அரசுகளின் நித்திரை நிலம்


நைல் நதியின் இடப்பக்க கரையில் பரந்து விரிந்த பாலைவனத்தில் குட்டி மலைமுகடுகளாக எழுந்து நிற்கும் பிரமிடுகள் (Pyramid) இன்றுவரை காண்பவரையும் அவைகளைப் பற்றி கேட்பவர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தக்கூடியவைகளாக நிலைத்து நின்றபடி இருக்கின்றன. பிரமிடுகளை சுற்றி ஏகப்பட்ட அமானுஷ்ய (uncanny) சங்கதிகளுக்கு குறைச்சல் கிடையாது, பிரமிடுகளின் உள்ளேயும்தான். மனித முயற்சிகளுக்கு அப்பாற்பட்டது, வேற்றுகிரக வாசிகளின் கைவண்ணம், வானில் தோன்றும் நட்சத்திர கூட்டங்களின் பிரதிபலிப்பு இப்படி பிரமிடுகளின் கட்டுமானங்களைப் பற்றி பல சமாச்சாரங்கள் உண்டு. இவைகளில் எது உண்மையோ இல்லையோ எகிப்தியர்கள் தாங்கள் கடவுளாக வழிபட்ட, வழிபட நிர்பந்திக்கப்பட்ட பாரோக்கள் (அரசர்கள்) ரகசியமாக மேற்கொள்ளும் ஒரு பயணத்துக்கான புனித இடமாக பிரமிடுகளை கண்டார்கள். பொதுபார்வையில் பிரமிடுகள் வெளி உலகத்துக்கு மிக பிரம்மாண்டமான கல்லறைகளாக தோன்ற உண்மையில் பிரமிடுகள் கல்லறைகள் அல்ல. எகிப்தியர்களுக்கு இறப்பிற்கு பிறகான மற்றொரு வாழ்வில் நம்பிக்கை உண்டு. ஏதும் அற்ற அண்ணாடம் காய்ச்சிகளுக்கே இதில் நம்பிக்கை உண்டு என்றால் பேரரசுகளை கட்டி எழுப்பி, பல சூழ்ச்சிகள், வெறிகள், கொலைகளுக்கு மத்தியில் ஆட்சி செய்த பாரோக்களைப் பற்றி கேட்க வேண்டிய அவசியம் இல்லை.

நிபந்தனையற்ற அதிகாரம், எழுத்துகளில் வருணிக்க முடியாத அபரிமிதமான சொத்துகள், பார்வை பட்ட இடத்தில் தோன்றும் பணிவிடைக்கார்கள், இதற்கு மேல் இந்த உலகில் வேறுகிடையாது என்று கைவிரிக்கும் அளவு காமகளியாட்டங்கள், ரத்த போதை தலைக்கேரிய போர்கள் என்று வாழும் பாரோக்கள் இறந்து போனால், மற்றொரு வாழ்க்கைக்காக அவருடைய உடல் தயார் செய்யப்படும். உயிருடன் இருக்கும் அவருடைய பாதுகாப்பாளர்கள், பணிவிடைக்கார்கள், அவர் உபயோகித்த பொருட்கள் என்று எதையும் விட்டுவைக்கமாட்டார்கள் எல்லாம் பாரோவோடு பயணப்பட்டாக வேண்டும். அரசிகளுக்கும், கீப்புகளுக்கும் (concubine) இந்த மறுமை பயணத்தில் இடம் கிடையாது. ஒருவேளை மறுமை வாழ்வில் காமகளியாட்டங்கள் கிடையாதோ! இந்த தயாரிப்பு வேலை திருவிழாப் போல ஒரு மாத காலம் நடைபெறும். பாரோவினுடைய உடல் பக்குவமாக பதப்படுத்தப்படும். மறுமை உலகை அடைந்தவுடன் அவர் அதில் மீண்டும் புகுந்து தனது அடுத்த வாழ்வை ஒரு பாரோவாக தொடருவார். உயிருடன் இருக்கும் பாதுகாவலர்களும், பணிவிடைக்காரர்களும் கொலை செய்யப்பட்டு அவர்களின் உடல்களும் பதப்படுத்தப்படும் மறுமை வாழ்வில் பாரோவிற்கு ஏவல் செய்ய. மறுமை வாழ்வில் ஆட்கள் பற்றாக்குறை இருக்கும்போல!

