மாய பிரதிபிம்பங்களும் பாரதியும்


மனித மனம் பிரதிபிம்பங்களுக்கு பெயர் போனது. அதிலும் தமிழனின் மனமானது பிம்பங்களின் பொய் தோற்றத்தை பிரித்தறியாமல் தன்மேல் தினிக்கப்பட்ட பிம்பங்களை பிரதிபலிப்பதில் ஈடு இணையற்றது. ஏன், எதற்கு, எப்படி, யார் இவைப் போன்ற மனித அறிவு வளர்ச்சிக்கான கேள்விகளை தமிழன் கடந்த பல ஆயிரமாண்டுகளாக கேட்கவுமில்லை, கேட்க வேண்டுமென்ற உணரச்சியும் பெறவில்லை. விளைவு தமிழனின் அறிவுசார் சொத்துகள் ஆரிய பிராமண கருவறைக்குள் போனது. அறிவுசார் சொத்துகளை சர்வ அலட்சியமாக பறிகொடுத்த தமிழினம் அதைப்பற்றிய எந்தவிதமான குற்ற உணர்ச்சியும் இல்லாமல் தமிழ் படுத்தப்பட்ட ஆரிய வேதப் புராணங்கள் மற்றும் வேதங்களுக்கு தங்களை அடிமைபடுத்திக் கொண்டார்கள். அத்தோடு நின்றுவிடாமல் தங்கள் மீது வலிந்து திணிக்கப்படும் அனைத்து பொய் புரட்டுகளையும் எந்தவித எதிர் கேள்வியும் கேட்டுவிடாமல் மிகவும் கவனமாக தலைமுறைத் தலைமுறையாக பிரதிபலிக்கத் தொடங்கிவிட்டார்கள். இந்த பிம்பங்களில் ஒன்று பாரதி.

பாரதியைப் பற்றிய பல பிம்பங்கள் தமிழனிடம் ஏராளம் இருக்கிறது. பாரதியும் தமிழன் என்பதால் இந்த பிம்பங்களின் நம்பகத் தன்மையில் எந்த விதமான கேள்விகளும் எழ வாய்பில்லைதான். ஆனால் உண்மையில், மேல் தட்டு அறிவு ஜீவிகளால் கட்டமைக்கப்பட்டிருக்கும் பாரதியின் பிரதிபிம்பங்கள் சி. சுப்பிரமணிய ஐய்யர் என்னும் பாரதியின் உண்மைத் தோற்றத்தை பிரதிபலிக்கின்றனவா? திட்டமிட்டே கட்டமைக்கப்பட்ட பொய்தோற்றங்களுக்குள் புதைந்து போய்விட்ட பாரதியின் உண்மைத் தோற்றம் நமக்கு எந்த விதமான பாரதியை அறிமுகப்படுத்துகின்றன? முதலில் நம் முன் இருக்கின்ற பாரதியைப் பற்றிய Legend-களில் சில 1. பாரதி ஐய்யர் ஆத்தில் பிறந்த பார்பனியத்திற்கு எதிரானக் கலகக்காரன். 2. பாரதி அவன் வாழ்ந்த காலத்தில் போற்றப்படாத கலைஞன். 3. பாரதி தமிழ் மொழி பற்றின் அடையாளம்.

மேல் சொன்ன பாரதி பற்றிய Legend-களை தனித் தனியாகவே பார்த்துவிடலாம். பாரதி ஐய்யர் ஆத்தில் பிறந்த பார்பனியத்திற்கு எதிரானக் கலகக்காரன். பாரதியைப் பற்றிய இந்த புறக் கட்டுமானம் எங்கிருந்து தோன்றியது? பார்ப்பனியத்திற்கு எதிரான பாரதியின் நடவடிக்கைகளிலிருந்தா? அல்லது பாரதி தன் வார்த்தைகளாலேயே ஆரிய வேதப் புராணங்களையும், உபநிஷத் மற்றும் மனு போன்ற ஸ்மிருதிகளின் மனித நேயத்திற்கு எதிரான கருத்துகளையும் சாடியதாலா? மேலே உள்ள கேள்விகளுக்கு பதில் சொல்வார் யாருமில்லை. பாரதி தன்னலவில் உணமையாக வாழ்ந்து மறைந்துவிட்ட ஓரு தமிழ்கவி. அவனை சுற்றி பிற்காலத்தில் உள்நோக்குடன் கட்டமைக்கப்பட்ட பார்ப்பனியக் கலகக்காரன் என்னும் கட்டுக் கதைக்கு பாரதியின் மேல் பழி சுமத்திவதில் எந்த வித நியாயமும் இருப்பதாகத் தெரியவில்லை. ஏன்? என்ற எதிர்மறை வினாவையே தங்கள் மொழி இலக்கணத்தில் இருந்து எடுத்துவிட்ட அதிபுத்திசாலி தமிழினமே இத்தகைய கட்டமைப்புகளை நம்பும் குற்றத்திற்கு முழு பொறுப்பாளிகள்.



