மாரடித்தழும் அசகாயசூரர்கள்



Spider Man, Super Man, He Man, Batman, Catwoman, Watchman, இப்படி அனைத்துவிதமான Man-களையும் தமிழ் கூறும் நல்லுலகம் அனேகமாக அறிந்தேவைத்திருக்கிறது. நம்முடைய Super-கள் மற்றும்  Star-களின் படங்களுக்கு இடையே, சில நேரங்களில் போட்டியாகவே இந்த ஹாலிவுட் அசகாயசூரர்கள் திரை அரங்குகளை தங்களின் கட்டுப்பாட்டிற்குள்கொண்டுவருவதுண்டுதமிழ் சமுகத்தின் கடைத்தேற்றமே நம்முடைய படங்கள் மட்டும்தான் என்று நம்மிக்கொண்டிருக்கும் தமிழ் சினிமா நட்சத்திரங்களுக்கும் ஹாலிவுட் அசகாயசூரர்களுக்கும் அதிக வித்தியாசம் ஒன்றும் கிடையாது. ஆனால் இவர்களுக்கு இடையே இருக்கும் சில வித்தியாசங்கள் மிக முக்கியமானவைகள்.
மக்களுக்கு பெரிய ஆபத்துகள் வரும்பொழுதெல்லாம்அவர்களுக்குள் ஒருவனாகதங்களுடைய உண்மை அடையாளத்தை மறைத்து வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த அசகாய சூரர்கள் தாங்களாகவே வரிந்துகட்டிக்கொண்டு ஓடியோ, பறந்தோ, புரண்டோ வந்து மக்களை அந்த ஆபத்துகளிலிருந்து காப்பாற்றி சாவுவிமோசனம் தருவார்கள்.

இதில் ஆச்சரியம் இந்த அசகாயசூரர்களின் கதைகள் அனைத்திலும் மக்களுக்கு ஆபத்தை உண்டுபண்ணுபவர்கள் வேற்று உலகவாசிகளோ அல்லது கிறுக்குபிடித்த ஆராய்ச்சியாளர்களாகவோதான் இருப்பார்கள். இருக்கவேண்டும் என்பது ஹாலிவுட்டின் பத்தாம்விதி. காலம் காலமாக அசகாயசூரர்கள் விரும்பி பந்தாடுவதெல்லாம் கொழகொழ முகத்தைக்கொண்ட வேற்று உலகமனிதர்களைத்தான். ஒருவேளை வேற்று உலகத்தில் கொழகொழ மூஞ்சிக்காரர்கள் மனிதர்களை பந்தாடுவதுப் போல படமெடுத்து ரசித்துகொண்டிருக்கிறார்களோ என்னவோ!

மனித சமுகத்தில் சமரசம் குடிகொண்டிருப்பதுபோலவும், உலகில் இந்த நொடியில் பிறக்கும் குழந்தைகளுக்குகூட வயிறுமுட்ட உணவு கிடைக்கும் சூழ்நிலை இருப்பதுபோலவும், உலக அரசியல்வாதிகள் அனைவரும் சென் துறவிகளாகவும், சூஃபி துறவிகளாகவும் மனமாற்றம் அடைந்துவிட்டதுபோலவும், பெருமுதலாளிகள் தங்களுடைய லாபவேட்கையை துறந்து பாகாசுர கம்பெனிகளை பொதுநிறுவனங்களாக மாற்றிவிட்டதுபோலவும், நுகர்வுகலாச்சாரத்தை ஒழித்துகட்டி, பூமியின் உடலில் ஏறும் சூட்டைத் தணித்துவிட்டதுபோலவும் ஆக உலகமக்களுக்கு பிரச்சனை என்று வந்தால் அது கொழகொழ மூஞ்சிக்காரர்களாலும், பித்தம் தலைக்கேறிய பைத்தியக்கார ஆராய்ச்சியாளர்களால் மட்டுமேதான் இருக்கமுடியும் என்று நம்பவைப்பதில் இந்த அசகாயசூரர்களை மிஞ்ச இனிமேல்தான் பூமியின் ஏதோ ஒரு இண்டு இடுக்கிலிருந்து யாராவது பிறந்துவரவேண்டும்.