பாரோவும் அவருடைய ஆட்களும் மறுமை வாழ்விற்கு பயணம் மேற்கொள்ளும் இடம்தான் பிரமிடுகள். மரண தேவன் இஸிஸ் (Isis) பிரமிடில் அவர்களை வரவேற்று, மறுமை வாழ்விற்கு அவர்களை கப்பலில் அழைத்து செல்வார். தன்னுடைய மறுமை பயணத்திற்கு உதவும் பிரம்மிடை ஒவ்வொரு பாரோவும் தான் உயிருடன் இருக்கும் காலத்திலேயே கட்டும் முயற்சிகளை மேற்கொள்வார். தனக்கான பிரமிட் கட்டவேண்டிய இடத்தை தேர்வு செய்வது தொடங்கி அதன் நீல அகலம் முதற்கொண்டு அனைத்தையும் பாரோக்களே தங்களுடைய நேரடி கண்காணிப்பில் வைத்திருப்பார்கள். அந்த பிரமிடுக்கென்று மதகுரமார்கள் நியமிக்கப்படுவார்கள். பிரமிடுகளைச் சுற்றி சிறிய அளவிலான கோயில்களும் கட்டப்படும். அந்த கோயில்களில் அந்த பிரமிடுக்கு சொந்தமான பாரோ இறந்த உடன் அவரை கடவுளாக பாவித்து வழிபாடுகள் நடைபெறும். பெறும்பாலன பாரோக்கள் தாங்கள் உயிருடன் இருக்கும் காலத்திலேயே தங்களுக்கான பிரமிடுகள் கட்டி முடிக்கப்பட்டு தயாராக இருப்பதை கண்டிருக்கிறார்கள். தங்களுடைய மூதாதயர்களின் பிரமிடுகளையும் சிறப்பாக பராமரித்திருக்கிறார்கள். இதற்காகவே தனிப்பட்ட ஆளுநர்களை நியமித்திருக்கிறார்கள்.

இவ்வகையில் அகசிறந்த பிரமிடை கட்டிய பாரோ கூஃபு (Kufu). இவருடைய பிரமிட் கீஸா (Giza) என்று அழைக்கப்படுகிறது. உலக அதிசயங்களில் ஒன்றாகவும் இது மதிக்கப்படுகிறது. இரண்டாயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்த வரலாற்று தந்தை என்று சொல்லப்படும் இரடோடஸ் (Herodotus) இந்த பிரமிடைப் பார்த்து பேச்சற்று நின்றதும் உண்டு. இரடோடஸ் கீஸா பிரமிடை பார்த்த காலத்தில் அந்த பிரமிடின் வயது ஆயிரம் ஆண்டுகள். இந்த பிரமிடை குறித்த பல சுவாரசியமான தகவல்களை இரடோடஸ் தன்னுடைய Histories புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார். அதில் குறிப்பிடும் படியான ஒன்று கூஃபு இந்த பிரமிடை கட்டத்தொடங்கி நடுத்தெருவுக்கு வந்ததைப் பற்றியது. தன்னுடைய மகளை உள்ளுரில் விபச்சாரத்திற்கு அனுப்பி கீஸா பிரமிடை கட்டி முடித்ததாக தான் கேள்விபட்ட விசயத்தை இரடோடஸ் சொல்கிறார். குபேரன்கூட கந்து வட்டிக்கு கையெந்தும் செல்வ வளம் கொண்ட பாரோவே நடுத்தெருவுக்கு வந்துவிட்டார் என்றால் கீஸா பிரமிடின் கட்டுமான பிரம்மாண்டத்தை நீங்களே கற்பனை செய்துகொள்ளுங்கள்.

