அரசுகளின் நித்திரை நிலம்

நைல் நதியின் இடப்பக்க கரையில் பரந்து விரிந்த பாலைவனத்தில் குட்டி மலைமுகடுகளாக எழுந்து நிற்கும் பிரமிடுகள் ( Pyramid) இன்றுவரை காண்பவரையும் அவைகளைப் பற்றி கேட்பவர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தக்கூடியவைகளாக நிலைத்து நின்றபடி இருக்கின்றன. பிரமிடுகளை சுற்றி ஏகப்பட்ட அமானுஷ்ய ( uncanny) சங்கதிகளுக்கு குறைச்சல் கிடையாது, பிரமிடுகளின் உள்ளேயும்தான். மனித முயற்சிகளுக்கு அப்பாற்பட்டது, வேற்றுகிரக வாசிகளின் கைவண்ணம், வானில் தோன்றும் நட்சத்திர கூட்டங்களின் பிரதிபலிப்பு இப்படி பிரமிடுகளின் கட்டுமானங்களைப் பற்றி பல சமாச்சாரங்கள் உண்டு. இவைகளில் எது உண்மையோ இல்லையோ எகிப்தியர்கள் தாங்கள் கடவுளாக வழிபட்ட, வழிபட நிர்பந்திக்கப்பட்ட பாரோக்கள் (அரசர்கள்) ரகசியமாக மேற்கொள்ளும் ஒரு பயணத்துக்கான புனித இடமாக பிரமிடுகளை கண்டார்கள். பொதுபார்வையில் பிரமிடுகள் வெளி உலகத்துக்கு மிக பிரம்மாண்டமான கல்லறைகளாக தோன்ற உண்மையில் பிரமிடுகள் கல்லறைகள் அல்ல. எகிப்தியர்களுக்கு இறப்பிற்கு பிறகான மற்றொரு வாழ்வில் நம்பிக்கை உண்டு. ஏதும் அற்ற ‘ அண்ணாடம் காய்ச்சிகளுக்கே ’ இதில் நம்பிக்கை உண்டு என்றால் பேரரசுகளை கட்டி எழுப்பி,...