ஒரு குச்சி, ஒரு பறை, ஒரு குறை


இனக்குழு நடனம் ஒவ்வொரு மனித நாகரீகத்தின் மன இயல்புகளை வெளிப்படுத்தக் கூடிய கலை சாதனம். உலகின் பழமையான அனைத்து நாகரீகங்களுக்கும் அவற்றிர்கே உரிதான புராதன நடன கலை உண்டு. இந்த இனக்குழு நடனத்தின் முக்கிய அம்சம், வேட்டை மற்றும் இனக்குழு மோதல்களை சித்தரிப்பதாக இருக்கும். வேட்டையாடிய மிருகத்தின் தோலைக் கொண்டு இந்த நடனத்திற்கான வாத்தியங்கள் செய்யப்பட்டிருக்கும். இந்த வாத்தியங்கள் எழுப்பும் இசையோடு அமைந்த நடனம் காண்பவரை வசீகரிக்கக் கூடியது. இவ்வகை இனக்குழு நடனங்களில் பெயர் போனவர்கள் ஆப்பிரிக்க பழங்குடிகள். ஆப்பிரிக்க மக்களின் மரபனுவோடு கலந்த ஒன்று இந்த இனக்குழு நடனம். ஆப்பிரிக்க இனத்தவருக்கு நடனம் வெகு இயல்பாக வருவதற்கும் இதுவே காரணம்.

ஆப்பிரிக்க இனக்குழு நடனங்களும் அதற்கான இசையும் இன்று உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. உலகில் பத்தில் இரண்டு பேர் ஆப்பிரிக்க இனக்குழு நடனத்தையும் இசையும் அறிந்திருக்கிறார்கள். Money M என்கிற இசை குழுவின் புகழ் பெற்ற பாடல்கள் அனைத்துமே முழுக்க முழுக்க ஆப்பிரிக்க இனக்குழு இசையின் மேற்கத்திய பிரதிபலிப்பு. Money M குழுவின் பாடல்களை கேட்டவர்களுக்கு தெரியும் அந்த பாடல்களின் அடிநாதமாக ஊடுருவும் ஒருவகை துள்ளல் தாளத்தைப் பற்றி. “By the rivers of Babylon”, “Brown girl in the ring”, “Daddy cool”, “Sunny” (Sunny என்கிற பாடலை Darling Darling என்று இளையராஜ நகலெடுத்திருக்கிறார் என்பது உபரி தகவல்) போன்ற Money M பாடல்கள் முழுவதும் அந்த துள்ளலின் தொனியை நாம் கேட்டுக்கொண்டே இருக்கலாம். துள்ளல் தொனி இனக்குழு நடனத்தின் உயிர் நாடி. இந்த தொனிக்கு ஏற்பவே அவர்களுடைய நடனமும் அமைந்திருக்கும்.



இந்த துள்ளல் தாளத்தை ஆங்கிலத்தில் Rhythm என்கிறார்கள். இந்த வகை துள்ளல் தாளத்தை கொடுக்க கூடிய தோல் கருவிகளும் ஆப்பிரிக்க இனக்குழுக்களிடம் உண்டு. ஆப்பிரிக்க Drum வகை இசைக்கருவிகளும் புகழ்பெற்றவைகள். இவைகள் இசைக்கப்படும் போது கேட்பவரின் நாடி நரம்புகள் முறுக்கேறுகின்றன. இந்த முறுக்கேறலின் விளைவாக கேட்பவரின் தலையும் கால்களும் தானாகவே தாளத்திற்கு ஏற்றபடி நின்று நின்று அசைகின்றது. இதனாலேயே ஆப்பிரிக்க இனக்குழு நடனங்கள் புகழ்பெற்றவையாக இருக்கின்றன. மற்ற மனித நாகரீகங்களும் இனக்குழு நடனத்தை ஒரு அங்கமாக பெற்றிருந்தாலும் ஆப்பிரிக்க மக்களைப் போல் அதை ஒரு கொண்டாட்டமாக மாற்றியவர்கள் கிடையாது என்று கணிக்கப்படுகிறது.

