ஜான் ஆபிரஹாம் கலகக்கார கழுதை.



சினிமா என்னும் அற்புத விளக்கைத் தமிழ் நாட்டில் தேய்த்தத் தொடக்கக் காலத்திலிருந்து தறபோது வரை அதன் இயங்கியல் எப்படி இருக்கிறது? சினிமாவின் தாக்கம் எப்படி உணரப்பட்டிருக்கிறது? உணர்த்தப்பட்டிருகிறது? சினிமா கலை ஊடகமா அல்லது பணம் காய்க்கும் கற்பக மரமா அல்லது புகழ் வெளிச்சத்தில் ஒரு சிலரை நனைத்தெடுக்கும் மந்திர விளக்கா? இப்படி தமிழ் சினிமாவைக் குறித்து பலக் கேள்விகளை முன்வைத்துக்கொண்டே போகலாம். உண்மையில் சினிமாவிற்கு ஏன் இந்த ஈர்ப்பு? இந்த கேள்விக்கு மிக எளிதாக பதில் சொல்லிவிடலாம். அது மனிதனின் மனவியலோடு தொடர்புடையது. சினிமா மிகவும் வலிமையாக இருப்பதற்கும் இதுவே காரணம்.

அது என்ன மனவியல்பு? கதை கேட்டல் மற்றும் கதை சொல்லல். மனித இனம் பூமியில் தோன்றிய காலம் தொட்டு இன்றுவரை ஒரிடத்தில் ஒன்று சேர்வதறகு அவன் கடைபிடிக்கம் ஒரு விசயம் கதைகேட்பது. வேட்டையாடியாக நாகரிகத்தைத் தொடங்கிய மனிதன் கூடவே கதைப்பதையும் தொடங்கிவிட்டான். வேட்டை முடிந்து, நட்சத்திரங்களும் நிலவும் மின்னும் அற்புத இரவுகளில் நெருப்பை மூட்டி சுற்றி அமர்ந்து கதை கேட்க்கும் பழக்கத்தை மனிதன் அனுபவிக்கத் தொடங்கினான்.

இந்த பழக்கத்திற்கு இன மொழி வேறுபாடேக் கிடையாது. அது பூமியின் எந்த மூலையாக வேண்டுமானாலும் இருக்கட்டும் மனிதன் நெருப்பை மூட்டி சுற்றி அமர்ந்துவிட்டால் அங்கே கதைகள் பொங்க ஆரம்பிக்கும். வாழ்வனுபவங்களையும், பயங்களையும், நம்பிக்கைகளையும் மையமாக கொண்டே வேட்டை நாகரீகத்தின் கதைகள் சூழன்றன. அவன் அனுபவித்த விசயங்களை அப்பட்டமாகப் பிரதிபலிப்பவை அக் கதைகள். அக் கதைகளில் ஒரு வித மூடநம்பிக்கைகளும், அமானுஷ்யங்களும் இருக்குமே தவிர எதுவும் மிகையாக இருக்காது. அவன் வாழ்விலிருந்து எந்தக் கதையும் வேறுபட்டு நிற்காது.


இந்த கதைக்கும் பழக்கம் உண்டாக்கிய நபர்கள்தான் கதை சொல்லிகள். இவர்களின் வாயிலாகவே கலை என்கிற அற்புத விசயம் தோன்றியது. இவர்களின் தனிப்பட்ட வளர்ச்சியே கலையானது இசை, ஓவியம், நடனம் என்று பரிணாம வளர்ச்சி அடைந்ததற்கு காரணம். நாகரீகங்களில் இலக்கியங்கள் தோன்றுவதற்கு தூண்டு கோளர்களும் கதை சொல்லிகளே.

நாகரீகத்தின் வளர்ச்சி காலகட்டத்தில் முதலாளித்துவத்துக்கள் மனித இனம் சிக்கியபொழுது வந்தது கதை சொல்லிகளான படைப்பாளிகளுக்கு பிரச்சனை. முதலாளித்துவம் சமூகத்தின் அதிபெரும் சாமானியர்களின் வாழ்வியலை பிரச்சனைகளை நோக்கித் தள்ளியபோது, படைப்பாளிகள் முதலாளித்துவத்தை நோக்கித் தள்ளபபட்டார்கள். சமூகத்தை இரண்டாகப் பிளந்த முதலாளித்தும் கலையையும் விட்டுவைக்கவில்லை. படைப்பாளிகளும் இரண்டுபட்டார்கள்.

