கண்ணுறக்க நேர கதை சொல்லியின் கதை.

‘என்ன கொடும சார் இது. எல்லா வழியும் ரோமுக்கு போகுது’. 2100 வருசங்களுக்கு முன்னால நீங்க மத்திய தரை கடலை சேர்ந்த ஏதாவது ஒரு நாட்டுலயோ இல்ல மேற்கு ஐரோப்பாவுல ஏதாவது ஒரு சந்துலயோ, போய் சேர வேண்டிய இடத்தோட விலாசத்த தொலச்சுட்டு வழி தேடிக்கிட்டிருந்தீங்கன்னா இப்படித்தான் பொலம்பி இருப்பீங்க. கிரேக்க நாகரீகத்த கபளீகரம் செஞ்ச ரோம பேரரசோட மெய்கீர்த்தி அப்படி.பேரரசோட வல்லரசுன்னு சொன்னா வரலாறு கோச்சுக்காது.

Age of Expansion, Age of Exploration, Age of Empires, Age of Consolidation, Age of......கிழிஞ்சது இப்படியே போனா படிக்கிற உங்களுக்கு Age of கடுப்பு வந்துடும். இதெல்லாம் வேற ஒன்னுமில்லீங்க ரோம பேரரசர்கள் அவங்களோட நாடு புடிக்கிற ஆசைக்கு வச்சுகிட்ட punch subtitles. கட்டுக்கடங்காத ராணுவத்த கட்டுக்கடங்காம எந்த நாட்டுமேல கட்டவிழ்த்து விடலாம்னு யோசிக்கறது ரோமபேரரசர்களோட பதினாறு மணி நேர வேலைதிட்டம். உடனே ரோம பேரரசர்களோட வேலயே இதானோன்னு நினைச்சுட வேண்டாம்.ரோம பேரரசர்களோட கவனம், war-க்கு எந்த நாடும் சிக்காதபொழுது சிறிது கலைக்கும் ஈயப்பட்டது.

கலைன்னா போர் கலை தொடங்கி கட்டிட கலை, சிற்பக் கலை, நாடக கலை, இலக்கியம் இப்படி. காம கலையும் உண்டு. அதுயில்லாமயா பின்ன. காம கலைய கழுத்தறுக்குற காதல் கலையாவும் மாத்திகிட்ட ஒன்னு ரெண்டு பேரரசர்களும் கூட இதுல உண்டு. வேற யாரு மார்கசும், அகஸ்டசும்தான். இவங்க கிளியோபாட்ராவ காதலிச்சது ரோம பேரரசுக்கு போற எல்லா வழிகள்யையும் சந்தி சிரிச்ச கதை. அப்ப இவங்க காதல் கதை முக்கோண காதல் கதையான்னு ரொமாண்டிக்கா யோசிக்க வேண்டாம். முக்கோணமும் இல்ல அரக்கோணமும் இல்ல. இவன முதல்ல லவ் பண்ணி இவன்கூட புள்ளய பெத்துகிட்டு, இவன் இருக்கும்போதே அவன்கூட எதுக்கும் இருக்கட்டுமேன்னு ஒரு லிங்க் வச்சுகிட்டு, இவன் போய்சேர்ந்ததும், அவன இவனோட புள்ளைக்கு இனிஷியலு.........நிறுத்து நிறுத்து இது ஏதோ கல்ல காதல் மாத.....ரின்னு இழுத்தீங்கன்னா வரலாறு உங்க கண்ண குத்திபுடும்.

விளையாட்டு போதும். அலெக்ஸாண்டரோட படையெடுப்புக்கு பிறகு கிறிஸ்துவுக்கு முன் இரண்டாம் நூற்றாண்டு வாக்குல கிரேக்க கலாச்சாரத்த அப்படியே உள்வாங்கி உருவெடுத்த ரோம பேரரசு அடுத்த ஆயிரம் நூற்றாண்டுகளுக்கு மத்திய தரை கடல் மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளுடைய அரசியல், கலை மற்றும் கலாச்சார வளர்ச்சிகளுக்கு பிறப்பிடமா இருந்தது. ரோம பேரரசோட வணிகம் மத்திய தரை கடல் வழியா, அரேபிய பாலைவனங்களை கடந்து, இந்திய பெருங்கடலை தொட்டு தூர கிழுக்கு நாடுகள் வரைக்கும் பரவி கிடந்தது.ரோம பேரரசு மிக முக்கியமான வணிக மற்றும் கலாச்சார தொடர்புகள தமிழகத்தோட கொண்டிருந்தது.

