு மதம் மாறிவிட்டார்கள் என்று ஏளனம் செய்பவர்கள் மேல் சாதியினர் மதம் மாறியதைப் பற்றி மட்டும் ஏன் எதுவும் சொல்லாமல் வாய்மூடி மௌனியாக இருக்கிறார்கள்?

தாழ்ந்த சாதியினர் மதம் மாறிவிட்டாலும் சாதிக்கட்டுபாடு என்னவோ மறைந்துவிடவில்லை. இந்து மதத்தில் எப்படி நடத்தப்பட்டார்களோ அதே போல்தான் கிறுத்தவ மதத்திலும் நடத்தப்பட்டிருக்கிறார்கள். இதற்கு ஒரு அற்புதமான எடுத்துக்காட்டு இந்த புத்தகத்தின் முதல் பாகமான சவரிராயபிள்ளை வம்ச வரலாற்றில் இருக்கிறது. இது தொடர்பாக புரட்சிகரமான ஒரு சம்பவத்தை இந்த புத்தகம் விவரிக்கிறது. ஒருமுறை காமநாயக்கன்பட்டிக்கு புதிதாக வந்த ஒது ஐரோப்பிய பாதரி, சபையில் நிலவிய சாதிய கட்டமைப்பை கலைத்து, யாருக்கும் யாரும் தாழ்ந்தவர்களில்லை என்ற முறையைக் கொண்டுவர, சபையில் பெரும் கொந்தளிப்பே ஏற்பட்டிருக்கிறது.

ஐரோப்பிய நாட்டிலிருந்து வந்திருந்தாலும் கீழ்சாதியினருக்கு மதசேவை செய்த பாதரிமார்கள் தாழ்ந்தவர்களாகவே கருதப்பட்டிருக்கிறார்கள். இந்த வித்தியாசத்தை மேல்சாதியாருக்கு மதசேவை செய்த ஐரோப்பிய  பாதரிமார்களே கடைபிடித்திருக்கிறார்கள். மேல்சாதியாருக்கு மதசேவை செய்த ஐரோப்பிய பாதரிகளுக்கு உயர்தரமான உடைகள். கீழ்சாதியினருக்கு மதசேவை செய்த ஐரோப்பிய பாதரிகளுக்கு வேறுவகையான உடைகள். கீழ்சாதியினருக்கு மதசேவை செய்த ஐரோப்பிய பாதரிகளுக்கு பல்லக்கில் போகும் உரிமை கிடையாது. அது மேல்சாதியாருக்கு மதசேவை செய்த ஐரோப்பிய பாதரிகளுக்கு மட்டுமே. இப்படி பல சங்கதிகளை இந்த புத்தகம் சமகாலத்திய வரலாறாக பதிவு செய்கிறது. கடவுளுக்கு முன்பு அனைவரும் சமம் என்றக் கொள்கையை பரப்ப வந்த ஐரோப்பிய பாதரிகளுக்கே இந்த கதி.

ஆக 16, 17, 18-ஆம் நூற்றாண்டுகளில் மதம் மாறியவர்களை குறித்து குருட்டுத்தனமாக வைக்கப்படும் விமர்சனங்கள் அனைத்தும் பொய் என்பதை இந்த புத்தகம் தெள்ளத் தெளிவாக உணர்த்துகிறது. இந்துத்துவ வாதிகள் முன்வைக்கும் மிகமுக்கிய குற்றச்சாட்டு பணத்தாசை காட்டி தாழ்ந்த சாதியினரை மதம் மாற்றுகிறார்கள் என்பது. இந்த புத்தகத்தை படிப்பதின் மூலமாக நமக்குள் எழும் கேள்வி அப்படியானால் மேல்சாதியினர் எதற்காக மதம் மாறினார்கள்? பணத்திற்காகவா? அல்லது ஆங்கிலேய ஆட்சியில் கிறுத்தவராக இருந்தால் பல நன்மைகள் உண்டு என்பதற்காகவா?