சிறுபான்மை நாட்டுப புறக் கலைகள் பச்சை மனிதர்களின் கலைகளாக ஓதுக்கப்பட முதலாளித்துவத்தின் அம்சங்களில் ஒன்றான தனி மனித வழிபாடு கலைகளில் தோன்றத் தொடங்கின. இதன் விளைவு தனி மனிதப் போற்றுதல்களும், வாழ்க்கைக்கு உகயோகப்படாத மிகை ஊட்டப்பட்ட கற்பனாவாதங்களும் படைப்புகளில் தலையெடுத்தன. திண்றது செரிக்காமல் மேலும் மேலும் சமானநியர்களை சுரண்டும் முதலாளித்து வர்கத்திற்காகவே படைப்புகள் தோன்றின. சுரண்டும் வர்கத்தின் உப்புச் சப்பில்லாத பிரச்சனைகளும், நிகழ் வாழவிற்கு துளியும் சம்மந்தமில்லாத சமாச்சரங்களும் கலைகளில் சர்வ சாதாரணமாக உலாவந்தன. இந்த சக்கைளே கலைகள் என்கிறப் பெயரில் வெகு மக்களிடமும் பரப்பப்பட்டன.

இவற்றிர்கு பல வகையான பெயர்களும் அறிவு ஜீவிகளால் கண்டுபிடிக்கப்பட்டன. “Romantism” “Surrealism” “Renaissance” இப்படி ஏகப்பட்ட “ism” கள். ஆனால் ஒன்றுக் கூட மருந்துக்கும் முதலாளித்துவம், சமுதாயத்திற்கு ஏற்படுத்திய பாதகத்தைப் பற்றியோ, அதிலிருந்து விடுபடுவதற்கான ஆக்கப்பூர்வமான யோசனைகளைப் பற்றியோ வாய்த்திறக்கவில்லை. எப்படித் திறக்கும் முதலாளித்துவம் வீசியெறியும் எலும்புத் துண்டு அதன் வாயிலிருந்தால்!

ஆனால் இதற்கு முற்றிலும் வேறுபட்டது நாட்டுப்புறக் கலைகள். இந்த கலைகளுக்கு எந்த விதமான இட்டுக்கட்டிய வாயில் நுழையாத பெயர்களையும், முதலாளித்துவத்தின் தேவதூதர்களான அறிவு ஜீவிகள் கண்டுபிடிக்கவில்லை. சமானியர்களின் கண்றாவி வாழ்வனுபவங்களை புலம்பி ஒப்பாரி வைக்கும் இந்த கலைகளுக்கு எதற்கு பட்டுக்குஞ்சம் என்று நினைத்தார்களோ என்னவோ! “ism” கள் சுரண்டும் வர்கத்தின் தனிமனித வழிபாட்டு அரிப்பை சொறிந்துவிட்டுக்கொண்டிருந்த சமயத்தில், நாட்டுப்புறக் கலைகள் வேட்டையாடி நாகரீகத்தின் கதை சொல்லிகளை தங்களின் நலிந்துப்போன வாழ்வனுபவங்களை சொல்லுவதற்காக உயிர்ப்போடு வைத்திருந்தன. இதிலும் நாம் ஒன்றை மிகவும் உன்னிப்பாக பார்க்கவேண்டியிருக்கிறது. அது கலையின் ஒரு பிரிவான நாடகத்தைப் பற்றயது. கலைகளில், நாடகம் சற்று வலிமைக்கூடியது. கதையையும், கதையின் மாந்தர்களையும் காட்சி பிம்பங்களாக மாற்றி காண்பவரின் கருத்துக்குள்ளும், புரிதலுக்குள்ளும் வெகு சுலபமாக ஊடுருவக் கூடிய பண்பு நாடக கலைக்க உண்டு.

ஒரு கதையானது கேட்பவரின் அல்லது படிப்பவரின் புரிந்துகொள்ளும் திறனுக்கு ஏற்ப தாக்கத்தை ஏற்படுத்துவதைவிட, நாடக வடிவில் ஒரு நாடக கர்த்தாவின் காட்சி அமைப்பின் வாயிலாக காண்பவரின் புரிதலுக்குள் நுழைந்து ஏற்படுத்தம் தாக்கம் அதிகமானது. நாடகத்தை காண்போர் நாடக கர்த்தாவின் முழு ஆளுமைக்குள் வந்துவடுகிறார்கள். நாடக கதைசொல்லி முன்வைக்கும் கருத்துக்கள் காண்பவரின் கருத்துகளுக்குள் ஆழமாக வினையாற்றுகிறது. இந்த நுட்பத்தை புரிந்தக் கொண்ட முதலாளித்துவம், நாடக கலையை உலகெங்கும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. சுரண்டும் வர்க்கம், தங்களின் தப்பிலியாட்டத்தை ஒருபோதும் நாடகங்கள் பிரதிபலித்துவிடாதபடி படு கவனமாகப் பார்த்துக்கொண்டது.

