கார்ப்பரேட் இன்றி அமையாது உழவு.



பசுமை புரட்சி. கேட்பதற்கும், உச்சரிப்பதற்கும் மிகவும் கவர்ச்சிகரமான வாக்கியம். படித்தவர்களுக்கு என் நேரமும் ஆரோக்கியம் தரக்கூடிய பாதுகாப்பான உணவு உற்பத்திக்கான தாரக மந்திரமாகவம், படிக்காதவர்களுக்கு வழக்கம் போல விளங்காத மூடு மந்திரமாகவும், உழைத்து அன்றாடம் காய்ச்சிப் பிழைப்பவர்களுக்கு திருமந்திரமாகவும், மேலாக விவசாயிகளுக்கு ரசவாத மந்திரமாகவும் ஒளித்த, ஒளிக்க வைக்கப்பட்ட வார்த்தை பசுமை புரட்சி. இயற்கையோடு ஒத்துழைத்து, அதின் காலச்சக்கரத்திற்கு தகுந்தகடி அமைந்து வளமாகவும் ஆரோக்கியமாகவும் இருந்த இந்திய தீபகர்பத்தின் விவசாயமுறையை மேலும் மேலும் வலப்படுத்த போவதாக கூறிக்கொண்டு இந்திய ஆட்சியாளர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட பசிரோக நிவாரணி இந்த கவர்ச்சிகரமான பசுமை புரட்சி.

ஒவ்வொரு ஐந்தாண்டுகாலப் பத்தாண்டுகால பசுமை புரட்சித் திட்டங்களும், ஓவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் ஆரோக்கியமான உணவு அளிப்பதோடு நாட்டின் (இல்லாத) தானியக் கிடங்குகளையும் போதும் போதும் என்று சொல்கிற அளவிற்கு நிரப்பும் என்று நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் விவாதிக்கப்பட்டதும் இல்லாமல், எல்லா வெகுசன, வெகுசனமில்லாதப் பத்திரிக்கைகளிலும் பெத்த பீத்தல் பீற்றப்பட்டது. போதாதற்கு பள்ளிப் பாடப் புத்தகங்களிலும் இந்த பசுமை புரட்சி, ஐந்து மற்றும் பத்து மதிப்பெண் வினா விடையாக மாணவர்களின் பொது அறிவு வளர்ச்சிக்கான பங்களிப்பையும் செய்த்து. அத்தோடு நில்லாமல் “Service Commission” தேர்வு எழுதும் இந்திய ஆளும் வர்க்க அறிவு ஜீவிகளுக்கும், இந்த பசுமை புரட்சி தேர்வுகளில் கைகொடுத்து உதவியது.

வளர்ந்த நாடுகளின் விவசாயம் சார்ந்த Corporate-களின் R&D Center-களில் பிறந்து அங்கேயே வயதிற்கு வந்த இந்தப் பசுமை புரட்சி, இந்திய ஆட்சியாளர்களின் காமக் கிழத்தியாக மாறி, இந்திய வேளாண்மை துறையில் ப்பப்பரக்காஎன்று படுத்து கிழித்த கிழியில் ஆயிரம் ஆயிரமாண்டுகளாக தானியக் களஞ்சியங்களாக இருந்த விவசாய நிலங்கள் இப்பொழுது மலட்டுப் பெண்ணின் கருப்பையாக மாறிவிட்டன. ஒரு காலத்தில் இரசாயனம் என்கிறப் பெயரையே அறிந்திராத இந்திய உணவு பொருட்கள், இன்று உயிர்கொல்லி இரசாயனங்களின் “Sales Executive”-களாக கடைகளில் இளிக்கின்றன. பன்னாட்டு உர மற்றும் விவசாய எந்திர நிறுவனங்களின் கீதாபோதனை படி அச்சுப் பிசகாமல் இந்திய வேளாண் துறையினரும் ஆட்சியாளர்களும் பசுமை புரட்சியோடு அலுக்க அலுக்கக் கட்டிப் புரண்டதில் இந்திய விவசாயமே கதிகலங்கிப் போய் கிடக்கிறது.