ரோமானிய-தமிழக வணிகத் தொடர்பு என்பது ஏதோ உப்பு மிளகாய் வியபாரத்திற்கான மேம்போக்கான தொடர்பு போன்றது கிடையாது. இன்றைக்கு எப்படி அமெரிக்க-அரபு எண்ணெய் வணிகத் தொடர்ப்பு உலக நாடுகளின் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்துகிறதோ அதே போலதான் 2000 வருடங்களுக்கு முன்பு ரோமானிய-தமிழக வணிகத் தொடர்பு மேற்கு ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தியது.ரோமானிய பேரரசின் ஒட்டுமொத்த உள்நாட்டு சந்தையையும் கட்டுப்படுத்தியது தமிழகத்தை சேர்ந்த வணிக குழுவான திசையாயிரத்து எண்ணூற்றுவர்.

தமிழர்களுடைய இன்றைய நிலையில் இது நம்ப முடியாததாக இருந்தாலும் இதுதான் வரலாறு பதிவு செய்துவைத்திருக்கும் உண்மை. சிடிராபோ, பிளினி மற்றும் தாலமி போன்ற ரோமானிய வரலாற்று ஆசிரியர்கள், எப்படி ரோமானிய பேரரசின் அரச கருவூலம் தமிழகத்திலிருந்து ஏற்றுமதியான ஆடம்பர பொருட்களுக்காக கரைக்கப்பட்டது என்பதை புலம்பல்களாக பதிவு செய்துவைத்திருக்கிறார்கள். புலம்பினாலும் அவர்கள் வரலாற்றின் முக்கியதுவம் தெரிந்தவர்கள். அடுத்த தலைமுறைக்காக ஆவணப்படுத்தியருக்கிறார்கள். நாம் எல்லா வரலாற்று ஆவணங்களையும் துலைத்து தலைமுழுகிவிட்டு, பாண்டிச்சேரி அரிக்கமேடு பக்கம் மண்ணை நொண்டி ரோமானிய சாராய குடுவைகளை எடுத்துவைத்துகொண்டு, ‘ஒரு வேல இங்க ரோமானியர்கள் சாராயம் காய்ச்சியிருப்பான்களோ’-ன்னு தாவாங்கட்டையை சொறிந்துகொண்டிருக்கிறோம்.

ரோமானிய பேரரசின் அரச கருவூலத்திலிருந்து தங்கம் தண்ணீராக தமிழகத்திற்கு ஓடியாதாக வரலாறு சொல்கிறது.இப்படி தங்கத்தை தண்ணீராக கரைக்க கூடிய அளவிற்கு உச்ச நிலையிலிருந்து எப்படி படிபடியாக ரோமானிய பேரரசு வீழ்ந்தது என்பதுபல நூற்றாண்டுகளை கடந்து செல்லும் மிக விரிவான வரலாறு. இந்த பரந்துபட்ட வரலாற்றை ஒன்றிணைத்து, அது மேற்கத்திய நாடுகளில் ஏற்படுத்திய வாழ்வியல் மற்றும் கலாச்சார பாதிப்புகளை அலசி ஆராய்ந்து புத்தகமாக எழுதுவதென்பது தொடர்ச்சியான கடும் உழைப்பையும், பிரம்மாண்டமான வாசிப்பையும் கோரி நிற்க கூடிய வேலை. இப்படியான கடும் உழைப்பையும், பிரம்மாண்டமான வாசிப்பையும் சாத்தியபடுத்தி உருவான புத்தகம் The History of the  Decline and Fall of the Roman Empire. ஒன்றிணைந்த ஆராய்ச்சி குழுவால் மட்டுமே சாத்தியப்படக்கூடிய இந்த வேலையை தன்னந் தனி ஆளாக நின்று முடிப்பது என்பதை கேட்பதே மலைப்பு தட்டக் கூடிய விசயம். ஆனால் 18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இங்கிலாந்தை சேர்ந்த Edward Gibbon தனியாளாக ஆயிரம் நூற்றாண்டுகளை முழுங்கி நிற்கும் ரோமானிய பேரரசின் தொடர்ச்சியான தொகுக்கப்பட்ட வரலாற்றைThe History of the  Decline and Fall of the Roman Empire என்கிற புத்தகமாக எழுதினார்.