பார்ப்பனியம் பற்றி பாரதியின் கோட்பாடு மற்றும் நிலைதான் என்ன? பாரதி தன் சமகாலத்தை புரிந்துக்கொண்டு அதற்கு தக்கபடி கவிதைகள் படைக்கும் திறன்கொண்டிருந்தவர். பாரதி வாழ்ந்த காலத்தில் தமிழ் நாட்டில் பார்ப்பனியத்திற்கு எதிராக கொந்தளிப்பு மனோபாவம் பார்ப்பனரல்லாத மேல்தட்டு வர்கத்திடம் பரவிக்கிடந்தது. பார்ப்பனியத்திற்கு எதிரான கொந்தளிப்பு இரண்டு நிலைகளில் காணப்பட்டது. முதலாவது, வெளிப்படையான பார்பனிய நடவடிக்கைகளுக்கு எதிரானது. இதில் பார்ப்பனர்கள் மற்ற சாதி மனிதர்களை சமுதாயத்தில் தாழ்ந்தவர்களாக நடத்தியது, மற்றும் மாறி வரும் காலத்திற்கு ஏற்றபடி தங்கள் புறவயமான நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ளாத்து. பாரதி அப்பட்டமாக இந்த முதல் நிலையை சார்ந்தவர். அவரின் எழுத்துகளே இதற்கு ஆதாரம்.

இரண்டாவது எதிர்ப்பு நிலை, பார்ப்பனியத்திற்கு தெய்வத் தன்மை கற்பிக்கும் ஆரிய வேதப் புராண புரட்டுகளை தாக்கி பார்ப்பனியத்தையே கேள்விக்குள்ளாக்கி சமுதாயத்தில் ஓரு மறுமலர்ச்சியை முன்வைப்பது. இந்த இரண்டாவது எதிர்ப்பு நிலையே பார்ப்பனியத்திற்கு எதிரான உண்மையான புரட்சி. இந்த புரட்சியே பார்ப்பனியத்தின் வேர்களை ஆட்டங்கானச் செய்து சமூகத்தை சாதியக் கட்டமைப்பிலிருந்து மீட்டெடுக்கிறது. இத்தகைய புரட்சியை முன்னேடுப்பவர்களையே பார்ப்பனியக் கலகக்காரர்களாக எடுத்துக் கொள்வது தகும். வேதங்கள், பிராமணங்கள், புராணங்கள் இவைகள் பற்றி பாரதிக்கு எந்த விதமான எதிர்கேள்வியோ, எதிர்விமர்சனமோ துளியளவும் கிடையாது. இவைகளை அப்பட்டமாக ஏற்றுக்கொண்டவர் பாரதியார். இதற்கு அவரின் கட்டுரைகளே போதுமான சாட்சிகள்.