பல நூறு ஆண்டுகள் தலைமுறை, தலைமுறைகளாக மாற்றப் பட்ட இந்திய தீபகர்ப விவசாய முறையானது இயற்கை அறிவியல் முறையில் அமைந்த உயிர் வளர்க்கும் தொழில். சூரியன் மற்றும் அண்டத்திலிருக்கும் கோள்களின் இயங்கு முறையைச் சார்ந்து ஓழுங்கமைக்கப்பட்டு, பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே செழுமைப் படுத்தப்பட்ட விவசாய

முறை நம்முடையது. இயற்கையின் சாதக பாதகங்களை இயற்கை அறிவியலின் துணைகொண்டே நம் முன்னோர்கள் வெற்றிக் கொண்டிருக்கிறார்கள். எதெற்கெடுத்தாலும் ஆராய்ச்சி கூடத்திற்குள் புகுந்துக்கொண்டு தரவுகளை (data) நம்பி காலம்கழிக்கும் இன்றைய ஆராய்ச்சியாளர்கள் போல் இல்லாமல் இயற்கையை பல தலைமுறைகளாக உன்னிப்பாக கவனித்து, அதனால் ஏற்றப்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் வளர்த்தெடுக்கப்பட்டது நம்முடைய விவசாய முறை.

இன்றைக்கு உலக கலாச்சாரத்திற்கு அளவுகோளர்களாகவும், நுகர்வு கலாச்சாரத்தின் அடிமைகளாகவும் இருக்கும் மேல் நாட்டவர்கள் காடுகளில் காட்டுமிராண்டிகளாகத் திரிந்துக்கொண்டிருந்த நூற்றாண்டுகளில் நம்முடைய முன்னோர்கள் விவசாயத்திற்கென நீர் பாசனக் கலாச்சார முறையை நடைமுறையில் வைத்திருந்தார்கள். நீர் பொய்த்து விவசாயம் அழிந்து பஞ்சம் ஏற்படும் காலங்களுக்குக் கூட நம் முன்னோர்கள் தங்களை பக்குவமாக தயார் படுத்திக் கொண்டிருக்கிறார்கள். சிந்து சமவெளி நாகரீக நகரங்களான கலிபங்கான்” “லோத்தல்போன்ற ஊர்களில் மிகப் பெரிய அளவில் கட்டமைக்கப்பட்ட பொது தானிய சேமிப்பு கட்டடங்களே இதற்கு போதுமான சாட்சி. இந்த கட்டட அமைப்புகளின் காலம் இன்றையிலிருந்து சுமார் 9000 வருடங்கள் பழமையானது. இன்றைக்கு நமது விவசாயிகளுக்கு பாடமெடுக்கும் பன்னாட்டு உர விதை நிறுவன உரிமையாளர்களின் முன்னோர்கள் 9000 வருடங்களுக்கு முன்பு அரையும் குறையுமாக தோலாடை உடுத்திக்கொண்டு வேட்டையாடி பெரும் உணவிற்காக நாயாய் பேயாய் திரிந்துக்கொண்டிருந்தார்கள். இவர்களின் கைகளில் இன்று நம் நாட்டு விவாசாயிகள், இதற்கு நமது ஆட்சியாளர்களின் ஆதரவு. இது அவுத்துப்போட்டு ஜிங்கு ஜிங்குன்னு ஆடுறக் கொடுமைய விட மிக கொடுமை.