சுரண்டும் வர்க்கத்தின் இந்த அதிதீவிர கவனத்தை நாட்டுப்புற கலைகளின் பகுதியானத் தெருகூத்து, தோல்பாவைக் கூத்து ஆகிய வற்றில் காணலாம். நாட்டுப்புறக் கதைப் பாடல்களும், வாய்மொழிக் கதைகளும் சாமானிய மனித வாழ்வின் பிரச்சனைகளை காலம் காலமாக பிரதிபலிக்க, காடசி வடிவக் கலைகளான தெருகூத்தும், தோல்பாவைக் கூத்தும் சுரண்டும் வர்க்கத்தின் புராணப் புலம்பல்களையே பிரதிபலித்து வந்திருகின்றன. நாட்டுப்புற வாய்மொழிக் கதைகளை தெருகூத்து எடுத்தாள சுரண்டும் வர்க்கம் மிக எச்சரிக்கையாக தடைசெய்து வந்திருப்பது புலப்படுகிறது. இந்த நிலையில்தான் சினிமா என்னும் அற்புத விளக்கு கொழுந்தவிட்டது.

கலைகளில், நாடகத்தை விட பலப் படி நிலைகளில் சினிமாவானது மிகவும் சக்திவாய்ந்தது. சினிமாவின் காட்சி வடிவமானது பல வகைகளிலும் அதைக் காண்பவரின் கருத்தையும் புரிதலையும் தன் கட்டுக்குள் கொண்டுவரக்கூடியது. சினிமாக் கதைசொல்லியான இயக்குனர் நினைத்தால் இதை பயன்படுத்தி சாமானிய மனிதப் புரிதலின் எந்த ஆழத்திற்கும் சென்று வர முடியும். சுரண்டப்படும் மக்களின் அவலத்தையும் கூட சமுதாய உணர்வுக்கொண்ட தேர்ந்த சினிமாக் கதைசொல்லியால் சாமானியன் புரிந்துக்கொள்ளும் வகையில் காட்சிப்படுத்த முடியும். ஆனால் இந்த சினிமாவும் சுரண்டும் வர்க்கத்தின் பிரச்சாரப் பிரசங்கியாக மாறிப்போனதுதான் கொடுமை.

சினிமாவின் அதீத சக்தியை மழுங்கடிக்கும் உத்தியாகவே சுரண்டும் வர்க்க அறிவு ஜீவிப் பிரசங்கிகளால் முன் வைக்கப்படும் வாதம், சினிமா வெறும் பொழுது போக்கும் சாதனம் மட்டுமே. மக்கள் தங்கள் கவலைகளை மறந்து சில மணிநேரங்கள் சந்தோஷமாக இருப்பதற்கான ஒரு ஊடகம் அவ்வளவுதான். இந்த ஒற்றை வாத்தை மூலதனமாக வைத்துக்கொண்டு சாமானிய மக்களிடையே மட்டரகமான ஒரு ரசனையை வளர்த்தெடுக்கும் வேலையை சுரண்டும் வர்க்கம் செய்துவருகிறது. இதே சினிமாவால், சாமானியர்களின் துன்பங்கள் மற்றும் கவலைகளுக்கான ஒட்டுமொத்தக் காரணமும் சுரண்டும் வர்க்கத்தின் பேராசைதான் என்பதை, தங்களின் துயரங்களுக்கு விடைத்தேடும் சாமானியர்களுக்கு புரிவைக்கமுடியும் என்பது தெரிந்தே முதலாளித்துவ அறிவு பூஜியங்கள் மேல் சொன்ன வாத்தை வெகு மக்களிடையே தினித்து வருகின்றன.