இன்று புகழ்பெற்று பல்லாயிரக் கணக்கான மக்களை Brazil நோக்கி இழுக்கும் தென்னமரிக்க சம்பா (Samba) நடனம் கூட ஆப்பிரிக்க இனக்குழு நடன இசையின் ஒரு வகையே. மேற்கத்திய இசை தாளக்கட்டு ஒருவறை தூண்ட எடுத்துக்கொள்ளும் நேரத்தை விட Samba போன்ற நடனங்களும் அதனுடைய இசையும் கேட்பவரையும் பார்ப்பவரையும் நொடிப்பொழுதில் தூண்டிவிடும். ஒருவித கொண்டாட்ட மனநிலை ஆப்பிரிக்க இனக்குழு நடன இசையில் இருப்பதே இதற்கு காரணம். இத்தகைய இனக்குழு நடனமும் இசையும் தமிழர்களிடமும் உண்டு. ஆப்பிரிக்க நடன இசைக்கு இணையான அந்த இசை மற்ற இன மக்களிடம் இருந்திருந்தால் இன்று அது உலக புகழ்பெற்று இருக்கும். அந்த இசையின் சாபக்கேடு அது தன்னை மறந்த தமிழர்களிடம் வந்து பிறந்து தொலைத்துவிட்டது.

தப்பாட்டம். பறை என்கிற இசை கருவியை கொண்டு ஆடப்படும் இந்த தப்பாட்டம் தமிழர்களின் இனக்குழு வாழ்வின் எச்சம். ஆப்பிரிக்க மக்கள் தங்களின் இனக்குழு வாழ்வின் எச்சமான இசையையும் நடனத்தையும் காப்பாற்றிவிட தமிழனோ தன்னுடைய தப்பாட்டத்தை தவறவிட்டுவிட்டான். கேட்பவரை கொண்டாட்ட நிலையின் உச்சத்திற்கு கொண்டுபோக்கூடியது என்று உலக புகழ்பெற்றிருக்க வேண்டிய தப்பாட்ட இசை நடனம் இன்று விளிம்பு நிலையில் இருக்கிறது. அழிவின் எல்லையில் இருக்கும் விலங்கினங்களை காப்பாற்ற அமைப்புகள் இருப்பதுபோல் அழிவின் எல்லையில் இருக்கும் தமிழர்களின் சிறப்புகளையும், கலைகளையும் காப்பாற்ற ஒரு அமைப்பு இருந்தால் புண்ணியமாகப்போகும்.

தப்பாட்ட இசை நடனம் காண்பவரை கவரக் கூடியது. கவரக் கூடியது என்பதைவிட ஆட்டி வைக்கக்கூடியது எனலாம். பறையை இசைத்துக்கொண்டு அந்த இசையின் தாளகதிக்கு ஏற்ப கால்களை முன்னும் பின்னும் அசைத்து, நகர்ந்து, உட்கார்ந்து எழுந்து நடனமாடும் தப்பாட்டத்தை பார்க்கும்பொழுது நாமும் கூட சேர்ந்து ஆடலாமா என்கிற துருதுருப்பு நம்முள் தோன்ற ஆரம்பித்துவிடும். இனக்கழு நடனங்களிலேயே ஆப்பிரிக்க இனக்குழு நடனத்திற்கும் நம்முடைய தப்பாட்டத்திற்கும் மட்டுமே காண்பவரின் மனதிற்குள் இப்படி துருதுருப்பை ஏற்படுத்தக்கூடிய பண்பு உண்டு.

தப்பாட்டத்திலும் ஒருவித துள்ளல் இசை அடிநாதமாக இருக்கும். இந்த துள்ளல் இசையே கேட்பவரை கொண்டாட்ட நிலைக்கு கொண்டு செல்கிறது. தப்பாட்டத்திலிருந்து பிறக்கும் துள்ளலே, தப்பாட்டத்தை ஆப்பிரிக்க இனக்குழு நடன இசையோடு நேர்கோட்டில் பயணிக்க வைக்கிறது. தமிழர்களின் கலைகளில் ஆரிய மாயையிலிருந்து தப்பி பிழைத்த கலை தப்பாட்ட கலை மட்டுமே. ஆரிய கலப்பற்ற 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்களின் கலைகளில் பிரதிபலித்த கொண்டாட்ட மனநிலையின் மிகச் சிறந்த உதாரணம் தப்பாட்டம்.