மனிதத் தேவைக்கு விவசாயம் என்றிருந்த இந்திய விவசாய முறையை பல நூற்றாண்டுகளாக விவசாயத்தில் ஈடுபடாமல் ஆனால் விவசாய உழைப்பை உடல் கூசாமல் உட்கார்ந்து தின்ற இந்திய ஆளும் வர்கத்திலிருக்கும் அவாளும், அவாளின் தாளத்திற்கு தப்பாமல் தலையாட்டும் ஆட்சியாளர்களும் பசுமை புரட்சி என்கிறப் பெயரில் பன்னாட்டு நிறுவனங்களை உள்ளே விட்டு இன்று நம் விவசாயத்தை நுகர்வுப் பொருளைத் தயாரிக்கும் தொழிற் கூடமாக மாற்றிவிட்டார்கள். இந்த பசுமை புரட்சி கொடுமைக்காக வலிய உண்டாக்கப்பட்ட வியாக்கியானம் எல்லோருக்கம் உணவு. ஒரு இந்தியக் குடிமகனோ, மகளோ வறுமைக் கோட்டிற்கு கீழேயிருந்தாலும் சரி, அதை பிடித்து ஊஞ்சலாடினாலும் சரி அவருக்கு மூன்று வேளையும் தரமான சத்தான உணவு மலிவு விலையிலோ, இலவசமாகவோ கிடைக்கும் என்பது இந்த பசுமை புரட்சியின் உள்ளார்ந்த சாரமாக முன் வைக்கப்பட்டது. அத்தோடு நில்லாமல் அபரிதமான உணவு உற்பத்தி ஏற்றுமதிக்கு வழி வகுத்து விவசாயிகளை செல்வ செழிப்பில் உருண்டு புரல வைக்கும் என்றும் சொல்லப்பட்டது.

இதற்கு இயற்கை விவசாயம் ஒருபோதும் இந்தியாவின் கடைநிலை குடிமகனுக்கு கஞ்சிக் கூட ஊற்றாது என்கிற ஒரு வினோதமான கண்டுபிடிப்பை பன்னாட்டு உர நிறுவனங்கள்

அதிகாரப் பூர்வமாக கண்டுபிடித்ததோடு நிற்காமல் அதற்கு (Copy Patent Rights ) எல்லாம் வாங்கிக்கொண்டு சிலப் பல டாலர் பெட்டிகளோடு இந்தியா வந்திறங்கின. இந்த வினோத கண்டுபிடிப்பைக் கேள்விப்பட்டதும் விவசாயம் என்றால் வட்டமாக இருக்குமா சதுரமாக இருக்குமா என்று கேட்கும் இந்திய அறிவுசார் அலங்கோலங்கள் புல்லிரிப்பெடுத்துப்போய் தீடிரென்று கடைநிலை இந்தியக் குடிமகனுக்காக கண்ணீர் விட்டார்கள். இயற்கை விவசாயத்தில் விலையும் உணவுப் பொருளை பதுக்காமல் பகிர்ந்துக் கொடுத்தாலே இந்தியாவின் கடைநிலை குடிமகனென்ன, ஆப்ரிக்க கண்டத்தின் கடைநிலை குடிமகன் கூட வயிரு முட்ட சாப்பிடலாம் என்பதை படு நாசுக்காக மறைத்துவிட்டு கடைநிலை குடிமகனின் கஞ்சிக்கு தீர்வு தேடுகிறோம் என்கிறப் பெயரில் Commission-க்கு நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு பன்னாட்டு உர நிறுவனங்களோடு சேர்ந்து பசுமை புரட்சியை இந்திய விவசாயத்தில் கட்டவிழ்த்துவிட்டார்கள்.

இந்த வினோதக் கண்டுபிடிப்பை எதிர்த்து எந்த படித்த வர்கமும் கேள்வி எழுப்பிவிடக் கூடாது என்பதில் திட்டவட்டமாக இருந்த ஆளும் வர்க்கம் முன்வைத்த பிரச்சாரம், இந்தியா வல்லரசாவதற்கு இது போன்ற பசுமை புரட்சித் திட்டங்கள் அவசியம். இவைதான் வளர்ச்சிக்கான வழிகள்.  பொதுவாக இந்தியாவில் படித்த வர்கமாக்கும் என்று மேல் நாட்டு அரைவேக்காட்டுத்தனத்தை காப்பியடித்து திரியும் படித்த மாக்கான்களுக்கு ஒரு வியாதி உண்டு. அது வல்லரசு வியாதி. இந்த மாக்கான்களிடம் இந்தியா வல்லரசாக வேண்டுமென்றால் ஆடு போல் மூன்று வேலையும் விடாமல் கணைக்கவேண்டும் என்றால் அதையும் கூட எதிர் கேள்வியில்லாமல் செய்வார்கள். இப்படித்தான் இன்றும் கூட மக்களுக்கு எதிரான அரசாங்கத்தின் தீவிரவாத திட்டங்கள் வல்லரசு, நாட்டின் வளர்ச்சி என்கிறப் பெயரில் பன்னாட்டு நிறுவனங்களின் Commission-களுக்கு ஆசைப்பட்டு நிறைவேற்றப்படுகின்றன.