இந்த புத்தகத்தை எழுதி முடிக்க Edward Gibbon-னுக்கு 10 ஆண்டுகள் தேவைப்பட்டது. பத்து ஆண்டுகளில் மூன்று தவணைகளாக இந்து புத்தகத்தை எழுதியிருக்கிறார். இந்த புத்தகம் எழுதுவதற்காக அந்த பத்து ஆண்டுகளும் தொடர்ச்சியான வாசிப்புகளுக்கு பெரும் பகுதி நேரத்தை செலவு செய்திருக்கிறார். இந்த புத்தகத்தின் முதல் தொகுதி 1776, பிப்ரவரி மாதம் வெளிவந்தது. இறுதி தொகுதியான மூன்றாம் தொகுதி 1787-ஆம் வருடம் வெளிவந்தது. அதுவரை அடையாளம் இல்லாத மனிதனாக சுற்றி வந்த Edward Gibbon-னை இந்த புத்தகம் ஆங்கிலேய இலக்கிய ஆளுமைகளில் ஒருவராக அடையாளப்படுத்திவிட்டது.இத்தனைக்கும்Gibbon-னுக்கு முறையான பள்ளிப் படிப்போ கல்லூரி படிப்போ கிடையாது. சிறு வயதிலேயே புத்தகங்கள் பக்கம் இழுக்கபட்ட அவர் பெரும்பாலும் சுய முயற்சியிலேயே ஆங்கில செவ்வியல் இலக்கியங்களை தேடிப்பிடித்து படித்திருக்கறார்.

Gibbon எழுதிய இந்த புத்தகம்அவரது ஒரே படைப்பு, இறுதி படைப்பு ஆனால் ஆங்கிலேய இலக்கியத்தில் என்றென்றைக்குமான செவ்வியல் படைப்பு.இது வியாபாரத்திற்காக திடமிடபட்ட எழுதபட்ட புத்தகம் கிடையாது. நிறுத்தி நிதானமாக யோசித்து, படி படியாக மனதளவில் தயாராகி, ஆதார தரவுகளை சேகரித்து, எழுதிவிடலாம் என்கிற நம்பிக்கையை வளர்த்தெடுக்கவேGibbon-னுக்கு முழுதாக 12 வருடங்கள் ஆகியிருக்கிறது. புத்தகத்தை எழுதுவதற்கு மேலும் ஒரு 10 வருடங்கள். ஆக மொத்தம் 22 வருடங்கள். அவருடைய 57 ஆண்டுகால வாழ்வில் 22 வருடங்களை இந்த புத்தகம் எடுத்துகொண்டிருக்கிறது. புத்தகத்திற்காக கொடுக்கப்பட்ட உழைப்பின் விலை அதிகம்தான்.
அவர் 1758 மற்றும் 1763-ஆம் ஆண்டுகளின் இடைபட்ட காலத்தில் மிகவும் முக்கியமான ஒரு புத்தகத்தை வாங்கி சேகரித்திருக்கிறார். இருபது தொகுதிகளைக் கொண்ட அந்த புத்தகத்தின் பெயர் “Memories de l’ Academie des Inscriptions”. இதுவே அவர் எழுதிய புத்தகத்திற்கு பெரும் உதவியாக இருந்த புத்தகம்.

Gibbon தன்னுடைய புத்தகத்தை மூன்று பகுதிகளாக பிரித்துகொண்டு எழுத்தொடங்கியிருக்கிறார். முதல் பகுதி ரோம பேரரசின் உச்சகட்டத்தில் Trajan மற்றும்Antonines அரசர்களின் காலகட்டம். இது கி.பி. 6-ஆம் நூற்றாண்டு வரை. இரண்டாம் பகுதிJustinian ஆட்சியில் இருந்து தொடங்குகிறது. இது கி.பி. 9-ஆம் நூற்றாண்டு வரை. மூன்றாம் மற்றும் கடைசி பகுதி ரோம பேரரசின் இறுதி கட்டம். இந்த காலகட்டத்தில் இஸ்லாமிய அரசு உருவாகி வளர்ந்து, துருக்கியர்கள் Constantinople நகரத்தை பிடிக்கும் காலம் வரை.கி.பி. 14-ஆம் நூற்றாண்டு வரை.
அவர் இத்தாலிக்கு சுற்று பயணம் செய்த 1764 வருடத்தில் இந்த புத்தகத்திற்கான கரு உருவானதை தன்னுடைய Memoirs புத்தகத்தில் Gibbon- ‘அது 1764 வருட அக்டோபர் மாதம் 15 திகதி. நான் கேபிடோல் நகரின் இடிபாடுகளுக்கு இடையே ஏதோ யோசனையில் இருந்தபோது, வெகு தொலைவில் ஜூப்பிடர் கோயிலில் மாலை நேர வாழ்த்து பாடல்ஒலித்துக்கொண்டிருந்த அந்த தருணத்தில், இந்த நகரத்தின் சரிவையும், வீழ்ச்சியையும் எழுதினால் என்ன என்கிற எண்ணம் என் மனதில் முதல் முறையாக தோன்றியது’.

