உலக சினிமாக்களின் திரைக்கதை அமைப்புக்கள்....

உலக சினிமாக்களின் திரைக்கதை அமைப்புக்கள்: An Introductory To Next Gen Screenwriting....
புத்தகத்தின் முன்னோட்ட சிறு துளி...

"இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரையில் (அதாவது 1960-களுக்கு முன்பு வரை) இலக்கியமாக கருதப்படும் எழுத்துக்களில் சமகால அரசியலின் பிரதிபலிப்பை விமர்சன ரீதியில் தேடுவதும் ஆராய்வதும் வாசிப்பு அனுபவத்திற்கு இடையூறை ஏற்படுத்துவதாக இருக்கும் என்கிற எழுதப்படாத நம்பிக்கை பரவலாக நடைமுறையில் இருந்தது. இந்த நம்பிக்கையை உடைத்துக்கொண்டு உருவெடுத்தது எழுத்துக்களின் அரசியல் விமர்சனம்.

பின்கட்டமைப்புவாத (Poststructuralism) காலக்கட்டத்தில் (1980-களுக்கு பிறகு) எழுத்துக்கள் பிரதிபலிக்கும் சமூக-அரசியல் சூழ்நிலை என்பது பழமை வாதமாக பார்க்கப்பட்டாலும் விமர்சன கலையில் அவைகளுக்கான இடம் முற்றிலுமாக மறுக்கப்படவில்லை. மேற்கை பொருத்தவரையில் எழுத்துக்களின் சமூக-அரசியல் பிரதிபலிப்பு என்பது மூன்று நிலைகளில் வெளிப்படுகிறது. அவை மார்க்ஸ்சிசம், பெண்ணியம் மற்றும் இன வாதம் (வெள்ளை – மற்ற இனங்கள்). நம்மை பொருத்தவரையில் இனவாதம் என்பது இரண்டு கிளைகளாக பிரியக் கூடியது. திராவிடம் மற்றும் தலித்தியம். ஆக இருபதாம் நூற்றாண்டு தமிழ் எழுத்துக்களை ஒருவர் வாசிக்கும்போது மார்க்ஸ்சியம் (கம்யூனிசம்), பெண்ணியம், திராவிடம் மற்றும் தலித்திய சமூக-அரசியல் கூறுகளை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
சமூக படி நிலைகள் (வறுமை கோட்டிற்கு கீழே இருப்பவர்கள், நடுத்தர மக்கள், மேல் நடுத்தர மக்கள், பணம் படைத்தவர்கள்) இரண்டாக பிரிக்கப்பட்டு (உழைக்கும் வர்கம், மூலதன வர்கம்), இந்த இரண்டிற்கும் இடையிலான பொருளாதார வித்தியாசத்தின் அடிப்படையில் சமூகத்தை பார்ப்பது மார்க்ஸ்சிய (கம்யூனிச) விமர்சனப் பார்வை. அனைத்து கலைகளின் அடிப்படை கட்டுமானமாக இருப்பது தனி மனிதனின் சிந்தனைகளும் அதன் வழியில் அமைந்த கருத்துக்களுமே என்கிற பார்வை பரவலாக இருந்த சமயத்தில் தனி மனிதனின் சிந்தனைகளையும் அதன் வழி ஒட்டுமொத்த சமூக கட்டுமானத்தின் அடிப்படையாக இருப்பது பொருளாதாரமே என்கிற விமர்சனப் பார்வையை முன்வைத்தது மார்க்சியம்.

அந்த வகையில், தனி மனித சிந்தனைகளே (ideologies) கலைகளையும் சமூகத்தையும் கட்டி எழுப்புகிறது, எழுப்பியதை மாற்றி அமைக்கிறது என்கிற மேற்கின் விமர்சன நம்பிக்கையை குலைத்துப்போட்டது மார்க்சிய கலை, இலக்கிய விமர்சனப் போக்கு. தனி மனித சிந்தனைகளும், கருத்துக்களும் சித்தாந்தம் என்கிற மாய தோற்றத்தை உண்டாக்கி நிதர்சன உலகை மனித பார்வையிலிருந்தும் கலைகளில் இருந்தும் மறைத்துவிடுகிறது என்பதை வெளிப்படுத்திய அதே கணம் பொருளாதாரம் எப்படி நிதர்சன உலகின் அடிப்படையாக இருக்கிறது என்பதை அழுத்தம் திருத்தமாக முன் வைத்தது மார்கிசய விமர்சனப் போக்கு.

பிரெஞ்சு மார்க்சிய அறிஞர் அல்துசாரின் வார்தைகளில் சொல்வது என்றால், மனிதனுக்கும் அவனுடைய வாழ்நிலைக்கும் இடையில் கற்பனையான தொடர்பை ஏற்படுத்துவது சித்தாந்தம். இந்த கற்பனை தொடர்பு அவனுடைய தனிப்பட்ட வாழ்கை மற்றும் சமூக வாழ்கையில் எல்லாவற்றையும் நிறுவனமயப்படுத்திவிடுகிறது (மதம், கல்வி, கலை, அரசியல், சட்டம்). முடிவில் மனிதன் நிறுவனமயப்பட்ட சூழலுக்குள் இருந்தே அனைத்தையும் சிந்திக்கும் படி ஆகிவிடுகிறது. மனிதன் எத்தகைய புறக்கட்டுப்பாடுகளும், நிர்பந்தங்களும், திணிப்புக்களும் இல்லாமல் சுயமாக, சுதந்திர மனப்போக்குடன் சிந்திப்பதாக நினைத்துக்கொண்டிருந்தாலும் அவன் நிறுவனமயப்பட்ட சூழலுக்குள் இருந்தே இயங்கும்படி இருக்கிறது.

தனி மனித வாழ்கை, சமூக வாழ்கை என்று இரண்டு நிலையிலும் நிறுவனமயப்பட்ட சூழலை பெரு மூலதனம் தனக்கான வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டு மனித சமூகத்தை வர்கங்களின் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளின் (ஏழை மற்றும் பணம் படைத்தவன்) அடிப்படையில் பிரித்து தனக்கான இலாப ஆதாயத்தை நித்தம் பெருக்கிக்கொண்ட படியே இருக்கிறது. ஆக கலைகளின் வெளிப்பாடு என்பது தனி மனித சுதந்திர மனப்போக்கின் வெளிப்பாடாக இல்லாமல் பொருளாதாரத்தால் ஆளப்படும் நிறுவனமயப்பட்ட சூழலின் வெளிப்பாடகவே இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டு காட்டியது மார்க்சிய விமர்சனப் போக்கு."


Comments

Popular posts from this blog

கண்ணுறக்க நேர கதை சொல்லியின் கதை.

மந்திரம், மந்திரவாதி.....புத்தகத்தின் வெள்ளோட்ட சிறு துளி....

களப்பிரர் என்னும் கலி அரசர்