அதிக உற்பத்தி அதன் மூலம் அதிக வருமானம் அதன் மூலம் காரு பங்களா என்று நோகாமல் நோம்பு கும்பிடலாம் என்று இந்திய விவசாயிகளுக்கு பசுமை புரட்சித் திட்டங்களின் மூலமாக ஆசைக்காட்டபட்டது. தங்களின் தேவைக்கு போக மிகுதியை சந்தைக்கு கொண்டுவந்துக் கொண்டிருந்த இந்திய விவசாயிகளுக்கு அதிக மகசூல் அதிக உற்பத்தி அதிக நுகர்வு அதிக லாபம் என்கிற பன்னாட்டு நிறுவனங்களின் கல்லாவை நிரப்பும் நுகர்வுக் கலை அறிமுகப்படுத்தப்பட்டது. அதிக விவசாய உற்பத்திக்கு உங்களின் இயற்கை அறிவியலெல்லாம் செல்லுபடியாகாது எங்களின் உரங்களை காசு கொடுத்து வாங்கி ஊற்றி பயிர்களை முக்குங்கள் மகசூல் பிய்த்துக் கொள்ளும் என்று பசுமை புரட்சியின் பாலப் பாடம் சொல்லித்தரப்பட்டது. இந்த பாலபாடத்தை பன்னாட்டு உர நிறுவனங்கள் நேரடியாக எடுக்காமல் வேளாண் துறையிடம் ஒப்படைத்தது.

அனுபவ ரீதியாக கற்க வேண்டிய விவசாயம் போன்ற ஒரு நுணுக்கமான விசயத்தை ஏட்டு சுரக்காயாக மாற்றி சாதனைப் புரிந்த வேளாண் துறை களத்தில் அனுபவ ரீதியாக செயல்படும் விவசாயிகளை மண்டைக்குள் மசாலா இல்லாதவர்கள் என்று ஒதிக்கிவிட்டு 70-வதிற்கு-70 அறைக்குள் உட்கார்ந்துக்கொண்டு விவசாயத்தை முன்னெடுத்தது.

விவசாயத்தை பேனாவும் பேப்பரும் கொண்டு செய்யும் இந்த அறிவு கொழுந்துகளின் பார்வையில் விவசாயிகள் அறிவியல் அறிவு இல்லாதவர்கள். விவசாயத்திற்கு அறிவியல் தேவையில்லை இயற்கைதான் தேவை என்பதை இந்தக் கொழுந்துகள் எப்பொழுது புரிந்துக்கொள்ளுவார்கள்! அறிவியல் அறிவில்லாதவர்கள் என்று முத்திரை குத்தப்பட்ட விவசாயிகளிடம், அறிவியலை கன்னா பின்னா என்று முத்திரைக் குத்திக்கொண்ட வேளாண் துறை பசுமை புரட்சியை அதிக லாபத்திற்கான அறிவியல் கண்டுபிடிப்பாக முன்வைத்தது.