இந்த பொய் வாத்தின் நீட்சிதான் தமிழ் சினிமாவும். என்னத்தை எடுக்கிறோம், எதை எடுக்கிறோம் என்று எந்தவித கோட்பாடும், கட்டுப்பாடும் இல்லாமல் பொதுக் கழிவரைக்குள் புகுந்து ஆள் ஆளுக்கு கழிந்து வைப்பது என்றாகிவிட்ட இன்றையத் தமிழ் சினிமாவின் சுய இன்ப வேட்க்கைக்கு நடுவில் மறைந்துப்போன, மறந்துப்போன கதை சொல்லி ஜான் ஆபிரஹாம். அவர் வாழ்ந்த காலத்திலும் வேண்டுமென்றே மறக்கடிக்கப்பட்டவர். தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட, தேசிய விருதுப் பெற்ற தமிழ் படத்தை உருவாக்கிய கம்யூனிஸத்தில் திருமுழுக்குப் பெற்ற சித்தாந்தி. சுரண்டும் வர்க்கத்தின் வாய்மொழியில் கலக காரண். அரசாங்கங்களின் கருத்தியலில்  நக்ஸல் மற்றும் மாவோயிஸ்ட். சினிமா என்னும் ஊடகத்தின் சக்தியை முற்றும் முழுதும் உணர்ந்த குடிகாரக் கழுதை ஜான். சுரண்டலுக்கு பலியாகிப்போன சாமானியனின் அவல நிலையை அவனுக்கு விளங்க வைக்கக் கூடிய அற்புதமான கலை சாதனம் சினிமா என்பதை கண்ட படைப்பாளி.

சினிமாவை பொழுதுபோக்கு சாதனமாக மாற்றி ஒரத்தில் உட்கார்த்தி வைத்திருக்கும் தென்னிந்தியாவில் சினிமாவை உள்ளபடி அதற்குள்ள தளத்தில் வைத்துப் பார்த்தவர் ஜான். ஒரு படைப்பாளி தான் வாழும் சமூகத்தில் நிகழும் அவலங்களை, உயிர் பிழைப்பின் துன்பங்களை அந்த சமூகத்தில் ஒருவனாக நின்று எடுத்துக்காட்டவேண்டுமென்ற கொள்கையை தன் படைப்பின் உயிராக பாவித்த அவர் எடுத்த மொத்தப் படங்களின் எண்ணிக்கையை பத்து விரல்களுக்குள் அடக்கிவிடலாம். அதிலும் முழு நிலத் திரைப்படங்கள் என்கிற வரிசையில் மூன்று படங்களே வருகின்றன. அவை அக்கிரகாரத்தில் கழுதை, செறியச்சண்ட க்ருர கிருத்தியங்கள், அம்ம அறியான். ஆச்சரியம் என்னவென்றால் இம்மூன்றுப் படமும் சிறந்த படத்திற்கான தேசிய விருது பெற்றவைகள். தமிழ் சினிமாவில் நூற்றுக் கணக்கில் படைப்புகள் என்கிற பெயரில் சொந்தமாகவும், மற்றவர் படைப்புகளை திருடியும் வாந்தியெடுத்த ஜாம்பவான்கள் சாதித்தது என்ன? நடிகர்களின் கோமாளிக் கூத்துகளும், நடிகைகளின் அங்கங்களுமே மிச்சம்.

வேட்டை நாகரீகத்துக் கதை சொல்லிப் போல நிகழ் வாழ்வின் பிரச்சனைகளைப் பற்றி பேச வேண்டும் என்று தனியாத ஆவேசத்தில் திரிந்தவர் ஜான். அவரின், அக்கிரகாரத்தில் கழுதை, செறியச்சண்ட க்ருர கிருத்தியங்கள், அம்ம அறியான் ஆகிய படங்கள் சமுதாய சிந்தனைக் கொண்ட ஒரு வேட்டை நாகரீகத்துக் கதை சொல்லியாகத்தான் ஜானை நமக்கு அறிமுகம் செய்கின்றன. சமூகத்தின் அவலங்களை பிரம்மாண்டமாக காட்டுகிறோம் என்கிறப் போர்வையில் அசல் பிரச்சனையின் வேர்களைக் காட்டாமல், நுனிப் புல் மேயும் சினிமா உலக சீர் திருத்தவாதிகளின் அநாமதேய எதிரி அவர்.

 அடிப்படையில், கமயூனிஸத்தில் ஆர்வமுள்ள அவர் நடைமுறையில் கமயூனிஸம் எந்த அளவிற்கு சமூக அவலங்களுக்கு தீர்வுகாணும் என்ற சந்தேகமும் கொண்டிருந்தார். அதன் எதிரோலிகளை செறியச்சண்ட க்ருர கிருத்தியங்கள் மற்றும் அம்ம  அறியான் படங்களில் காணலாம். ஐம்பதாண்டுகளுக்கம் மேலான தமிழ் சினிமா வரலாற்றில் எத்தனையோ உச்சங்களும், சிகரங்களும் இருந்திருக்கின்றன, இருக்கின்றன, இந்த உவமேய உருப்படிகள் எந்த விதமான  சமூக விடுதலைக்கான கொள்கையை முன் வைத்தருக்கின்றன? குறைந்தபட்சம் சமூக அவலங்களையாவது எதிர்த்து வினை புரிந்திருக்கின்றன?