ஆப்பிரிக்கர்களும், தப்பாட்டம் ஆடும் நம்மவர்களும் இனக்குழு நடனங்களில் தோல் கருவியின் தாள(Rhythm) இசைக்கு ஏற்ப கால்களை அசைத்து, குதித்து ஆடுவதில் சிறந்தவர்கள். ஆனால் நம்மவர்களின் சிறப்பான தப்பாட்ட கலையை வளர்க்க ஆளைத்தான் காணவில்லை. தேவதாசிகளின் நடனமான பரத நாட்டியத்தை மேடைபோட்டு நாகரீகத்தின் சின்னமாக ரசிப்பவர்கள் நம்முடைய உலக சிறப்பு மிக்க இனக்குழு நடனத்தை கண்டுகொள்ள மறுக்கிறார்கள். உலக அரங்கில் நம்முடைய பழமையின் சிறப்பை எடுத்த செல்ல வேண்டிய தப்பாட்டம் இன்று போனால் போகிறது என்று திருவிழாக்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடத்தப்படுகிறது. தப்பாட்டத்தின் அருமை தெரிந்த ஒரு சில திருவிழா ஏற்பாட்டாளர்களே இதிலும் புண்ணியம் கட்டிக்கொள்கிறார்கள். இவர்களும் இல்லை என்றால் தப்பாட்டம் இன்று தப்பு ஆட்டம்தான்.

ஆப்பிரிக்க இனக்குழு வாழ்வையும் நாகரீகத்தையும் வெளிச்சம் போட்டு காட்டிய Discovery, National Geographic, History  போன்ற Channel-களுக்கு கூட எனோ தமிழனின் சிறப்புகள் கண்ணில் படுவதில்லை. இந்தியா என்றாலே வடமாநிலங்களை பிடித்துக்கொண்டு அழுவதுதான் இந்த Channel-களின் பிழைப்பாகிவிட்டது. மான்களையும், மயில்களையும் ஆட அனுமதிக்கும் நம்முடைய Channel-களோ நம்முடைய இனக்குழு நடனமான தப்பாட்டத்தைப் பற்றி மூச்சு கூட விடுவதில்லை.

தப்பாட்ட இசையை உலக அரங்கிற்கு எடுத்து செல்ல வேண்டிய நம்முடைய இசை கலைஞர்கள் அனைவரும், மேற்கத்திய இசையை நகலெடுத்து கல்லறைகளில் ஓய்வெடுத்துகொண்டிருக்கும் Boch, Vivaldi, Mozart, Beethoven, Hyden போன்றவர்களை மூச்சுத் திணற வைக்கிறார்கள். ஆப்பிரிக்க இனத்தின் இசையை உலகமெங்கும் பரப்பிய Bob Marley போன்ற கட்டுபாடுகளை கலைத்தெரிந்து பாரம்பரிய சிறப்பை நோக்கி நடந்த இசை கலைஞர்களை தமிழகத்தில் பரிசு அறிவித்து தேடினாலும் கிடைக்கமாட்டார்கள்.

மனித நாகரீகத்தின் எல்லா சிறப்புகளையும் கொண்ட தமிழினம் போல் இந்த உலகில் வேறு இனம் கிடையாது. அதே நேரத்தில் தான் கொண்ட எல்லா சிறப்புகளையும் அனாயசமாக தொலைத்துகட்டும் தமிழினம் போல் இந்த உலகில் வேறு இனம் கிடையாது.

Naveena Alexander

Comments

Popular posts from this blog

கண்ணுறக்க நேர கதை சொல்லியின் கதை.

மந்திரம், மந்திரவாதி.....புத்தகத்தின் வெள்ளோட்ட சிறு துளி....

களப்பிரர் என்னும் கலி அரசர்