இயற்கையை நம்பியிருந்த விவசாய முறை பசுமை புரட்சியின் புண்ணியத்தால் பன்னாட்டு நிறுவனங்களின் ரசாயனங்களை நம்பியிருக்கத்தொடங்கியது. பன்னாட்டு ரசாயனங்களை பயன்படுத்தினால் மட்டும் போதாது பன்னாட்டு நிறுவனங்களின் விவசாய எந்திரங்களையும் பயன்படுத்த வேண்டும் என்ற அறிவியல் கண்டுபிடிப்பையும் வேளாண்துறை விவசாயிகளிடம் அறிமுகப்படுத்தியது. எல்லோருக்கும் உணவு, அதிக உணவு உற்பத்தி, விவசாயிகளுக்கு அதிக லாபம், இந்தயா வல்லரசு இப்படி பல கவர்ச்சிகரமான அலங்கரங்களோடு முன்வைக்கப்பட்ட பசுமை புரட்சி பன்னாட்டு உர மற்றும் விவசாய எந்திர உற்பத்தி நிறுவனங்களின் கல்லாவை நிரப்பத் தொடங்கயது. அறிவுசார் வேளாண்துறை மூலமாக எளிய இயற்கை விவசாயத்தை ஏறக்கட்டிய உர நிறுவனங்கள் இந்திய விவசாயத்தை அவர்களின் ரசாயனங்களுக்கு அடிமையாக்கின. உர மற்றும் இடு பொருள்களின் விலையை பன்னாட்டு நிறுவனங்களே சுதந்திரமாக அவர்களின் பேராசைக்கு ஏற்றபடி நிர்ணயிக்கத் தொடங்கினார்கள். பசுமை புரட்சிக் கண்ட ஆளும் வர்க்கம் இதற்கு தங்களின் முழு ஆசீர்வாதங்களையும் வழங்கினார்கள்.

வல்லரசு என்கிற வியாக்கியானத்தோடு பன்னாட்டு உர நிறுவனங்களுக்கு விவசாயத்தை தாரை வார்ரத்துக்கொடுத்த ஆட்சியாளர்கள் உர நிறுவனங்களின் பேராசை பிடித்த விலை நிர்ணயங்களை கட்டுப்படுத்த முன்வரவில்லை. அதற்கு முற்றிலும் மாறாக பன்னாட்டு உர இறக்குமதி மீதான இறக்குமதி வரியை படிப்படியாக குறைக்கத் தொடங்கினார்கள். அதிக லாபம் என்று ஏமாற்றப்பட்ட விவசாயிகளிடம் படிப்படியாக உர நிறுவனங்களின் அசுர லாபவேட்டை தொடங்கியது. உர விலைக்கேற்ப்ப விவசாய மானியங்களை அளிக்கவேண்டிய அரசாங்கம் ஒரு புறம் மானியங்களை குறைத்துக்கொண்டே வர, ரசாயன உரத்தை நம்பிய விவசாயிகள் கொஞ்சம் கொஞ்சமாக கடனாளியானார்கள். கடனாளி என்றால் தனியாரிடம் கடன் படுவது மட்டுமில்லாமல் அரசாங்கத்திடமும் கடன்படத் தொடங்கினார்கள். இயற்கையின் சங்கிளித் தொடரில் எந்தவித குறையும் இல்லாமல் விளைந்த விவசாய நிலங்கள் பசுமை புரட்சி போட்ட அம்மன ஆட்டத்தில் ரசாயன உரங்கள் இல்லாமல் வேலையாகாது என்கிற போலித் தோற்றத்திற்கு வந்துவிட்டன. இது ஒருபுறம் என்றால் உற்பத்தியை ஏற்ற விலைக்கு வாங்கிக்கொள்ள ஆலில்லாத நிலை. அதிக விலை கொடுத்து உர பொருட்களை வாங்கி உற்பத்தி செய்த விவசாயப் பொருட்களை முதலுக்கே மோசம் என்கிற விலைக்கு விற்க வேண்டிய நிற்பந்தம் விவசாயிகளை அழுத்தத் தொடங்கியது. பசப்பு வார்த்தைகளை