இந்த புத்தகம் முன் வைக்கும் அடுத்த வரலாற்று உண்மை, கத்தோலிக்கர்களுக்கும், புரோதெஸ்தாந்துகளுக்கும் இடையேயான சச்சரவுகள். 17, 18-ஆம் நூற்றாண்டுகளில் தமிழகத்தில் கத்தோலிக்கர்களும் புரோதெஸ்தாந்துகளும் எலியும் பூனையுமாக மாறி புத்தகங்களும், அறிக்கைகளும் எழுதி அடித்துக்கொண்டார்கள். 18-ஆம் நூற்றாண்டில் வீரமாமுனிவர் (Joseph Bescii) வேதவிலக்கமும், லுத்தேரிநத்தியல்புமும் எழுதி புரோதெஸ்தாந்துகளை தாக்கினார். இந்த சங்கதியையும் போகிற போக்கில் இந்த புத்தகம் நமக்கு தெரிவிக்கிறது. இந்த சண்டையில் கத்தோலிக்க சபை கடுமையான நிலையெடுத்திருக்கிறது. கத்தோலிக்க சபையிலிருந்து புரோதெஸ்தாந்து சபைக்கு செல்பவர்கள் மீது நடவடிக்கைகள் எடுத்திருக்கிறது. அப்படிபட்டவர்களை சபையைவிட்டு ஓதுக்கிவைப்பது, அவர்களின் உறவினர்களை தூண்டி குடும்பத்தின் நல்லது கெட்டதுகளிலிருந்து தள்ளிவைப்பது, ஆசீர்வதிக்க வேண்டிய திருவாயினால் சபையிலேயே அவர்களுக்கு சாபமிடுவது இப்படி பல வழிகளை பதிதர்கள் மேல் கையாண்டிருக்கிறார்கள். இந்த சச்சரவுகள் கிறுத்தவத்தை தழுவிய மேல்சாதியினரிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த அடிதடிகளைப் பற்றி யோவான் தேவசகாயம் இந்த புத்தகத்தின் முன்னுரையில் விளாவாரியாக பேசுகிறார்.

இந்த புத்தகத்தின் சிறப்புகளை இப்பொழுது பார்க்கலாம். புத்தகத்தின் முன்னுரையில் யோவான் தேவசகாயம் எந்தவித பாகுபாடுமின்றி கத்தோலிக்க புரோதெஸ்தாந்த பிரச்சனைப்பற்றி பேசுகிறார். தான் எடுத்தக் கொண்ட விசயமே பெரியது என்று வாதாடாமல் உள்ளதை உள்ளபடி எழுதுகிறார். இதுவே இந்த புத்தகத்திற்கு தனி சிறப்பை தந்துவிடுகிறது. இந்த புத்தகத்தை வெறும் சுயசரிதை என்கிற அளவில் அடக்கிவிடமுடியாது. சமகாலத்திய சமுதாய வாழ்க்கைப் பற்றின சங்கதிகள் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் காணக் கிடைக்கிறது. ஆங்கிலேயே மற்றும் பாளயப்பட்டுகளின் சண்டைகளைப் பற்றியும் அதனால் ஏற்படும் திடீர் கொள்ளைகள் பற்றியும் இதில் செய்திகள் உண்டு.

என் நேரமும் கொள்ளைகாரர்களை எதிர்பார்த்து காடுகளுக்கு ஓட தயாராக இருக்கும் மக்களை இந்த புத்தகத்தில் நாம் சந்திக்கலாம். மேலும், தன் தந்தையை பற்றியும், தன் வம்சத்தை பற்றியும் பேசும் யோவான் தேவசகாயம் எந்த இடத்திலும் நடுநிலையிலிருந்து தவருவது கிடையாது. தங்களுக்கு எதிரானதை மறைத்து, தேவையானதை உயர்த்தி பேசும் நடையும்  இந்த புத்தகத்தில் கிடையாது. இத்தகைய புத்தகங்கள் ஆயிரம் நூற்றாண்டுகளுக்கு இரண்டு விதம் நம்மிடையே இருந்திருந்தால், நம்முடைய பல்கலைகழகங்கள் அனைத்தும் வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்களால் நிரம்பி வழிந்திருக்கும்.

இந்த புத்தகத்தை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. தங்கள் வீட்டில் நூலகத்திற்கு இடம் தருபவர்களும், முன்னூறு ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் சமுதாய வாழ்வை ஆராய்ச்சி செய்யும் வரலாற்று அறிஞர்களும் நிச்சயம் படித்து பாதுகாக்க வேண்டிய புத்தகம் இது.


Naveenaalexander
naveenaalexander@yahoo.com

Comments

Popular posts from this blog

கண்ணுறக்க நேர கதை சொல்லியின் கதை.

மந்திரம், மந்திரவாதி.....புத்தகத்தின் வெள்ளோட்ட சிறு துளி....

களப்பிரர் என்னும் கலி அரசர்