பிறகு எப்படி பாரதி பார்ப்பனியக் கலகக்காரனாக முடியும் என்று நமக்குள் எழும் கேள்வியை அப்படியே வைத்துக்கொண்டு நாம் மேலும் பார்ப்போம். பார்ப்பனியத்திற்கு எதிராக பாரதி முன்வைத்தக் கோட்பாடு சந்தர்பவாதம் மட்டுமே. பிராமணர்கள் புறவயமான பழைய பஞ்சாங்க நடவடிக்கைகளையே பிடித்துக்கொண்டு அழாமல், காலத்திற்கு ஏற்றப்படி தங்களையும் தங்களின் நடவடிக்கைகளையும் மாற்றிக் கொள்ளவேண்டும் என்று முனைப்பாக இருந்தவர் பாரதியார். இதனடிப்படையிலேயே பாரதி கீழ்சாதிகாரர்களின் ஆலய பிரவேச உரிமை மற்றும் கீழ்சாதிகாரர்களின் கல்வி உரிமை பற்றியும் தன் எழுத்துகளில் பேசினார். இது தன்மூலக்கோட்பாடுகளை (வேதம், பிராமணம், புராணம்) அப்படியே வைத்துக்கொண்டு சூழ்நிலைக்குத் தக்கபடி தகவமைத்துக்கொள்ளும் சந்தர்பவாதம். பாரதி ஒருபோதும் ஆரிய சத பதங்களையோ, ஸ்மிரிதிகளையோ கேள்விக்குள்ளாக்கவுமில்லை, அவை மனிதநேயத்திற்கு எதிரானவைகள் என்று சாடவுமில்லை. இவ்விசயத்தில் தான் ஒரு சந்தர்பவாதி என்பதை தன் செய்கைகளாலும், எழுத்துகளாலும் வெளிப்படையாகக் காட்டிக்கொண்டவர் பாரதி.

கீழ்சாதி ஆலய பிரவேசத்தை சூழ்நிலைக்கேற்ப ஆதரித்த பாரதி, தன் அன்றாட பிராமணக் கடமைகளிலிருந்து தவறியதேக் கிடையாது. சூழ்நிலைக்கேற்ப கீழ்சாதி மக்களின் கல்வி உரிமையை ஆதரித்த பாரதி மறந்துப்போய் கூட அதிகார வர்கத்தில் நீக்கமற நிறைந்திருந்த அவாளின் ஆதிக்கத்தை கண்டித்ததும் கிடையாது, அவர்களுக்கு எதிராக பேசியதும் கிடையாது.



கேப்பையில் நெய் மட்டுமில்லை தேனும் பாலும் சேர்ந்து வழிகிறது என்று சொன்னால் எதிர்கேள்வியே இல்லாமல் நம்பிவிடும் புத்தி கூர்மை! நிறைந்த நம்மவர்களிடையே பாரதி பார்ப்பனியக் கலகக்காரன் என்கிற பொய் பிம்பம் மிக அற்புதமாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அறிவு அரிப்பெடுத்த சில படித்த குருட்டுப் பூனைகளும் பார்ப்பனியக் கலகக்காரனின் கவிதைகளை தங்களின் வாசிப்பு வெளியின் அளவுகோலாக வைத்துக்கொண்டு பொய் பிம்பங்களை அடுத்தத் தலைமுறைக்குத் தாரைவார்க்க தங்களால் முடிந்ததை செய்து கொண்டிருக்கிறார்கள். பார்ப்பனிய சந்தர்பவாதி பாரதி என்பதே பாரதியின் எழுத்துக்கள் காட்டும் மெய் பிம்பம். இனியாவது குருட்டுப் பூனைகள் தங்களுக்கு தாங்களே மணியை கட்டிக்கொண்டு பொய் கட்டமைப்புகளை அறியாதவர்களிடம் பரப்புவதை நிறுத்தவேண்டும்.

