"சிற்ப கலை, கட்டிடக் கலை, நாள்காட்டி, எழுத்து வடிவம், இராணுவம் என்று முதிர்ந்த நகர கலாச்சாரம் ஒன்றிற்கான அனைத்து அடையாளங்களையும் கொண்டிருந்தது ஓல்மெக் கலாச்சாரம். ஒன்பதிலிருந்து பதினொரு அடி உயரமும் சுமார் இருபது டன் எடையும் கொண்ட தலை சிற்பங்கள் (Olmec colossal heads) ஓல்மெக் நாகரீகத்தின் சிற்பக் கலை நேர்த்திக்கும் முதர்ச்சிக்கும் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. ஓல்மெக் நாகரீகம் பரவியிருந்த நிலப்பகுதி முழுவதிலுமிருந்து இதுவரை பதினேழு தலை சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. பாசால்ட் பாறையில் செதுக்கப்பட்டிருக்கும் இவைகள் உருவாக்கப்பட்டதற்கான நோக்கமும் காரணமும் இதுவரை பிடிபடவில்லை. ஓல்மெக் நாகரீக மர்மங்களின் பட்டியலில் இதையும் இணைத்துக்கொள்வதை தவிர இப்போதைக்கு ஆய்வாளர்களுக்கு வேறு வழி இருப்பதாக தெரியவில்லை. தலை சிற்பங்களின் உருவ அமைப்புக்களை கொண்டு அவைகள் ஆப்பிரிக்க நீக்ராய்ட் இன மக்களை குறிக்கிறது என்று ஒரு பிரிவு ஆய்வாளர்களும், ஆஸ்டிலராய்ட் (தமிழ்) இன மக்களின் மண்டையோட்டு தன்மைகளை கொண்டிருப்பதாக மற்றொரு பிரிவு ஆய்வாளர்களும் இரு வேறு கருத்துக்களை முன் வைக்கிறார்...