விவசாயிகளிடம் பேசிய மத்திய மாநில அரசுகள் கூட விவசாயிகளுக்கு ஏற்ற விலையை கொடுத்து உற்பத்தி பொருட்களை வாங்க மறுத்தன. பசுமை புரட்சி என்ற மாயமால வார்த்தை வெளுக்கத் தொடங்கிவிட்டது. பன்னாட்டு உர நிறுவனங்களின் கொள்ளை லாபத்துக்கான திறவுகோள் பசுமை புரட்சி என்கிறப் பூனை கட்டு சாதத்திற்குள் இருந்து வெளியே வந்துவிட்டது. விளைவு விவசாயிகளின் தற்கொலைப் புள்ளி விவரங்கள். விவசாயிகள் மட்டும் தற்கொலை செய்துகொண்டால் போதுமா, அவர்களுக்கு வழித் துணையாக அவர்கள் நம்பி இருக்கும் விவசாய நிலங்களும் தற்கொலை செய்துக் கொள்ளவேண்டாமா? ஆம் ஆம் அதுதானே முறையும் கூட என்றுத் துள்ளிக்குதித்த ஆட்சியாளர்கள் மேலும் மேலும் உர இறக்குமதிக்கான வரிகளை குறைத்து பாவம் கோடிகளில் பஞ்சம் பிழைக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு உதவி கரம் நீட்டினார்கள். ரசாயன உரங்கள் விவசாய நிலங்களை குத்துயிரும் குலை உயிருமாக மாற்றியக் கையோடு இந்திய நீர் நிலைகளையும் பதம் பார்த்தது. விவசாய நிலத்திலும் நஞ்சு, பாசன நீரிலும் நஞ்சு, படித்த மாக்கான்கள் சத்தான உணவு என்று நஞ்சைத் தின்று இந்தியா வல்லரசாக கொட்டும் மழையில் உப்பு விற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

பன்னாட்டு நிறுவனங்களின் லாபத்திற்காக நாங்களும் எங்கள் தலைமுறையும் நஞ்சை சாப்பிட வேண்டுமா? எங்கள் நாட்டு விவசாயிகள் தற்கொலை செய்துக்கொள்ள வேண்டுமா? எங்கள் இயற்கை வளங்கள் கொள்ளை போக வேண்டுமா? என்று எந்தப் படித்த மாங்கா மடையர்களுக்கும் ஒரு சின்னக் கேள்விக் கூட எழுப்ப தோன்றவில்லை ஆனால் தன் சுய லாபத்திற்காக, தன் வேலை லஞ்சம் இல்லாமல் நடக்க வேண்டும் என்பதற்காக அரசாங்க எந்திரத்தை எதிர்த்து, லஞ்சமே எல்லா பிரச்சனைகளுக்கும் ஊற்று அதை ஒழித்துவிட்டால் இனி எல்லாம் சுகமே என்ற மொன்னை வாத்தை முன்வைத்து காமெடி உண்ணாவிரதம் இருக்கும் இந்த ஒன்றுக்கும் உதவாத உருப்படிகளை எந்த மொழியில் காரித் துப்புவது? அசல் பிரச்சனையிலிருந்து திசை திருப்பும், புறையோடியப் புண்ணுக்கு மருத்துவம் தேடாமல் மேல் தோளுக்கு அலங்காரம் தேடும் படித்த நடுத்தர வர்க்க கோமாளிகளை எந்த சர்கஸ் கூடாரத்திற்குள் விட்டு வேடிக்கை பார்ப்பது!

பன்னாட்டு நிறுவனங்களின் மறைமுக அரவணைப்போடு நடைப்பெறும் இதுபோன்ற “Lime Light” உண்ணாவிரதங்கள் எந்த வகையில் பன்னாட்டு நிறுவனங்கள் இயற்கை வளத்தை சுரண்டி கொள்ளையடிப்பதை எதிர்த்து எதிர்வினை புரிகிறது? லஞ்சத்தை ஏதோ ஒரு பால்மசோதாவை கொண்டுவந்து ஒரு பேச்சுக்கு ஒழித்துவிட்டோம் என்று வைத்துக்கொண்டால் கூட பன்னாட்டு பாகாசுர நிறுவனங்களின் லாபவேட்டை நின்றுவிடுமா? அப்படி நிறுத்தி விடத்தான் இந்த “Lime Light” உண்ணாவிரத உருப்படிகளால் முடியுமா? இந்த படித்த வர்க்க கோட்டான்களின் (என்னையும் சேர்த்துதான்) அருமையும், “Made in Foreign” என்கிற முத்திரைக் குத்தி நஞ்சை கையில் கொடுத்தால் கூட தேவாமிரதமாக கருதி எதிர் கேளிவி இல்லாமல் விழுங்கிவிடும் இவர்களின் பெருமையும் அறிந்த பன்னாட்டு நிறுவனங்கள் விவசாயத் தொழில் பொறுத்த மட்டில் இப்பொழுது உரத்தோடு நிறுத்திவிடாமல் மரபு மாற்று விதை (Genetically Refined) விற்பனையிலும்

