மாற்று சினிமா திரைக்கதை அமைப்புக்கள்......

மாற்று சினிமா திரைக்கதை அமைப்புக்கள்......

புத்தகத்தின் முன்னோட்ட சிறு துளி....

"இந்த புத்தகத்தின் முதல் சில அத்தியாயங்களில் நடைமுறையியல் குறித்தும் கட்டமைப்புவாதம் குறித்தும் விரிவாக பார்த்தோம். அவைகளின் அடிப்படை கோட்பாடுகளில் ஒன்று படைப்பாளியால் எழுத்தைக்கொண்டு எதார்த்த உலகை அப்படியே கதைகளில் மீட்டுருவாக்கம் செய்ய முடியாது என்பது. படைப்பாளி என்னத்தான் இலக்கியம் என்கிற பெயரில் தலை கீழா நின்று வார்த்தை மாயவித்தை காட்டினாலும் எதார்த்த உலகை எழுத்துக்களால் பிரதிபலிக்க முடியாது. இதைத்தான் நமக்கு நடைமுறையியலும் கட்டமைப்புவாதமும் மொழியியல் ஆராய்ச்சிகளின் வழி தெளிவுப்படுத்துகின்றன.

எழுத்துக்களால் ஆன நாவல் அல்லது கதைகளையும், காட்சிகளால் ஆன திரைப்படங்களையும் (திரைக்கதை) ஒப்பு நோக்கும் வேலையில் எழுத்துக்களால் எதார்த்த (realistic) உலகை பிரதிபலிக்க முடியாது என்கிற விமர்சன அறிவியல் கருத்து (நடைமுறையியல் மற்றும் கட்டமைப்புவாதம்) முக்கியத்துவம் கொண்டதாக இருக்கிறது. கதையாக கற்பனை செய்து பிறகு அதை திரைக்கதையாக மாற்றுவதாக இருந்தாலும், நல்ல நாவல் ஒன்றை திரைப்படத்திற்கு ஏற்ற வகையில் திரைக்கதையாக மாற்றுவதாக இருந்தாலும் இந்த கருத்தை கவனத்தில் கொள்ள வேண்டியது மிக முக்கியம்.

ஏன் அப்படி செய்ய வேண்டும்? நல்ல கேள்விதான். ஏன் அந்த கருத்தை – அதாவது எழுத்துக்களால் எதார்த்த (realistic) உலகை பிரதிபலிக்க முடியாது – மிக முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டுமென்றால் அந்த கருத்தின் அடிப்படையிலேயே எழுத்துக்களால் படைக்கப்படும் கதைகளுக்கும், காட்சிகளால் படைக்கப்படும் திரைப்படங்களுக்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை தெளிவாக பிரித்தறிய முடியும். இந்த வித்தியாசத்தை பிரித்தறிய முடியாதவரை நல்ல கதைகளையோ அல்லது நாவல் கதைகளையோ நல்ல திரைக்கதைகளாக வடிவம் மாற்றுவதில் சறுக்கிக்கொண்டே இருக்க நேரிடும்.

எழுத்துக்களுக்கு இல்லாத ஒரு வசதி காட்சிகளுக்கு உண்டு. அந்த வகையில் காட்சிகள் எழுத்துக்களை விட பலம் வாய்ந்தவைகள். எழுத்தக்கள் எதார்த்த (realistic) உலகை கதைகளில் படைக்கும்போது படைப்பாளிக்கும் வாசகனுக்கும் இடையில் திரிக்கப்பட்ட திரை ஒன்றை உருவாக்கிறது. அந்த திரை ஒருபோதும் எதார்த்த (realistic) மனிதர்களையோ (கதாப்பாத்திரங்கள்) அவர்களின் இயங்கு வெளிகளையோ (கதை உலகம்) வெளிப்படுத்த வாய்ப்பு அளிப்பதில்லை. ஆனால் இதற்கு நேர் எதிர் திசையில் நின்று இயங்குவது காட்சிகள். காட்சிகள் என்று இங்கு நாம் குறிப்பிடுவது ஒளிப்பதிவு கருவி ஒன்றின் மூலம் எதார்த்த உலகம் படம்பிடிக்கப்பட்டு பிறகு திரையில் காட்டப்படுவதை.

காட்சிகள், பார்வையாளனுக்கும் படைப்பாளிக்கும் இடையில் எப்படியான திரிக்கப்பட்ட உலகையும் உருவாக்குவதில்லை. எதார்த்தத்தில் (realistic) கண் முன்னால் இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு உலகையே திரைப்படங்கள் காட்சிகளாக மீட்டுருவாக்கம் செய்கின்றன. அந்த வகையில் எழுத்துக்களை விட படு எதார்த்த உலகை வெளிப்படுத்துவது காட்சிகளே. புரிந்துவிட்டதுதானே நமக்கு. ஆக எழுத்துக்களால் உருவாக்கப்படும் கற்பனை காட்சிகளைவிட, கேமிரா கருவியின் மூலம் உருவாக்கப்படும் காட்சிகள் என்பது அடிப்படையிலேயே எதார்த்தமிக்கவைகள் (realistic).

திரைப்படக் காட்சிகள், எழுத்துக்களால் கட்டமைக்கப்பட்ட கற்பனை காட்சிகளை விட எதார்த்தமிக்கவைகளாக இருந்தாலும் அவைகளை கச்சிதமாக உருவாக்க திரைக்கதைகள் மிக முக்கியம். திரைக்கதைகள் எழுத்து வடிவம் கொண்டவைகள் என்பது இங்கே கவனிக்கத்தக்கது. அதாவது எதார்த்த உலகை உள்ளது உள்ளபடி அப்படியே காட்சிகளாக மீட்டுருவாக்கம் செய்யக் கூடிய திரைப்படத்தை உருவாக்க திரைக்கதை என்கிற பெயரில் எழுத்துக்கள் அடிப்படையாக இருக்கின்றன.



இந்த முரண்ப்பாட்டை தெளிவாக உள் வாங்கிக்கொள்வோமானால் நாவல் வடிவம் கொண்ட எழுத்துக்களுக்கான கதைகளையும், காட்சி வடிவம் கொண்ட திரைக்கதைக்களுக்கான கதைகளையும் திட்டவட்டமாக பிரித்தறிந்து ஊடகத்தின் (நாவல் மற்றும் சினிமா) தன்மைகளுக்கு ஏற்ப கதைகளையும் கட்டமைக்க முடியும்."

Comments

Popular posts from this blog

கண்ணுறக்க நேர கதை சொல்லியின் கதை.

மந்திரம், மந்திரவாதி.....புத்தகத்தின் வெள்ளோட்ட சிறு துளி....

களப்பிரர் என்னும் கலி அரசர்