மந்திரம், மந்திரவாதி.....புத்தகத்தின் வெள்ளோட்ட சிறு துளி....



"வருடம் கி.மு. 1,00,000.

சுமார் 13 டிகிரி வடக்கிலும் (அட்சரேகை – Latitude), 80 டிகிரி கிழக்கிலும் (தீர்க்கரேகை – Longitude) இருக்கும் அந்த நிலப்பகுதி வெப்ப மண்டல காடுகளால் சூழப்பட்ட பகுதி1. காடு என்றால் அப்படியொரு அடர்த்தியான காடுகள் அவை. அவைகளின் இடையே அடர்த்தியான மரங்கள் அற்ற சமவெளி பகுதிகளுகும் கூட உண்டு. புற்கள் நிறைந்த சமவெளி. அவைகளுக்கு இடையே சதுப்பு நிலப்பகுதிகளும் ஏராளம் தாராளம்.

சொல்லப்போனால் தென்னிந்திய தீபகர்பத்தின் மிகப் பெரிய சதுப்பு நிலமும் அது சார்ந்த காடுகளும் இந்த பகுதியில்தான் இருக்கிறது2. (இருந்தது கிருத்துவுக்கு முன்பு ஒரு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பாக). காடுகள் அடர்த்தியாக இருக்கும் அதே சமயத்தில் முரட்டுத் தோற்றமும் கொண்டவைகள். ஆனால் அந்த முரட்டுத்தனத்தை மறைத்துக்கொண்டிருப்பது கண்களை பறிக்கும் பச்சை நிறம். அவைகள்தான் முரட்டுத்தனம் கொண்டவைகள் என்றால் அங்கே பொழியும் மழை என்பது அதைவிட முரட்டுத்தனம் கொண்டது.

சுமார் மூன்று மாதங்களுக்கு (அக்டோபர் தொடங்கி டிசம்பர் வரை – வடகிழக்கு பருவ மழை) முரட்டுத்தனமாக பொழியும் இடைவிடாத மழையே அந்த பகுதி காடுகளின் பசுமைக்கும், செழுமைக்கும், முரட்டுத்

1. இன்றைய பல்லாவரம். சென்னையின் நுழைவு வாயிலில் இருக்கும் புறநகர்.

2. இன்றைய மேடவாக்கம், வேளச்சேரி, பள்ளிக்கரனை மற்றும் திருவான்மியூர் பகுதிகள்.

தனத்திற்கும் மிக முக்கிய காரணம். வருடத்தின் பெரும்பாலான மாதங்களில் வெப்பம் நிறைந்து காணப்படும் அந்த நிலப்பகுதியில், வருடம் முழுவதும் பச்சைபசேல் என்று இருக்கும் அந்த காடுகளும், சமவெளிப்பகுதிகளும், சதுப்புநிலப் பகுதிகளும் அதிசயம்தான். அதனால்தானோ என்னவோ அந்த நிலப்பகுதியில் ஏராளமான விலங்குகளையும், பறவைகளையும் பூச்சி இனங்களையும் காண முடிகிறது.

திரும்பிய திசை எங்கும் சிறிய குன்றுகளும் அங்கே உண்டு. வானம் தெரியாத அளவிற்கு அடர்ந்து படர்ந்து கிடக்கும் காடுகளுக்கு இடையே குன்றுகள் எழுந்து நிற்பது, புல் வெளிக்கு இடையே காளான் குடைகள் முளைத்து நிற்கும் காட்சியை படக்கென்று நினைவிற்கு கொண்டுவந்துவிடும். தரையில் சூரிய வெளிச்சம் விழ முடியாத காடுகளையும், அவைகளின் இடையே முளைத்து நிற்கும் குன்றுகளையும் ஊடறுத்துக்கொண்டு ஒரு பெரிய ஆறும் அந்த நிலப்பகுதியில் ஓடிக்கொண்டிருக்கிறது3.

