வாகனத்தில் ஏறும் டைனோசார்கள்

சமூக சீரழிவுகளுக்கான முக்கியமான காரணிகளுள் ஒன்றாக கருதப்படுவது குடி. குடி போதை பல வரம்பு மீறிய செய்களுக்கு தூண்டுகோளாக இருந்துவருகிறது. இந்தியாவில் உலகமயமாக்கலுக்கு பிறகு, நுகர்ப் பொருட்களில் குடி முதல் ஐந்து இடங்களில் நிச்சய இடம் உண்டு. 'என்னது குடிகாரனா?' என்பது போய் 'என்னது குடிக்கமாட்டானா?' என்று அதிரும்படியாக குடி தமிழ் சமூகத்தின் ஈசானி மூலையைக் கூட விட்டுவைக்காமல் எங்கும் பொங்கி நுரைக்கிறது. முன்பு கல்யாணத்திலும், இழவு வீட்டிலும் ஒலிந்து மறைந்துக்கொண்டிருந்த குடி, இந்த இரு பத்தாண்டுகளில் 'எல்லாத்துக்கும் ஊத்திக்கோ' என்றாகிவிட்டது.


' ஊத்திக்' கொள்வதற்காகவே புதிது புதிதாக சமுதாய தனி மனித நிகழ்வுகளை தினமும் கண்ட்டைகிறார்கள். 'பியரில்' தொடங்குபவர்கள் 'ஹாட்டில்' ஆட்ட நாயகர்களாகும் காட்சிகள் இன்றைய பார்களின் தினசரி சமாச்சாரம். இரண்டு 'புல்' அடித்தாலும் 'ஹாப் பாயில்' போடாமல் 'கன்'-னாக வீடு போய் சேர்பவனே இன்றைய சமுதாயத்தின் கள மன்னிக்கவும் போதைப் போராளி. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சூரிய வணக்கத்துடன் புதிய நாளைத் தொடங்கிய தமிழன் சமுதாய பரிணாமத்தில் வளர்ச்சியடைந்து இன்றைக்கு 'ஹேங்வோ'-வருடன் புதிய நாளை தொடங்குகிறான்.

 'பூஸிங்' என்பது இன்றைய பெரும்பாலான தமிழர்களின் சமுதாய கடமைகளில் ஒன்று. கொலைத் தொடங்கி 'ரேப்பு' முடிய பல சமுதாய பயங்கரவாதத்திற்கு குடி போதையே துணிச்சல் ஊக்கி. அமைதியாக இருந்தாலே குரங்காட்டம் காட்டும் மனித மனம், போதையையும் ஏற்றிக்கொண்டால் நவீன டைனோசார்தான். அந்த டைனோசார் வாகனமும் ஏறிவிட்டால் சாலைகளில் அதகளம்தான். 'என்ன சாப்பிட்டாச்சா' என்கிற நல விசாரிப்பு வார்த்தையைப்போல் 'கற்பழிப்பு' வார்த்தையும் சர்வ சாதாரணமாக ஆகிவிட்டது. கொலையும், கொள்ளையும் இல்லாவிட்டால் இன்றைய பல தினசரிகள் அழிந்தவிரும் இனங்களின் பட்டியலில் சேர்ந்துவிடும்.