இந்த அறை வேக்காடுகளுக்கு மத்தியில் அவர் முன் வைத்த வாதம், எனக்கு பெண்ணை கூட்டிக்கொடுக்கத் தெரியாது. ஐந்து லட்சத்துடன் ஒரு படம் எடுக்க என்னிடம் இவன்கள் வந்தால் என்னாலும் முடியும். சாதாரணமாக இப்படி ஒர் இரை கிடைத்தால் பாம்குரோவில் அறை எடுக்க வேண்டும். எக்ஸ்டிரா நடிகைகளை அதில் நிறைக்க வேண்டும். இவனுங்களுக்கு மாமா வேலை பார்க்கனும். நான் எதுக்கு இதை செய்ய வேண்டும்?

அவர் தன் படங்களுக்கான கதைகளை சமூகத்தில் தேடித் திரிந்தார். நடிகர்களை தன் கதைகளைச் சொல்லும் ஒரு கருவியாகவே அவர் கண்டார். அதற்கு மேல் நடிகர்களிடம் ஒரு கவர்ச்சியுமில்லை என்பது அவரின் பிடிவாதம். இது முதலாளித்துவ பிடிக்குள் இருக்கம் தமிழ் சினிமாவிற்கு எதிரான அவரின் அழுத்தமான எதிர்வினை. இந்த எதிர்வினையை முன்வைத்து எத்தனை சினிமா உலக சிற்பிகள் வினையாற்றியிருக்கிறார்கள்? Survival என்கிறப் பெயரில் நடிகர்களின் வழிபாட்டிற்கு பலியானவர்களே இந்த சினிமா உலக சிற்பிகள்.

சுரண்டும் வர்க்கம் எல்லா நிலைகளிலும் சாதாரண மனிதர்கள் மேல் திணிக்கும் அழுத்தங்களை எதிர்த்து அவர்கள் கேள்வி கேட்கவேண்டும் என்று ஜான் ஆபிரஹாம் விரும்பினார். சமுதாயத்தின் மேல் தட்டில் இருக்கும் சுரண்டும் வர்க்கத்தின் நலனே ஒட்டுமொத்த சமுதாயத்தின் நலன் போலவும், அவர்களின் இன்பத் துன்பங்களே மானுடத்தின் சுக துக்கங்கள்போலவும், அவர்களின் ரசனைகளே ரசனைக்கான அளவுகோல் போலவும் முதலாளித்துவமும் அதன் Creative Agent களும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் சமயத்தில், கழுதையை சுரண்டப் படும் பச்சை மனிதர்களின் அடையாளமாக வைத்து, சுரண்டும் வர்க்கத்தை பகடிச்செய்ய ஜான் துணிந்திருக்கிறார்.

சாதாரண மனிதர்களை, சாதாரணமாகவே நடத்தும் அறிவு ஜிவிப் போக்கை அவர் எதிர்த்தார். சினிமாவை ஒரு மாற்றத்திற்கான இயக்கமாக முன்னெடுத்தார். மக்களுக்கான சினிமாவை, அவர்களிடமே பணம் சேகரித்து, அவர்களின் பிரச்சனைகளை அவர்கள் புரிந்துக் கொள்ளும் வகையில், அவர்களுக்கு காசுவாங்காமல் திரையிட்டு காண்பித்தார். இந்த வகையில் அம்ம அறியான் படம் இந்திய படங்களுக்கு ஒரு முன்னோடி.

இந்த சினிமா புரட்சிகள் நடிகர்களுக்கு பின்னால் ஒடி, குப்பைகளைக் கதைகளாகத் திரித்து, நீலப் படத்தைப் பார்த்து சுய இன்பம் செய்துகொள்ளும் ஒருவனின் மனநிலைக்கு நிகராக, தாங்கள் முன் வைக்கும் நடிகர்களின் சேஷ்டைகளைப் பார்த்து வெகு மக்களும் தங்கள் ரசனையை masturbation செய்துக்கொள்ள வேண்டும் என்று கருதும் வேலையில், ஜான் ஆபிரஹாம் ஒரு கழுதையையும் அக்கிரகாரத்தையும் தன் படத்தில் முன் வைத்தார்.