அந்த ஆற்றிலிருந்து சிறிய கிளை ஓடைகளும் வழி நெடுக பிரிந்து ஓடியபடி இருப்பது வழக்கான காட்சிகளில் ஒன்று. ஓடைகள் அங்குமிங்குமாக ஓடி அந்த நிலப்பகுதி முழுக்க பல சிறிய குட்டைகளையும், பெரிய குளங்களையும் ஏற்படுத்தியிருப்பதும் கண்கொள்ளாக் காட்சி. ஆற்றிலும் ஓடைகளிலும், குளங்களிலும், குட்டைகளிலும் மீன்களுக்கு, இறால் குஞ்சுகளுக்கு, நண்டுகளுக்கு, நண்டுக் குழுஞ்சுகளுக்கு அவைகளின் முட்டைகளுக்கு அளவே கிடையாது. இதற்கு சாட்சி அந்த நிலப்பகுதியின் காடுகளிலும், சதுப்பு நிலப்பகுதியிலும் கூடுகள் கட்டி குஞ்சு பொறித்திருக்கும் எண்ணிலடங்கா பறவை இனங்களே சாட்சி.

கொற்றவை கண் மூடி கிடந்தாள். கிடந்தாள் என்றால் தூக்க கலக்கத்தில் என்று கருதிவிட வேண்டாம். வேங்கையின் தோல் கொண்டு மூடியிருந்த அவளுடைய உடல் முழுவதும் முதல் நாள் இரவில் பெய்து ஓய்திருந்த மழையின் நீர் துளி அடையாளம். காட்டிற்கும் சதுப்பு நிலத்திற்கும் இடையில் இருந்த முழங்கால் அளவு உயர புல்வெளியில் அவள் கிடந்தாள். வானில் மழை மேகங்களின் திரட்சி காரணமாக அந்த விடியல் பொழுது

3. இன்றைய அடையாறு.

சற்று மந்த கதியுடனே புலர்ந்துக்கொண்டிருந்தது. அவளின் உடலில் அசைவு என்பதற்கான எத்தகைய அடையாளமும் இல்லை. ஒன்பது அடி உயரம் கொண்ட கிடா மான் ஒன்று காட்டின் விளிம்பில் தலைக்காட்டி அவள் கிடந்த திசையை பார்த்து மூக்கில் எச்சில் தெறிக்க இரண்டு முறை ஓசை எழுப்பியது. அவளால் தனக்கு ஏதும் ஆபத்து வந்துவிடுமோ என்கிற எச்சரிக்கை உணர்வுடன்.

புல்வெளியின் மறைவில் வேட்டையாடுபவர்கள் அசைவற்று கிடக்கும் காட்சிகளை இதற்கு முன்பாக பல முறை அந்த கிடாமான் பார்த்திருக்கிறது. அதன் கூட்டாளிகளில் பல அப்படி வேட்டையாடப்பட்டு உயிரை விட்டிருப்பதும் அதற்கு தெரியும். புல்வெளியின் மத்தியில் கிடந்த கொற்றவை தன்னை வேட்டையாட வந்திருப்பதாக அது நினைத்துக்கொண்டதன் காரணமாக எச்சரிக்கை ஓசையை எழுப்பியது அது. மேலும் இரண்டு முறை முன்பைவிட அதிகமாக குரலை எழுப்பி அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்தது.



கொற்றவையின் உடலில் துளி சலனமும் இல்லை. அவள் உணர்வுடன் இருந்தால்தானே உடலில் சலனம் ஏற்பட. அவள் மரணத்தை அல்லவா நெருங்கிக்கொண்டிருக்கிறாள். அது எப்படி அந்த கிடாமானுக்கு தெரிய. அவளுடைய பின் மண்டையிலிருந்து இரவு முழுவதும் வழிந்திருந்த இரத்தம் புல்வெளியின் ஈர மண்ணுடன் சொத சொத என்று நீர்த்துப்போய் கலந்திருந்தது. இப்போதும் அவளுடைய பின் மண்டையிலிருந்து இரத்தம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறியபடிதான் இருக்கிறது....."


Comments

Popular posts from this blog

கண்ணுறக்க நேர கதை சொல்லியின் கதை.

களப்பிரர் என்னும் கலி அரசர்