பின்னர் இந்த புத்தகத்தை வெளியிடுவதற்காக பதிப்பகத்தாரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த காலங்களில் இந்த புத்தகம் எழுதுவது குறித்த தன்னுடைய மனபோக்கை Gibbon இப்படி பதிவு செய்கிறார் – ‘இந்த புத்தகம் எழுதவேண்டும் என்கிற ஆசையிலிருந்து எழுதி விடக் கூடிய நம்பிக்கைக்கு வந்து சேர்ந்தேன். நம்பிக்கையிலிருந்து புத்தகத்தின் வடிவம் குறித்து  மனதளவில் வளர்ந்தேன். புத்தகத்தின் வடிவத்திலிருந்து அதை எப்படி செயல்படுத்துவது என்று யோசிக்கும் நிலைக்கு வந்தேன். இந்த வரலாற்று புத்தகத்தின் தன்மையும் விரிவும் பற்றிய போதுமான தெளிவு இன்னமும் எனக்கு ஏற்படவில்லை’.

முதல் தொகுதி வெளிவந்து மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த அளவிற்கான வரவேற்பை Gibbon-னும் பதிப்பகத்தாரும் நினைத்துகூட பார்க்கவில்லை. வந்த வேகத்தில் ஆயிரம் பிரதிகள் விற்று தீர்ந்து நான்கே மாதங்களில் இரண்டாம் பதிப்பும் வெளிவந்தது. ‘என்னுடைய புத்தகம் எல்லோருடைய மேசைகளிலும் இருக்கிறது. ஏறக்குறைய எல்லோருடைய கழிவரைகளிலும் கூட இருக்கிறது’ என்று Gibbon பின்னர் இதுபற்றி எழுதினார்.

கழிவரைகளிலும் கூட இருக்கிறது– இதுதான் Gibbon. தாட்சண்யமே இல்லாத வார்த்தைகளால் பகடி செய்வது Gibbon-னின் எழுத்துமுறை.எல்லாவற்றிலும் நாசுக்கை எதிர்பார்க்கும் இங்கிலாந்து வாசிகளை இத்தகைய தன்னுடைய எழுத்தால்Gibbon திணரடித்தார். இது சில அறிவாளிகளை உசுப்பிவிட Gibbon-னை வகையாக வசைபாட தொடங்கிவிட்டார்கள்.வசைபாட அவர்கள் பிடித்துகொண்டது முதல் தொகுதியின் 15 மற்றும் 16-ஆம் அதிகாரங்களை. இதில் Gibbon ரோம பேரரசில் கிருஸ்துவம் குறித்து தனக்கே உரிய முறையிலான சில கலக குரல் வெளிப்படும் விவாதங்களை முன்வைத்திருந்தார்.சீர்திருத்த கிருஸ்துவ (Protestant) ஆதிக்கம் நிறைந்த அன்றைய இங்கிலாந்தில் கத்தோலிக்க கிருஸ்தவம் என்கிற சொல்லே ஊர் பற்றிய எரிய போதுமானது. இளமையில் கத்தோலிக்கம் பக்கம் ஈர்க்கப்பட்ட Gibbon பின்னர் மீண்டும் சீர்திருத்த கிருஸ்துவத்துக்கே திரும்பியிருந்தார். இதுவும் சேர்ந்துகொள்ளசந்திக்கு சந்தி கிருஸ்துவத்தை இழிவுபடுத்திவிட்டதாக Gibbon கிழிக்கப்பட்டார். இது வறம்பு மீறி போக Gibbon, Vindication of Some Passages in the Fifteenth and Sixteenth Chapters என்கிற தலைப்பில் தன்னிலைவிளக்க புத்தகம் வெளியிடும் அளவுக்கு போய்விட்டது. இந்த புத்தகமும் பெறும் வரவேற்பை பெற்றது.