அக்கிரகாரத்தில் கழுதை தமிழகத்திற்குள் தடைசெய்யப்பட்ட தமிழ் படம். காரணம் இது தமிழ் கலாச்சாரத்திறகு எதிரான படம் என்பது அப்போதைய தமிழக அரசின் கருத்து. அக்கிரகார கலாச்சாரமே தமிழகத்தின் ஒட்டுமொத்த கலாச்சாரம் என்கிற வரலாற்று திரிபை இந்த படத்தை தடைசெய்த்தன் மூலம் முன் வைத்தது, ஆரியத்தைப் பாம்பு என்று பிரசிங்கித்த திராவிடக் கட்சியிலிருந்து தோன்றிய ஒரு கிளைக் கழகம். ஆரிய மாயை எழுதியவரின் தம்பிகள் பார்பனியத்தின் அடிமைகள் தான் என்பது வெட்டவெளிச்சமானது.

இப்பொழுதும் எவ்வளவோ சமூக சீர்கெடுகள் நம்மை சுற்றி நிகழ்ந்தபடி இருக்க, சினிமா பிரதிபலிப்பது தனி மனித துதிகளையே. இந்த கருமாந்திரங்கள் எந்த வகையில் விவசாயிகளின், தொழிலாளர்களின், பழங்குடிகளின் பிரச்சனைகளை பற்றி அலசுகின்றன? கொள்ளை போகும் இயற்கை வளங்களைப் பற்றி பேசுகின்றன? தங்களின் வாழ்வாதாரத்திற்காகப் போராடும் மக்களைத் தீவிரவாதிகள் என்று கொச்சைப் படுத்தும் அரசாங்கங்களின் தீவிரவாத்ததிற்கு எதிராக எந்த விதமான கேள்விகளை முன் வைக்கின்றன? ஒருவேளை ஜான் ஆபிரஹாம் இன்று உயிரோடு இருந்திருந்தால், கூடன்குளமோ, ந்நதிகிராமோ, மாவோயிஸ்டுகளோ அவர் படத்தின் கருவாகியிருக்கலாம்.

ஒரு வகையில் இந்த கட்டுரைக் கூட ஜான் ஆபிரஹாம் என்னும் தனி மனிதனின் துதியாகத் தோன்றலாம். ஆனால் இது வேட்டை நாகரிகக் கதை சொல்லிப் போல், சமுதாய அவலங்களைப் பிரதிபலித்த ஒரு தற்கால கதை சொல்லியின் பதிவே. குடிபோதையில், சந்தையில் வைத்து வேசியைக் கட்டிப்பிடித்த ஜான் ஆபிரஹாமை தலையில் தூக்கிவைத்துக்கொண்டு, சினிமாவை மீட்க வந்த ரட்சகன் என்று கூத்தாடும் கூறுகெட்டக் கோமாளிகள் அல்ல நாம். கூவத்திற்கு நடுவே தெளிவாக ஓடும் நல்ல நீரோட்டத்தைத் தேடும் அண்ணப் பறவைகள் நாம்.

 இந்த கட்டுரையை ஜான் ஆபிரஹாமின் வார்த்தைகளிலேயே முடிப்பது நல்லது என்றுப் படுவதால், இந்த ஜான் ஆபிரஹாம் மட்டும்தான் இப்படித் தெருவிலும், கடைத் திண்ணைகளிலும் அமரந்து பேசுவதற்காக உங்களுக்குக் கிடைப்பான். காரணம் நான் இந்த நாட்டின் பச்சை மனிதர்களைக் காண்பவன். ஏர்கண்டிஷன் அறைகளில் அமரந்து ஆர்ட் பிலிம் பற்றி தலை சூடேறும்படி ஆலோசிக்கும் அறிவு ஜீவி இயக்குநரல்ல நான்.

வேட்டையாடி நாகரிக கதை சொல்லியின் குரல் காற்றில் கரைந்தபடி இருக்கிறது.




                                                        நவீனா அலெக்ஸாண்டர்.
                                                        naveenaalexander@yahoo.com




Comments

Popular posts from this blog

கண்ணுறக்க நேர கதை சொல்லியின் கதை.

மந்திரம், மந்திரவாதி.....புத்தகத்தின் வெள்ளோட்ட சிறு துளி....

களப்பிரர் என்னும் கலி அரசர்