இப்படி மனித உழைப்பாலும் வளத்தாலும் கட்டப்படும் பிரமிடுகளின் உள்ளே தங்கப் புதையல் இல்லை இல்லை செயற்கையான தங்க சுரங்கமே இருக்கும். பாரோக்களின் பதப்படுத்தபட்ட உடல் வைக்கப்படும் Scarghpous தொடங்கி, பாரோவினுடைய பொருட்கள் வைக்கப்படும் அறை முழுவதும் தங்கம், தங்கம், தங்கம். சில பிரமிடுகளில் மன்னரின் உடல் கொண்ட Scarghpous வைக்கும் அறையின் கதவு ஒட்டுமொத்தமாக தங்கத்தால் செய்யப்பட்டிருக்கும். பிரமிடுகள் தோன்றிய கையோடு தோன்றியவர்கள் கல்லறை களவாடிகள். இறந்த பாரோவின் பதப்படுத்தபட்ட உடல் சகலவித மரியாதையுடன் பிரமிடுக்குள் வைத்து பிரமிடின் கதவு சீல் வைத்து பூட்டப்பட்ட அன்று இரவே கல்லறை களவாடிகள் அந்த பிரமிடை கழுகுபோல் வட்டமடிக்க தொடங்கிவிடுவார்கள். அதன் பிறகு வரும் இரவுகளில் விடிய விடிய தங்கத்திற்கான வேட்டைதான். இந்த தங்க வேட்டையில் பிரமிடுகளை காவல் காக்க வேண்டிய ஆளுநர்களுக்கும் பங்கு உண்டு. அதிகாரிகளின் துணையில்லாமல் எந்த காலத்தில் அரசாங்க சொத்துகள் திருடுபோயிருக்கிறது!



பாலைவனத்தில் ஓநாய்கள் போல மற்றவர்கள் கண்களுக்கு புலப்படாமல் சுற்றித்திரியும் களவாடிகள் ஊரடங்கிய பிறகு இரவு நேரங்களில் பிரமிடுகளுக்குள் நுழைவார்கள். இவர்கள் எப்படி பிரமிடுகளுக்குள் நுழைந்து வெளியேறுகிறார்கள் என்பது அந்த பிரமிடுகளை கட்டிய பொறியாளர்களுக்கே புரியாத புதிர். இந்த களவாடிகளை மனதில் வைத்தே பிரமிடுகளை கட்டும்போதே சில கண்ணிகளையும் பிரமிடுகளுக்குள் வைத்திருப்பார்கள். ஒரு டன் எடையுள்ள பாறைகள் கண்ணிகளாக வைக்கப்படும். பிரமிடுகளுக்குள் நுழையும் களவாடிகள் எக்குதப்பாக எங்காவது கைவைத்துவிட்டால், அழையா விருந்தாளியாக பாரோவுக்கு பின்னால் பரலோகம் போகவேண்டியதுதான். ஆனால் இந்த கண்ணிகள் அசைக்கப்படாமல் பிரமிடுகள் சூரையாடப்பட்டது பிரமிடு பொறியாளர்களை முழி பிதுங்க வைத்தது. இந்த வல்லவர்களுக்கு வல்லவர்களான களவாடிகள் பிரமிடுகளுக்குள் நடத்தும் அட்டகாசங்களுக்கு அளவே கிடையாது. தங்களுடைய கலவாடும் பட்டியலில் மம்மிக்களைகூட விட்டுவைக்கமாட்டார்கள். மம்மிக்கள் அணிந்திருக்கும் ஆடைகளில் தங்க இழைகள் இருக்கும். Scarghpous-யை திறக்கும் களவாடிகள் மம்மியை (Mummy) எரித்துவிட்டு சாம்பலில் மீறும் தங்கத்தை எடுத்துக்கொள்வார்கள். இப்படி ஏகப்பட்ட மம்மிக்கள் எரிந்துபோய்விட்டன.