High Definition Graphics-ல் Half-Boil மூஞ்சிகாரர்களின் முகத்தில் குத்துவிடும் நேரம்போக, மீதி நேரம் முழுவதும் தன்னுடைய காதலியை இன்னொருவன் லவட்டிக்கொண்டுபோவதை, மனித உணர்ச்சிகள் மூலமாக கடந்துகொண்டிருப்பார்கள். அவர்களுடைய காதலிகளுக்கு, தாங்கள் காதலிக்கும் நபர் அசகாயசூரர் என்று தெரிந்திருந்தும், இன்னொருவனுடன் உடன்போக்கு மேற்கொள்வதை ஏனோ தடுக்கமுடிவதில்லை. இதுவும் ஹாலிவுட்டின் பத்தாம்விதியின் கீழ்வருவதுதான்.
Half-Boil மூஞ்சிக்காரர்கள், அரைவேக்காட்டு ஆராய்ச்சியாளர்கள் தவிர விலங்குகள் கூட மனிதர்களுக்கு பேராபத்தையும் பிரச்சனையையும் உண்டு பண்ணக்கூடியவைகள். மண்ணோடு மக்கி மறைந்துபோன டைனோசார் தொடங்கி யானை, புலி, சிங்கம், மனிதகுரங்கு, முதலை, பாம்பு என்று எந்த விலங்குகளுக்கெல்லாம் மனிதனை விழுங்ககூடிய வாயும் வயிறும் இருக்கிறதோ அவைகள் எல்லாம் மனிதவர்கத்தின் எதிரிகளே. மனிதர்களின் வளர்ச்சிக்கு இயற்க்கை வளங்கள் அவசியம் என்கிற பரப்புரையை உலகம் முழுவதும் பொதுபுத்தியில்திணித்துவிட்டு, காடுகளை அழிப்பதன் மூலம் விலங்குகளின் வசிப்பிடத்தையும், வாழிடத்தையும் அழித்தொழிக்கும் மனிதர்களுக்கு விலங்குகள் எதிரியா? வசிப்பிடத்தையும், வாழ்வாதாரத்தையும் ஓட்டு மொத்தமாக இழந்து நிற்கும் விலங்குகளுக்கு மனிதர்கள் எதிரியா?

இப்படியான கேள்விகளை எதிர்கொள்ள அசகாயசூரர்களுக்கு நேரம் கிடையாது. அவர்கள் பறந்தாகவேண்டும், புரண்டாகவேண்டும் காப்பாற்றுவதற்கு! மனிதர்களை விலங்குகளிடமிருந்து! அதர்மத்தை தர்மத்திடமிருந்து! பூமியும் அதன் வளங்களும் மனிதர்களுக்கும், மனிதர்களின் வளர்ச்சிக்கும் மட்டுமே என்று கட்டமைக்கப்படும் பொதுபுத்தியே அசகாயசூரர்களின் பொதுவான புத்தியாக இருக்கிறது. எளிய மனிதர்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகள் பற்றியோ, அவர்கள் மீது சுமத்தப்படும் கலாச்சார சீரழிவுகளைப் பற்றியோ, மனித வாழ்க்கையை இயந்திரத்தனமாக்கும் உலகமய வாழ்வியல் சிக்கல்கள் பற்றியோ இந்த அசகாயசூரர்கள் மறந்தும் பெருமூச்சுக் கூடவிட்டுவிடமாட்டார்கள்.

கண்ணை குறுடாக்கும் கரிய இருட்டில், உயரமான கட்டிடங்களின் துருத்திக்கொண்டிருக்கும் பகுதிகளில் குத்துக்கால் வைத்து உட்கார்ந்துகொண்டு உலகத்தை கண்காணித்துக்கொண்டிருக்கும் அசகாயசூரர்களின் கண்களில் சாதாரண மனிதர்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகளும், விலங்குகள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகளும் தெரிந்தால் நன்றாகத்தான் இருக்கும்!


Comments

Popular posts from this blog

கண்ணுறக்க நேர கதை சொல்லியின் கதை.

மந்திரம், மந்திரவாதி.....புத்தகத்தின் வெள்ளோட்ட சிறு துளி....

களப்பிரர் என்னும் கலி அரசர்