பாரதியைப் பற்றிய அடுத்த Legend-பாரதி அவன் வாழ்ந்த காலத்தில் போற்றப்படாத கவிஞன் என்பது. எதனடிப்படையில் இந்த பொய் பிம்பம் கட்டமைக்கப்பட்டு தமிழர்களால் நம்பப்படுகிறது என்பது billion dollar கேள்வி. பாரதி சுப்பிரமணிய ஐய்யர் என்பவர் நடத்திய சுதேச மித்ரனில் துணை ஆசிரியராக இருந்தபோதே பரவலாக அறியப்பட்டிருந்தார். அவர் துணை ஆசிரியராக இருந்தபடியே மற்ற பத்திரிக்கைகளுக்கும் கட்டுரை மற்றும் கவிதைகள் வடிவில் பங்களிப்பு செய்திருக்கிறார். அவ்வகையில் பாரதி வாழ்ந்த காலத்திலேயே அவருடைய எழுத்துகளின் வீச்சு அடைய வேண்டிய உயரங்களை அடைந்துவிட்டது. அவர் சுதேச மித்ரனிலிருந்து பிரிந்து இந்தியா பத்திர்க்கை தொடங்கி அதின் ஆசிரியராக இருந்தபோது அனேகமாக படித்தவர் மத்தியில் பாரதியின் புகழ் பரவியிருந்தது என்பது யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாத உண்மை. சென்னையில் கூடிய காங்கரஸ் கூட்டங்களும் அதில் பாரதி பேசிய வார்த்தைகளை அப்போதைய பிரிட்டீஷ் அரசின் உளவுத் துறை குறிப்பெடுத்து அரசாங்கத்துக்கு அனுப்பிவைத்த சம்பவங்களும் அன்றைய காலகட்டத்தில் பாரதி என்னும் தனி நபருக்கிருந்த பேருக்கும், புகழுக்கும் போதுமான சான்றுகள்.

மேலும் பாரதி வாழ்ந்த காலத்திலேயே அவருடைய ஆரம்ப கால கவிதை தொகுப்புகள் புத்தகமாக வந்து அவருக்கு புகழ் தேடிதந்து விட்டன. இதற்கு உதாரணம் சுதேச மித்ரன் வெளியிட்ட பாரதியின் கட்டுரை மற்றும் கவிதை தொகுப்புகள். பாரதியின் நெருங்கிய ஆதரவாளரான நெல்லையப்பர் என்பவர் வெளியிட்ட பாரதியின் கவிதை தொகுப்பு புத்தகங்கள். ஆக பாரதி தன் கண் முன்னாலேயே தன் கவிதைகள் புகழப்படுவதை கண்டு களிப்படைந்தவன். பாரதியின் சமகாலத்தில் வாழ்ந்த அனைத்து தமிழ் அறிஞ்கர்களும் ஏதோ ஒரு வகையில் பாரதியின் கவிதை சிறப்பையும் புகழையும் அறிந்தேயிருந்தார்கள். இதற்கு உதாரணம் பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், திரு.வி.க. விசயம் இப்படியிருக்க எதனடிப்படையில் பாரதி அவன் வாழ்ந்த காலத்தில் போற்றப்படாத புறக்கணிக்கப்பட்ட கவிஞன் என்கிற பொய் பிம்பம் நம்மிடையே உலா வருகிறது? பார்பன பாரதியின் சிறப்பு ஒருபோதும் தமிழனைவிட்டு அகன்று விடக்கூடாது என்கிற அவாளின் பதைபதைப்பே இந்த பொய் பிம்பத்தின் கருத்தா. கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், ஆரிய வேத புராண உபநிஷத்துகளே மெய் என்றாகிவிட்ட நம்மவர்களும், அதே, அதே என்று சப்பாளக்கட்டை

அடித்துக்கொண்டிருக்கிறார்கள். நம்மவர்களின் சப்பாளக்கட்டை எப்பொழுது முறிவது, எப்பொழுது மெய் பிம்பம் வெளியே வருவது.

பாரதி பற்றிய அடுத்த Legend-பாரதியின் தமிழ் பற்று சார்ந்தது. தமிழ் கவிதையியலில் பாரதிக்கென்று தனி சகாப்தம் உண்டு. நாம் இங்கே எடுத்துக்கொண்டது பாரதியின் சகாப்தத்தை அல்ல அவர் எந்த மொழியில் சகாப்தம் படைத்தாரோ அந்த மொழியோடு அவருகிருந்த உறவையே. பாரதி வாழ்ந்த காலகட்டத்தில் தமிழகத்தில் மொழி மற்றும் மதம் சார்ந்த விசயங்களில் படித்த பார்ப்பனரல்லாத மேல்சாதியினரிடையே ஆரிய பார்ப்பனியத்திற்கு எதிராக ஒருவித எதிர்புணர்சி தோன்றியிருந்தது. பொதுவாக தென்னிந்தியாவை பொறுத்தமட்டில், கி.பி. 16-ஆம் நூற்றாண்டுகளிலேயே ஆரியத்தின் வேசம் கலையத்தொடங்கிவிட்டது. இந்த ஆரிய மாயையை கலைத்துப் புண்ணியம் கட்டிக்கொண்டவர்கள் மேற்கத்திய கிருத்துவ மிஷியோன்களே (Missionaries).