இறங்கிவிட்டன. இதையும் பசுமை புரட்சியின் துணைக்கொண்டு இந்திய விவசாயிகளிடம் அறிமுகப்படுத்தியது. வேளாண்துறையின் புண்ணியத்தால் பலிக்கு முன்வரும் ஆடாக இந்திய விவசாயிகள் முன்வந்து ஆரம்பக் கட்டமாக மரபனு மாற்றுப் பருத்திகளை தங்கள் கைக்காசு போட்டு வாங்கி பயிரிட்டார்கள்.

இதில் வினோதம் இந்த வகை மரபனு மாற்று பயிர்களின் விதைகளை ஒருமுறை வாங்கி மீண்டும் மீண்டும் விளைச்சலுக்கான விதையாக பயன்படுத்த முடியாது. ஒவ்வொரு முறை பருத்தி பயிரிடுவதற்கும் அதை விற்பனை செய்யும் பன்னாட்டு நிறுவனத்திடம் அவர்கள் சொல்லும் விலைக்கு தான் வாங்கவேண்டும். விவசாயிகளின் தனியுடமை சொத்தாக இருக்கும் விதை உரிமையைக் கூட பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளை அடிக்கும் சொத்தாக மாற்ற ஆட்சியாளர்கள் பசுமை புரட்சியின் புண்ணியத்தால் கொஞ்சமும் தயங்கவில்லை. வழக்கம் போல மரபனு மாற்றுப் பருத்திகளை விளைவித்த விவசாயிகள் உற்பத்தியை வாங்க ஆளும் தேளும் இல்லாமல் விவசாயத்திற்காக வாங்கிய கடன் சுமை தாங்காமல் பரமனின் பாதம் தழுவிக்கொண்டார்கள்.

பன்னாட்டு மரபனு விதை நிறுவனங்களை இந்திய விவசாயத்தில் ஆரத்தி கரைத்து நுழைய விட்ட ஆட்சியாளர்கள் அந்த நிறுவனங்களின் கல்லாவை இந்திய விவசாயிகள் கோமணத்தில் சொருகி வைத்திருந்த கொஞ்ச நஞ்ச பணத்தையும் கூடப் பிடுங்கி நிரப்பிவிட்டு மரபனு மாற்று பருத்தி உற்பத்தி செய்த விவசாயிகளிடம் இருந்து அந்த பஞ்சு உற்பத்தியை வாங்க மறுத்ததோடு பஞ்சு ஏற்றுமதிக்கான வரியையும் உயர்த்திவிட்டார்கள். பரமன் தன் பாதம் தழுவிக் கொள்ள மேலும் பல விவசாயிகளை பரலோகம் அழைத்துக்கொண்டார். பருத்தியில் பசுமை புரட்சி செய்து விவசாயிகளை பாஸ்போர்ட் இல்லாமல் பரலோகத்திற்கு அனுப்பிவைத்த பன்னாட்டு நிறுவனங்களும் இந்திய ஆட்சியாளர்களும் இப்பொழுது மரபனு மாற்றப்பட்ட உணவு பயிர்களின் உற்பத்தியிலும் மூக்கை நுழைக்கத் தொடங்கிவிட்டார்கள். இதன் வெல்லோட்டமாக மரபனு மாற்றப் பட்ட பெரிய பி.டி.கத்திரிக்காயை தன் கையில் பிடித்தபடி “I am a B.T boy” என்று இந்திய ஆட்சியாளர் ஒருவர் Sales Boy-யாக மாறினார். மரபனு மாற்று அறிவியல் என்கிறப் பெயரில் இந்திய விவசாயிகளின் விதை உரிமையை பன்னாட்டு நிறுவனங்களின் அறிவுசார் சொத்தாக மாற்றும் வேலைகள் நடந்துக்கொண்டிருக்கிறது.

