உலக சினிமாக்களின் திரைக்கதை அமைப்புக்கள்....

உலக சினிமாக்களின் திரைக்கதை அமைப்புக்கள்....

புத்தகத்தின் சிறு துளி....

"ஃபேபுலா (கதை) மற்றும் சியோசட் (பிளாட்):

ஃபேபுலா என்பது கதை. சியோசட் என்பது ஒரு கதை சொல்லப்படும் விதம். இது இரண்டையும் ஒரு உதாரணத்தின் மூலம் பார்ப்போம். ராஜ் பிறந்தது சற்று வசதியான குடும்பத்தில்தான். அவனுடைய தலைமுறைக்கு வீட்டில் அக்கடா என்று உட்கார்ந்து சாப்பிட்டு அழிக்கும் அளவிற்கு வசதி உண்டு. அப்படி இருந்தும் பணத்தின் மீது அவனுக்கு பிடிப்பு. அதிலும் குறுக்கு வழியில் பணம் அவனை வந்தடைய வேண்டும் என்பது அவனுடைய இலட்சியம் என்று கூட சொல்லலாம். அதை சாத்தியப்படுத்த அவன் ஒரு வங்கியை கொள்ளையடிப்பது என்று திட்டம் போட்டு ஒரு நாள் வங்கி கொள்ளையிலும் ஈடுபட்டான். கொள்ளையடிக்கும்போது போலீசிடம் சிக்கிக்கொண்டு இறுதியில் சிறைக்கு சென்றான். இது கதை.

பேராசை பிடித்த ஒருவன் சட்டத்திற்கு புறம்பாக நடந்து சட்டத்தால் தண்டிக்கப்பட்டான் என்பது இந்த கதையின் அடிப்படை. இதே கதையை எப்படி வேண்டுமானாலும் சொல்ல முடியும். அப்படி சொல்வதே சியோசட் (பிளாட்). பேராசை, திருட்டு, சட்டத்தால் தண்டிக்கப்படுதல் இவைகள் செயல்பாடுகள். இந்த செயல்பாடுகள் கதாப்பாத்திரங்களின் இயங்கியலை தீர்மானிக்கின்றன. கதாப்பாத்திரங்களின் இயங்கியலை பல விதங்களாக சொல்வது பிளாட். பிளாட் சொல்லப்படும் விதங்களை தீர்மானிப்பது கதையியல் (Narratology). இதை கதை கூறுல் (narrative) விதங்கள் என்று நாம் எளிமைப்படுத்திக்கொள்வோம்.

கதை கூறலை செழுமைப்படுத்த ஐந்து கருவிகளை முன் வைக்கிறார் ஜெரார்ட் ஜென்னட். அவைகள்,
வரிசை (Order)
கால அளவு (Duration)
தொடர் தோன்றல் (Frequency)
மனநிலை (Mood)
குரல் (Voice)

வரிசை (Order): கதையில் சம்பவங்கள் நிகழும் வரிசை அமைப்பிற்கும், அது படைப்பாளியால் சொல்லப்படும் வரிசைக்கும் உள்ள தொடர்பை கருத்தில் கொள்வது இது. கதை என்பது (அது உண்மையில் நடந்த உண்மை சம்பவமாக இருக்கலாம் அல்லது கற்பனையாக உருவாக்கப்பட்டதாக இருக்கலாம்) டைம் & ஸ்பேசில் இயங்க கூடியது. அதாவது காலம் (டைம்) மற்றும் வெளியில் (ஸ்பேஸ்). காலமும் வெளியும் முன்னோக்கி மட்டுமே செல்லக் கூடியவைகள். அவைகள் பின்னோக்கி செல்வது கிடையாது. அது முடியவும் முடியாது.

உண்மை சம்பவங்களோ அல்லது கதையில் நிகழும் சம்பவங்களோ கால வரிசையில் முன்னோக்கி மாத்திரமே இருக்க கதையை சொல்லும் படைப்பாளி அந்த சம்பவங்களை வசதிக்கும், கதையின் கட்டுமானத்திற்கும், சுவாரசியத்திறகும், விறுவிறுப்பிற்கும் ஏற்ப கால வரிசையில் பின்னாலும் முன்னாலும் சொல்ல முடியும். கதை களத்தின் (வெளியில்) சமகாலத்தில் நிகழ்வது போல கதையை தொடங்கும் படைப்பாளி பல சமயங்களில் கதாப்பாத்திரங்களின் கடந்த கால வாழ்வில் நடைப்பெற்ற சம்பவங்களை குறிப்பிட நேரும். கதை களத்தின் சம காலத்தில் இருக்கும் கதாப்பாத்திரங்களின் கடந்த கால நிகழ்வுகளை அனலெப்சிஸ் என்று குறிப்பிடுகிறார் ஜெரார்ட்.

வெகுசன வழக்கில் சொல்வது என்றால் அனலெப்சிஸ்சை பிளாஷ்பேக் என்று குறிப்பிடலாம். கதையின் இடைப் பகுதியிலோ அல்லது பின் பகுதியிலோ வர இருக்கும் சம்பவத்தை கதை களத்தின் சம காலத்தில் சொல்வதை ப்ரோலெப்சிஸ் என்கிறார் ஜெரார்ட். அனலெப்சிஸ் மற்றும் ப்ரோலெப்சிஸ் இரண்டும் இரு வகைகளில் செயல்படுத்தப்படும். முதலாவதில் கடந்த அல்லது எதிர் கால சம்பவங்களை கதாப்பாத்திரமே சொல்லும்படி இருப்பது. இரண்டாவது வகையில் எழுத்தாளன் கதாப்பாத்திரத்தின் சார்பாக குறிப்பிடுவது. அனலெப்சிஸ் மற்றும் ப்ரோலெப்சிஸ் இரண்டையும் அனகிரானிஸ் என்று அழைக்கிறார் ஜெரார்ட்.

கால அளவு (Duration): உண்மை சம்பவம் நடந்து முடிக்க (அல்லது கதை களத்தில் வரும் சம்பவம் நடந்து முடிக்க) எடுத்தக்கொண்ட கால அளவிற்கும் அந்த சம்பவம் கதையில் எழுத்தாளனால் விவரிக்கப்பட்ட கால அளவிற்கும் இடையில் இருக்கும் தொடர்பை அடிப்படையாக கொண்டது கால அளவு (Duration). சம்பவ நிகழ்வு கால அளவிற்கும் அது எழுத்துக்களால் விவரிக்கப்படும் கால அளவிற்கும் ஐந்து நிலைகளில் தொடர்பு உண்டு. அவைகள், காட்சி (scene), சுருக்கம் (summary), நீட்டிப்பு (stretch), தொக்கிநிற்றல் (ellipsis) மற்றும் இடைநிறுத்தம் (pause)."

Comments

Popular posts from this blog

கண்ணுறக்க நேர கதை சொல்லியின் கதை.

மந்திரம், மந்திரவாதி.....புத்தகத்தின் வெள்ளோட்ட சிறு துளி....

களப்பிரர் என்னும் கலி அரசர்