மது உண்மையில் சமுதாயத்தின் சாபக்கேடா என்றால் ஆச்சரியப்படும் வகையில் இல்லையென்பதுதான் பதிலாக இருக்கும். உலக நாகரீகங்கள் அனைத்திலுமே மதுவுக்கு தனி இடம் உண்டு. மனிதன் வேட்டையாடியாக காடுகளில் அலைந்துகொண்டிருந்த போதே அவனுக்கு மதுவின் அவசியமும், தேவையும் புரிந்துவிட்டது. மனிதன் மதுவை முதலில் தொட்டதற்கான காரணம் போதை என்ற ஒன்றிர்கு மட்டுமே என்பது முழுவதும் தவறான கருத்தாகவே இருக்கமுடியும். இந்த நாகரீகங்களின் திணை சார்ந்த மது தயாரிப்பு என்பது மதுவிற்கு போதையையும் தாண்டி வேறு நோக்கம் இருப்பதை உணர்த்துகிறது. மது முதன்முதலில் மருந்தாகத்தான் மனிதர்களுக்கு அறிமுகமாகியிருக்க வேண்டும். வேட்டையாடி நாகரீகத்தின் போது தன் இனக் குழுவிற்கான உணவு வேண்டி நாளெல்லாம் காடுகளிலும், மலைகளிலும், சமவெளிகளிலும் அலைந்து திரிந்த மனிதர்கள், அன்றைய நாளின் முடிவில் உடல் வலியை, சோர்வை, போக்கிக்கொள்ளவும், அடுத்த நாளிற்கு தேவையான உடல் வலிவை மீட்டெடுபதற்கும், தன்னிலை மறந்த உறகத்திற்கும் கண்டடைந்த மருந்தே மதுவாக இருந்திருக்கவேண்டும்.

இன குழு வாழ்விலிருந்து விவசாயம் சார்ந்த சமூக வாழ்விற்கு வளர்ச்சியடைந்த மனித நாகரீகம் தன்னுடன் மதுவிற்கும் வளர்ச்சியைக் கொடுத்தது. ஏகபோகத்தையும், முதலாளித்துவத்தையும் மனித சமூகத்திற்கு அறிமுகப்படுத்திய விவசாய வளர்ச்சியே, மருந்தாக பழகப்பட்டு வந்த மதுவை போதையாக மாற்றி அறிமுகப்படுத்தியது. கடின உழைப்பிற்கு சிறு மருந்தாக அதுவரை இருந்துவந்த மது, உடல் உழைப்பை மறுத்த, மறந்த கும்பலின் மன உல்லாசத்திற்கு போதை ஏற்படுத்தும் வஸ்துவாக மாறிப்போனது.

நான்காயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் நாகரீகத்தின் மது தயாரிப்பு உடலுக்கு நன்மை பயக்கும் கனிகளிலும், பனை மரத்திலிருந்தும், தானியங்களிலுமிருந்தே மேற்கொள்ளப்பட்டது. மலையும், மலை சார்ந்த நிலமும் கொண்ட குறிஞ்சித் திணையில் மது இப்படித்தான் தயாரிக்கப்பட்டது. பதமான மூங்கிலை தேடிப்பிடித்து, வெட்டியெடுத்து, கைக்கு வசதியான அளவில் அதை செதுக்கிக்கொண்டு, மேல் பகுதியில் இருக்கும் கண்ணத்தை உடைத்து அந்த மூங்கிலுக்குள், முக்கனிகளான மா, பலா, வாழை மூன்றையும் மூங்கில் கொள்ளுமளவு திணித்து, முக்கனிகலும் நொதித்தல் பொருட்டு மலைத் தேனையும் அதற்குள் ஊற்றி, வாழையின் இலைகொண்டு அந்த மூங்கிலை மூடி, ஈரப்பதம் அதிகம் இல்லாத மலைப் பகுதியில் குழிபறித்து புதைத்து விடுவார்கள். குறிப்பிட்ட நாட்கள் கழித்து அந்த மூங்கிலைத் தோண்டியெடுத்து மூடிய வாழையிலையை பிரித்தால் மலையே மணக்கும் முக்கனி மது தயார்.

மருத நிலத்திலும், நெய்தலிலும் வேறு வகையான மது வகைகள் பழக்கத்திலிருந்தன. ஒன்று அரிசியிலிருந்து தயாரிக்கப்பட்டது. மற்றது பனை மரத்திலிருந்து பெறப்பட்ட இயற்கை கள். மது மருந்தாக பாவிக்கப்பட்டதின் விளைவே சங்க இலக்கியங்கள், பெண்களும் கூட மதுவை பயன்படுத்தியதைப் பற்றி கூறிச் செல்கின்றன. அப்படியானால் தமிழரின் நாகரீகத்தில் குடி போதையின் சீரழிவுகளே இல்லையா என்றால் இருந்தது. ஒடுக்கப்பட்டவர்களின் உழைப்பை சுரண்டிய கணவான்களும், உழைக்க மறத்த சோம்பேறிகளுமே போதையினால் ஏற்படும் சீரழிவுகளை தமிழ்ரின் நாகரீகத்தில் முன்னெடுத்தவர்கள்.