இடத்தையும் மடத்தையும் பிடித்த பன்னாட்டு நிறுவனங்கள் மடத்திலிருக்கும் கிணற்று தண்ணியை மட்டும் விட்டுவைப்பார்களாக என்ன! தண்ணீர் என்பது ஒவ்வொரு குடிமகனின்அவன் மேல்தட்டோ அடித்தட்டோ-அடிப்படை உரிமை. தண்ணீரை பயன்படுத்த அவன் யாரிடமும் அனுமதி கேட்க வேண்டியதில்லை. தண்ணீரை அளவோடு பயன்படுத்த வேண்டும் என்பது மட்டுமே ஒவ்வொரு குடிமகனின் கடமை. அதே சமயத்தில் தண்ணீர் எந்த ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் தனி உடமை சொத்தாகவும் இருக்க முடியாது அப்படி இருக்குமானால் அது சமுகவிரோத செயலே. ஆனால் சமிபத்தில் ஒரு மாநாட்டில் பேசிய இந்தியப் பிரதமர் தண்ணீர் தனியார் மயமாக்கப்பட



வேண்டும் அப்பொழுதுதான் அதன் பயன்பாட்டு அருமை குடிமக்களுக்கு புரியும் என்றார். என்னே ஒரு தண்ணீர் மேலாண்மைக் கண்டுபிடிப்பு!

நம் வீட்டுத் தண்ணீரை தண்ணீர் மேலாண்மை என்கிறப் பெயரில் ஏதோ ஒரு பன்னாட்டு பாகாசுரக் குழுமத்திறகு தூக்கி கொடுத்துவிட்டு நாம் குடிக்க, கழுவ தண்ணீருக்காக அவனிடம் கையெந்தி நிற்கவேண்டும். நம் வீட்டுத் தண்ணீரை நம்மிடமே விற்று ஏதோ ஒரு பன்னாட்டு பாகாசுரக் கும்பெனி கொள்ளை லாபம் சம்பாதிக்க அதன் மூலம் நாம் தண்ணீர் பயன்பாட்டு மேலாண்மையை கற்றுக்கொள்ள வேண்டும். பேஷ்! பேஷ்!

அண்ணாக்களுக்கு பின்னாடி ஓடும் படித்த “Lime Light” உண்ணாவிரத உருப்படிகள் ஊழலை ஒழிப்பதன் மூலம் கள பலியாகும் விவசாயிகளை காப்பாற்றி விடுவார்களா? கொள்ளை போகும் இயற்கை வளங்களை மீட்டு விடுவார்களா? ஒன்றும் செய்யாமல் சும்மா இருப்பதற்கு ஊழலையாவது ஒழிக்கலாமே என்று கைப்புண்ணுக்கு கண்ணாடி தேடும் வேலையெல்லாம் நம்மை கடைதேற்றாது. ஏட்டு கல்வியில் அறிவைத் தொலைத்த, ஏன் எதற்கு என்றக் கேள்வியே இல்லாமல் தனி மனித வழிபாட்டிற்கு பின்னால் ஓடும் படித்த வர்க்கம் எப்பொழுது பசுமை புரட்சி, பன்னாட்டு அறிவியல் புரட்சி போன்ற சொல்லாடல்களின் பின்னால் ஒலிந்திருக்கும் உண்மைத் தன்மையை புரிந்தகொள்ளப் போகிறார்கள்?


நவினா அலெக்ஸாண்டர்.
naveenaalexander@yahoo.com





Comments

Popular posts from this blog

கண்ணுறக்க நேர கதை சொல்லியின் கதை.

மந்திரம், மந்திரவாதி.....புத்தகத்தின் வெள்ளோட்ட சிறு துளி....

களப்பிரர் என்னும் கலி அரசர்