தங்கம் என்கிறப் பெயரில் ஒரு குண்டு மணியைக்கூட விட்டுவைக்கமாட்டார்கள். போகிறப் போக்கில் மம்மிக்களை இழுத்து பாலைவனத்தில் போட்டு நெருப்பு முட்டி குளிர் காய்ந்த்துவிட்டு நடையைகட்டுவதும் உண்டு. இப்படி குளிர் காய்வதற்காக பிரமிடுகளுக்குள் இருந்து இழுத்துவரப்பட்டு, எரிக்காமல் அனாதையாக பாலைவனத்தில் விட்டு செல்லப்பட்ட மம்மிக்களைப் பற்றி அந்த பிரமிடுகளில் வேலை செய்தவர்களில் ஒருவருடைய பைப்பிரஸ் நூல் பதிவு செய்கிறது. கொள்ளையடித்த தங்கத்தை உள்ளூர் சந்தையில் தண்ணீராக இந்த கல்லறை களவாடிகள் வாரியிறைக்க உள்ளூர் பொருளாதாரம் ஆட்டம் கண்டது வேறு கதை. தங்களின் முன்னோர்களுக்கு ஏற்பட்ட இந்த அவமானங்களை கண்ட பிற்கால பாரோக்கள் பிரமிடுகள் கட்டும் சமாச்சாரத்தையே தள்ளிவைத்தார்கள். பிரமிடுகளுக்கு பதிலாக மறுமை வாழ்விற்கான பயணத்திற்கு அவர்கள் கண்டுபிடித்த வழி அரசர்களின் நித்திரை நிலம் (The Valley of the Kings).

முழுவதும் பாறைகளால் ஆன பரந்து விரிந்த மலைமுடுகளில் அமைக்கப்பட்டது The Valley of the Kings. அரசிகளுக்கு என்று தனியாக The Valley of the Queens என்கிற பகுதியும் உண்டு. பாறையை குடைந்து பிரமிடுகளுக்குள் இருக்கும் அறைகள் போன்ற அறைகளை உருவாக்கியிருக்கிறார்கள். முதன் முதலில் பாறையை குடைந்து அமைக்கப்படும் குடைவரை கட்டிடங்கள் எகிப்திய அரசர்களின் நித்திரை நிலத்தில்தான் தோன்றியிருக்க வேண்டும். எகிப்தியர்களுக்கு முன்பாக வேறு எந்த நாகரீகமும் பாறையை குடைந்து செய்யப்படும் குடைவரை கட்டிட கலையை கொண்டிருந்ததாக பதிவுகளோ, அகழ்வாராய்ச்சி ஆதாரங்களோ இல்லை. அரசர்களின் நித்திரை நிலம்தான் இன்று நம்மிடையே இருக்கும் பெரும்பாலான மம்மிக்களை காப்பாற்றி கொடுத்தது.

அரசர்களின் நித்திரை நிலத்தில் தோன்றிய குடைவரை கட்டிட கலை அரேபியாவில் ஆரம்பித்து ஆஃப்கானிஸ்தான் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்து சமண பௌத்தர்களோடு பயணித்து தமிழகத்தில் பரவி பல்லவர்களின் மாமல்லபுரத்தில் வந்து முடிகிறது.

Naveena Alexander
naveenaalexander@yahoo.com

Comments

Popular posts from this blog

கண்ணுறக்க நேர கதை சொல்லியின் கதை.

மந்திரம், மந்திரவாதி.....புத்தகத்தின் வெள்ளோட்ட சிறு துளி....

களப்பிரர் என்னும் கலி அரசர்