இவர்கள் போதை மிகுதியால் செய்யும் சலம்பல்களையே இழிச்செயல் என்றுத் தமிழ் நாகரீகம் வரையறுக்கிறது. இத்தகைய இழிச்செயல்களில் ஒன்றை பத்துப்பாட்டில் ஒன்றான மதுரை காஞ்சி பதிவு செய்திருக்கிறது. தமிழர் நாகரீகத்தோடு வணிகத் தொடர்பு கொண்டிருந்த எகிப்திய, சுமேரிய, கிரேக்க, ரோமானிய, சீன நாகரீகங்களிலும் அவர்களின் திணை சார்ந்த இயற்க்கையிலிருந்து பெறப்பட்ட சிறு மருந்தாகத்தான் மது கையாளப்பட்டிருக்கிறது. கோதுமையிலிருந்தும், திராட்சையிலிருந்துமே எகிப்திய, கிரேக்க, சுமேரியர்கள் மது வகைகளை தயாரித்துக்கொண்டார்கள். சீனர்கள் அரிசியிலுருந்தும், நெல்லிலிருந்தும் தங்களுக்கான மதுவை தயாரித்துக்கொண்டார்கள்.

கிரேக்க, ரோமானியர்களின் திராட்சை ரசமான 'வைன்' இரண்டாயிரம் ஆண்டுகளாகவே தமிழர் நாகரீகத்தில் புழங்கப்பட்டதுதான். இப்படி திணை சார்ந்த மது வகைகள் உடலுக்கு அதிக அளவில் இல்லையென்றாலும் நன்மை செய்ய கூடியதாக பழக்கத்திலிருந்தது. மேற்கத்தியர்கள் அறிமுகப் படுத்திய தொழில் புரட்சியின் பக்க விளைவாக மதுவினால் ஏற்படும் சீர்கேடுகள் மனித சமூகத்தில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தின. தொழில் புரட்சி வளர்த்தெடுத்த பாட்டாளி வர்கத்திற்கு, அவர்களின் குடும்ப நலனிற்கு பெரும் சவாலாக போதை உருவெடுத்தது.

மேற்குலக நாடுகளைவிட மூன்றாம் உலக நாடுகளில் மது போதையின் வளர்ச்சி கட்டுக்கடங்காமல் கரை புரண்டு ஓடுகிறது. தொழிற் புரட்சியின் காரணமாக மது, கல்லச் சாராயம் என்கிற பங்காளியையும் புதிதாக சேர்த்துக்கொண்டுவிட்டது. இன்றைக்கு மூன்றாம் உலக நாடுகளில் மதுவை ஒழித்தாலும் கல்லச் சாராயத்தை ஒழிக்க முடியாது என்கிற நிலை. மருந்து போன்று புழங்க்கப்பட்ட வந்த மது இன்று குடிநோயாளிகளை உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது. முழுமையான மது ஒழிப்பு சட்டம், மதுவற்ற சமுதாயத்தை உருவாக்கும் சட்டங்கள், கானல் நீரில் சுறா மீன் வேட்டைக்கு சமம். தார்மீக ஒழுக்கமும், மதுவை அணுகுவது குறித்த விழிப்புணர்வுமே போதையினால் உண்டாகும் சீர்கேடுகளை ஒழிப்பதற்கு வகைசெய்யும்.



Comments

Popular posts from this blog

கண்ணுறக்க நேர கதை சொல்லியின் கதை.

மந்திரம், மந்திரவாதி.....புத்தகத்தின் வெள்ளோட்ட சிறு துளி....

களப்பிரர் என்னும் கலி அரசர்