கி.பி. 17-ஆம் நூற்றாண்டு தொடக்கத்திலேயே தமிழ் மொழி மீது படிந்திருந்த ஆரிய புனுகு மூட்டைகளுக்கு எதிராக கிருத்துவ மிஷியோன்கள் அறிவுப்பூர்வமான கேள்விகளை முன்வைக்க தொடங்கிவிட்டார்கள். இதில் கொடுமை மதம் பரப்ப வந்த பாதிரிகள் தமிழ் மொழியின் வளமையையும், சிறப்பையும் அறிந்துகொண்டு தங்களுக்கு சம்பந்தமேயில்லாத ஆரியத்திற்கு எதிரான மொழிப் போரில் ஈடுபட களி மண்ணை மூலயாகப் பெற்ற தமிழர்களோ சமஸ்கிரிதமே தமிழின் தாய்மொழி ஆரிய முனி அகத்தியரே தமிழர்களுக்கு தமிழை கற்றுக் கொடுத்தவர் என்கிற ஆரிய பார்ப்பனியத்தின் அறிவுக்குப் பொறுந்தாத வியாக்கியானத்தை பிடித்துத் தொங்கிக்கொண்டிருந்தார்கள். இன்றைக்கும் கூட இந்த ஆரிய புத்திப் பேதலிப்பு மறையவில்லை.

கி.பி. 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கம் தமிழ்மொழியின் தொன்மைக்கான விடியலைத் தன்னோடு அழைத்துவந்தது. விழித்துக் கொண்ட ஒரு சில தமிழறிஞர்கள் ஆரிய மாயையை விளக்கி தமிழின் கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றிய பெருமையை அறியத் தொடங்கினார்கள். உண்மை வரலாறை அறிந்து எழுதத் தொடங்கினார்கள். இது படித்த பார்ப்பனரல்லாத மேல் வர்கத்தினரிடம் கிளர்ச்சியை உண்டுப்பண்ண தனித் தமிழ் இயக்கங்கள் தோன்றின. ஆரிய மொழி கலப்பில்லாத தமிழ் மொழியை மீட்டெடுக்கும் வேலைகள் நடந்தன. இத்தகைய தனித் தமிழ் இயக்கங்களிலோ அல்லது ஆரியத்திலிருந்து தனித் தமிழின் மீட்டுருவாக்கத்திலோ தமிழ் பித்தன், சித்தன், முத்தன் பாரதியின் பங்கு என்ன? தமிழ்பற்று உடைய அனைவரும் தனித் தமிழ் இயக்கங்களில் சேர்ந்துவிட வேண்டுமா? அப்படி சேராதவர்களை தமிழர்களே இல்லையென்று ஓதுக்கிவிட வேண்டுமா? இது ஓருவகையான சர்வாதிகாரமில்லையா?

இப்படிப் போன்றக் கேள்விகள் நம் மனதில் நிச்சயமாகத் தோன்றும். இந்தக் கேள்விகளின் அடிப்படையிலேயே பாரதியின் தமிழ் பற்றை விமர்சனத்திற்கு உள்ளாக்குவதா என்றும் சிலர் கொதிக்கலாம். நியாயமே. ஆனால் ஒன்றை நாம் தெளிவுப்படுத்திக்கொள்ள வேண்டும். நாம்



இயக்கங்களை கணக்கில் எடுத்துக்கொள்பவர்களில்லை. தார்மீக உணர்வையே பெரிதாக நினைக்கிறோம். அவ்வகையில் ஆரியம் கலக்காத தமிழ் என்று வரும்போது பாரதியின் தார்மீக உணர்வு கேள்விக்குள்ளாகிறது. பாரதி தன்னலவில் வரலாற்று அறிஞர் இல்லைதான் ஆனால் வரலாற்று அறிவே இல்லாதவர் என்று யாராலம் மறுக்கமுடியாது. அவ்வகையில் பாரதிக்கு தமிழ் மொழியின் வரலாறும் தெரிந்தேயிருந்திருக்கும். ஆரியம் தமிழ் மொழி மீது ஏற்றிய அனைத்து கற்பனைவாதமும் பாரதி அறிந்ததே. யாமறிந்த மொழிகளில் தமிழ்போல் என்று நெக்குறுகிய பாரதி ஏன் தன் எழுத்துகளில் தமிழ் மொழி மீதான ஆரிய மோசடியை ஒரு சில வார்த்தைகளிலேனும் விமர்சனத்திற்கு கொண்டுவரவில்லை?