The History of the Decline and Fall of the Roman Empire புத்தகம் முழுக்க பரவியிருக்கும் பேரரசு நிலைப்பாட்டிற்கு எதிரான சாமர்த்தியமான மறைமுக விமர்சனங்களுக்கும், கலக குரல்களுக்கும் காரணம் இளமையிலிருந்தேGibbon ப்ரெஞ்சு இலக்கியங்களால் ஈர்க்கப்பட்டது என்று கருதப்படுகிறது.ப்ரெஞ்சு புரட்சிக்கு காரணமான எழுத்துகளுக்கு சொந்தகாரரான வால்டேரிடம் Gibbon-னுக்கு நெருங்கிய தொடர்பிருந்தது. ரூசோவின் எழுத்துகளும் Gibbon-னுக்கு பரிச்சயமானது. கருத்தியல் அடிபடையில் பேரரசுக்கு எதிரானவராக இருந்தாலும் சமகால அரசியலில் ஆங்கிலேய பேரரசுக்கு ஆதரவாகவே அவர் செயல்பட்டார். இங்கிலாந்திற்கு எதிரான அமெரிக்க காலனிய போரின் போது அவர் ஆங்கில பேரரசுக்கு சாதகமாகவே எழுதினார். இதனால் அரசியல் ஆதாயங்களும் வரும்படி உள்ள பதவிகளும் அவருக்கு கிடைத்திருக்கிறது.
தனிப்பட்ட வாழ்வில் பொருளாதார ஆதாயங்களுக்காக சந்தர்பவாதமாக நடந்துகொள்வது Gibbon போன்ற கலக குரல் எழுப்பும் படைப்பாளிக்களுக்கு வாழ்வியல் நியாயமாகபட்டாலும் அவர்களுடைய எழுத்துகளை படித்து உணர்வு பெறக் கூடிய ஒருவர் அவர்களுடைய சந்தர்பவாதத்தைபார்த்து தடுமாறுவதை அந்த படைப்பாளிகளால் நியாயப்படுத்த முடியாது. இதில் அவர் வால்டேரை ஒத்தே இருக்கிறார். ஆதிக்க வர்கம் தூக்கிபோடும் பொருளாதார வசதிகளை அனுபவித்துகொண்டே ஆதிக்க வர்கத்தை எதிர்த்து  சாமர்த்தியமாக விமர்சனம் செய்வது. ஒருவகையில் இத்தகைய ஆதிக்க எதிர்ப்பு நியாயமாகவே தோன்றுகிறது. வீர வசனம் பேசி ஒன்னுமில்லாமல் போவதைவிட பகையாளியின் குடியை உறவாடி கேடுப்பது தர்க்க ரீதியில் ஏற்புடையதாகவே தோன்றுகிறது.Gibbon-னின் படைப்பை படிப்பவர்கள் அவருடைய எழுத்துக்கும் வாழ்வுக்கும் இடையிலான வித்தியாசத்தை நடைமுறை யதார்த்தைக்கொண்டு சாமார்த்தியமாக அணுகி புரிந்துகொள்வது படிப்பவர்களின் சாமர்த்தியத்தை பொறுத்தது.


சன்னலுக்கு வெளியே நிலவு பார்க்க, நிலவின் பால் போன்ற ஒளி ஜன்னலின் நிழலை நமது முகத்தில் பரப்பிகிடக்க, கனவுகளை அழைக்கும் கண்ணுரக்க நேரத்தில் கரகரத்த மெல்லிய குரலில் Gibbon-னின் படைப்பை ஒருவர் வாசிக்க கேட்பது நிச்சயம் வாழ்வின் அருமையான தருணங்களில் ஒன்றாக இருக்கும். இது நிற்க. வாசிப்பவர் உங்கள் காதலியாகவோ, தாயாராகவோ, மனைவியாகவோ, தாத்தா பாட்டியாகவோ இல்லாமல் உங்கள் தந்தையாக இருக்கட்டும்.கண்ணுரக்க நேரத்தில்  தந்தையின் கரகரத்த குரலில், கண் மூடி கதை வாசிக்க கேட்பது நிச்சயம் மாய புன்னகையை வரவழைக்க கூடியது. உங்கள் கனவில் ரோமானிய பேரரசர்கள் படையெடுத்தால் அதற்கு Gibbon-னே பொறுப்பு.

Comments

  1. Casino City Review 2021: Get a €300 Bonus
    The Casino City review is a fantastic opportunity for new 총판 players. We've thoroughly 바카라 검증 사이트 reviewed 빡촌 후기 the 7 포커 족보 games, bonuses, security and other important 먹튀사이트 aspects. It's

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மந்திரம், மந்திரவாதி.....புத்தகத்தின் வெள்ளோட்ட சிறு துளி....

களப்பிரர் என்னும் கலி அரசர்