தென்னமெரிக்க தமிழர்கள்.....புத்தகத்தின் சிறு துளி.....



"வடக்கு அமெரிக்க கண்டம் மற்றும் தெற்கு அமெரிக்க கண்டம். இன்றைக்கு வடக்கு கண்டம் அமெரிக்கா (United States of America) என்றும் தெற்கு கண்டம் தென்னமெரிக்கா என்றும் குறிப்பிடப்படுகிறது. இன்றைக்கு இந்த இரண்டு கண்டங்களும் ஐரோப்பிய இனங்களின் குடியேற்றத்தால் நிறைந்திருக்கிறது. அமெரிக்கா ஆங்கில மொழி பேசுபவர்களால் பெரும்பான்மையாகவும், தென்னமெரிக்கா ஸ்பானிய மொழி பேசுபவர்களை பெரும்பான்மையாகவும் கொண்டிருக்கிறது.

குடியேற்றக்காரர்களால் நிறைந்திருக்கிறது என்றால் அந்த மண்ணின் பூர்விக குடிகள் அவர்கள் இல்லைப்போலும் என்கிற பொருள்தானே கொள்ளவேண்டியிருக்கிறது. நிச்சயமாக அப்படித்தான். ஏனென்றால் அந்த இரண்டு பெரும் கண்டங்களின் பூர்விக மண்ணின் மைந்தர்கள் ஐரோப்பிய இனங்கள் கிடையாது. அவைகளுக்கு என்று தனித்த வரலாறு உண்டு. மண்ணின் மைந்தர்களின் தனித்த நாகரீகங்கள் உண்டு. அந்த மண்ணிற்கே உரிய வரலாறும் மைந்தர்களும் அழிக்கப்பட்டு இரத்த சரித்திரமாக வரையப்பட்டதே இன்றைய அந்த கண்டங்களின் முகம். இரத்த கரையை மறைத்திருக்கும் நவீன முகத்தைவிட மண்ணின் மைந்தர்களின் உண்மை முகத்தை அவர்களின் வரலாற்றை தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம்தானே.

இப்போதைய புரிதலுக்காக வேண்டி வட மற்றும் தென்னமெரிக்க கண்டங்களை மொத்தமாக அமெரிக்க கண்டம் என்று வைத்துக்கொள்வோம். ஏப்களும், ஏப்களின் வழி தோன்றல்களான ஹோமோ குடும்பத்தை சேர்ந்த மனித-குரங்கினங்களும் ஆப்பிரிக்கா மற்றும் தென்இகிழக்காசிய பகுதிகளையே மையமாக வைத்துத் தோன்றியிருக்க வேண்டும் என்பதாக இன்றைய தொல்லியல் ஆதாரங்கள் தரவுகளை தந்துக்கொண்டிருக்கின்றன. அதன்படி பார்கையில் அமெரிக்க கண்டம் என்பது மனித உயிரினத் தோற்றத்திற்கான எத்தகைய புற ஆதாரங்களையும் கொண்டிருந்ததாக தெரியவில்லை.

வேறு வார்த்தைகளில் சொல்வது என்றால் பூமி தோன்றிய நாள் முதல் சுமார் கி.மு. 30,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை அமெரிக்க கண்டத்தில் மனித நடமாட்டம் என்பதற்கான வாய்பே இல்லாமலிருந்திருக்கிறது. மனித சஞ்சாரம் அற்ற பெரும் கண்டமாக. தென்கிழக்காசிய பகுதிகளில் இருந்த ஹோமோ சேப்பியன்கள் (இன்றைய மனித இனம்) ஆசிய கண்டத்தின் வடக்கு மற்றும் வட கிழக்கு பகுதிகளில் குடியேற்றங்களை நிகழ்த்தியபடி சைபீரியாவை அடைந்து பிறகு வட கிழக்கு சைபீரியா வழியாக இன்றைய அலாஸ்கா பகுதிக்குள் நுழைந்து அமெரிக்க கண்டத்தை அடைந்திருக்கலாம் என்று வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.



இன்றையலிருந்து ஒரு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பாக வட கிழக்கு சைபீரியாவையும் அலாஸ்காவையும் பியரிங் நீர் இணைப்பு முனை ஒன்றுடன் ஒன்று இணைத்திருந்தது. அதன் வழியாக ஆசிய கண்டத்திலிருந்து அமெரிக்க கண்டத்திற்கு கால் நடையாகவே இடம் பெயர்வதற்கான வாய்ப்பு நிலவியல் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருந்தது. பியரிங் நீர் இணைப்பு வழியாகவே வட கிழக்கு பகுதியிலிருந்த ஹோமோ சேப்பியன்கள் ஆசிய கண்டத்திலிருந்து இடம் பெயர்ந்து அமெரிக்க கண்டத்தை அடைந்திருக்கிறார்கள். இது நடந்தது சுமார் 70,000 வருடங்களுக்கு முன்பாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. கோட்பாடு அளவில் 70,000 வருடங்களுக்கு முன்பே அமெரிக்க கண்டத்திற்குள் மனிதர்கள் நுழைந்துவிட்டிருக்கலாம் என்று கருதப்பட்டாலும் அமெரிக்க கண்டத்தில் முதல் மனித குடியேற்றத்துக்கான தொல்லியல் ஆதாரங்கள் கி.மு. 25,000 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே கிடைக்க தொடங்குகிறது..."


Comments

Popular posts from this blog

கண்ணுறக்க நேர கதை சொல்லியின் கதை.

மந்திரம், மந்திரவாதி.....புத்தகத்தின் வெள்ளோட்ட சிறு துளி....

களப்பிரர் என்னும் கலி அரசர்