சமகால நிகழ்வுகள் அனைத்தையும் சுதேச மித்ரனிலும் பிறகு இந்தியாவிலும் விமர்சனத்திற்குள்ளாக்கிய பாரதி ஏன் ஆரிய மோசடிகளை மட்டும் விட்டுவைத்தார்? பாரதியின் கட்டுரைகளை படிக்க உட்காருபவர்களுக்கு பாரதியின் எழுத்துகளில் ஒருவித களைப்பு ஏற்படுவது நிச்சயம். காரணம் வரைமுறை இல்லாமல் பாரதியின் தமிழ் எழுத்துகளில் கலந்திருக்கும ஆரிய சொற்கள். தமிழின் தொன்மையை அறிந்த பாரதி போன்ற அறிஞர்கள் தமிழில் எழுதும்பொழுது வலிந்து திணிக்கப்பட்ட ஆரிய சொற்கள் குறித்த உணர்வு பெற்றே இருப்பார்கள். தார்மீக உணர்வின் அடிப்படையில் அத்தகைய ஆரிய சொற்களை தமிழிலிருந்து தவிர்ப்பதே பற்றாளர்களின் கடமையாகும். ஆனால் பாரதியின் தமிழ் எழுத்துகள் எவ்வித தார்மீக உணர்வையும் பிரதிபலிப்பதாக அறவே இல்லை என்பது அப்பட்டமான உண்மை.

பாரதியின் தமிழ் எழுத்துகள் ஆரிய சொற்களை விரும்பி வேண்டி ஏற்றுக்கொள்வது போன்றே இருக்கின்றன. மேலும் பாரதி நேரடியாக தன் எழுத்துகளில் தமிழ் மொழி மீதான ஆரிய அநியாயத்தை எதிர்த்துக் கேள்வியெழுப்பியதாகத் தெரியவில்லை. பாரதி ஒருபோதும் தன்னை தமிழ்மொழியின் பற்றாளனாக முன்னிருத்தியது கிடையாது. பிற்காலத்தில் கற்பனாவாத கட்டமைப்புகளே வலிந்து பாரதியை தமிழ்மொழியின் பற்றாளனாக நம்முன் நிறுத்தி ஓரு பொய் பிம்பத்தை உருவாக்கி இருக்கிறது. இத்தகைய பொய் பிம்பங்கள் உருவாவதற்கு முழுமுதற் காரணம் தமிழ்ர்களின் புத்திக்கூர்மையே!

அதோ வெள்ளை காக்கா பறக்கிறது என்றால் காக்கா எந்த காலத்தில் வெள்ளையாக இருந்தது என்ற எதிர் கேள்வியே இல்லாமல் ஆமாம் ஆமாம் அந்த வெள்ளை காக்கையோடு அதன் குட்டியும் வெள்ளையாக சேர்ந்தே பறக்கிறது என்று தன் புத்திசாலித்தனத்தை பிரசங்கம் பண்ணும் நம்மவர்களைக் கண்டால் ஏன் இன்னும் இரண்டு மூன்று சுனாமிகள் வந்து இந்த பாழாய் போனவர்களை வாரிக்கொண்டுப் போகக் கூடாது என்று எண்ணத் தோன்றுகிறது.

Naveena Alexander
naveenaalexander@yahoo.com

Comments

Popular posts from this blog

கண்ணுறக்க நேர கதை சொல்லியின் கதை.

மந்திரம், மந்திரவாதி.....புத்தகத்தின் வெள்ளோட்ட சிறு துளி....

களப்பிரர் என்னும் கலி அரசர்